குறப்பிள்ளைகள் என்று பழிப்பாங்க, தண்ணீர் எடுக்க விடமாட்டார்கள் - இலங்கையில் இப்படியும் ஒரு அவலம்
குறிப்பாக இந்தியாவிலிருந்து வந்த பல இனத்தவர்கள், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இன்றும் வாழ்கின்றனர்.
தமது கலை, கலாசாரம், பண்பாடு, மொழி உள்ளிட்ட தமது அடையாளங்களை இன்றும் மறக்காமல், மாற்றிக் கொள்ளாமலும் அதே விதத்தில் அவர்கள் வாழ்கின்றனர்.
அப்படி இலங்கையில் வாழும் வெளி உலகம் அதிகம் அறியாத தெலுங்கு இன மக்களைப் பற்றி பிபிசி தமிழுக்காக களத்தில் சென்று நாம் ஆராய்ந்தோம்.
அம்பாறை மாவட்டத்தின் ஆழையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அளிக்கம்பை பகுதியில் வாழ்ந்து வரும் இவர்கள், தமது தாய்மொழியான தெலுங்கு மொழியையே இன்றும் பேசுகின்றனர்.
ஆழையடிவேம்பு பகுதியிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள காட்டுப்பகுதியில் இவர்கள் கவனிப்பாரற்று வாழ்ந்து வருகிறார்கள்.
இரந்தும் உயிர்வாழ்தல்...
பல்வேறு இன்னல்களை நாளாந்தம் சந்தித்து வரும் இந்த மக்கள் இன்றும் பிச்சை எடுத்தே தமது வாழ்வை நகர்த்துகின்றனர்.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இரண்டாம் ராஜசிங்க மன்னர் வந்த காலப் பகுதியில், இந்த இனத்தவர்கள் இலங்கைக்கு வந்ததாக நம்பப்படுகின்றது.
அதேவேளை, இவர்கள் இலங்கைக்கு நேரடியாக வந்ததாகவும் சில தகவல்கள் கூறுகின்றன.
முருகனை தமது குல தெய்வமாக வழிபடுவதால், இவர்கள் வேடுவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என மற்றுமொரு தரப்பினர் கூறுகின்றனர்.
தொடக்கத்தில் இவர்கள் இந்துக்களாக இருந்த போதிலும், தற்போது இவர்கள் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றி வருகின்றனர்.
இப்படி சுமார் 410 குடும்பங்களைச் சேர்ந்த 2,000 பேர் இந்தப் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.
கல்வி, மருத்துவம், குடிநீர், உரிய வீட்டுத் திட்டங்கள், போக்குவரத்து உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லாத ஒரு நிலையிலேயே, இந்த மக்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்த மக்கள் இன்று நான்காவது தலைமுறையாக கிழக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்து, இடம்பெயர்ந்து பல்வேறு பகுதிகளில் வாழ்ந்துவரும் நிலையில், தற்போது பல ஆண்டுகளாக தேவகிராம் என அழைக்கப்பட்டு வந்த அளிகம்பை அருகே காட்டுப் பகுதியில் வாழ்கின்றனர்.
இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் தமிழ், சிங்கள மொழிகள் பேசப்பட்டு வந்தாலும், இந்த மக்கள் சரளமாக தங்கள் தாய்மொழியான தெலுங்கு மொழியை பேசி வருகின்றனர்.
இலங்கையின் சில பகுதிகளில் தெலுங்கு இனத்தைச் சேர்ந்தவர்கள் இருந்தாலும், அவர்கள் தெலுங்கை மறந்து, தமிழ் அல்லது சிங்கள மொழியையே பேசும் நிலையில் இந்த மக்கள் தமிழ் மொழியை விடவும் தெலுங்கு மொழியை மறக்காமல் சரளமாக பேசி வருகின்றனர்.
தாம் பிச்சை எடுத்தே வாழ்வதாக தெலுங்கு இனத்தைச் சேர்ந்த கந்தசாமி, பிபிசி தமிழிடம் கூறினார்.
குறவன் குறத்தி என்று சொல்லி
''இலங்கைக்கு வந்து, கஷ்டங்களை அனுபவித்து, காணி இல்லை, பூமி இல்லை எங்களுக்கு. எந்தவித ஆதரவும் இல்லை. பாதர்மாரின் (அருட்தந்தை) முயற்சியினால் நாங்கள் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றோம். தொழில்துறை என்று ஒன்றும் இல்லை. பெரும் கஷ்டம். ஊரில் பிச்சை எடுக்கின்றோம். 'பிச்சை எடுத்து அன்றை அன்றையாம் சீவியம் (வாழ்க்கை) கடக்கிறோம்'. கூலித் தொழில்களை சிலநேரம் செய்துதான் வறுமை நீங்குகிறோம். வீடு வாசல் முறையாக இல்லை. குடிநீர் இல்லை. குளிக்க போறதாக இருந்தாலும், இரண்டு மூன்று மைல் போக வேண்டும். பிச்சை எடுத்தால்தான் சில நேரம் சாப்பாடு. இல்லையென்றால், அதுவும் இல்லை" என்கிறார் கந்தசாமி.
''குறவன், குறத்தி என சொல்லி, தமிழ் மக்கள் எங்களை ஒதுக்கி வைத்தார்கள். மக்களை கண்டால் நாங்கள் ஓடி ஒளிவோம்" என தெலுங்கு இன மக்கள், குறிப்பிடுகின்றார்கள்.
தண்ணீர் எடுக்க விடமாட்டார்கள்
''நாங்கள் அளிகம்பைக்கு 90ம் ஆண்டு வந்தோம். காட்டுக்குள்ள தான் இருந்தோம். ரோட்டுல (வீதியில்) யாரை கண்டாலும், எங்கட ஆட்கள் ஓடி ஒளிவார்கள். ஏனென்றால், இவங்களுக்கு நாகரீகம் தெரியாது. தமிழ் தெரியாது. ஒன்றும் தெரியாது. தெலுங்கு மட்டும்தான் கதைக்கிறார்கள். பாதிரியார் கோவில் கட்டி கொடுத்து, கல் வீடு கட்டிக் கொடுத்தார். ஆண்டு ஐந்து வரையும் படித்தோம். எங்கட அம்மா, அப்பா எல்லாம் இங்க படித்தார்கள். 90ம் ஆண்டு பிரச்சினையில்தான் நாங்கள் திருக்கோவில் போனோம். அங்கையும் எங்கள கழிச்சு தான் (ஒதுக்கி) வைத்தார்கள். தண்ணீர் எடுக்க போனால், தண்ணீர் எடுக்க விட மாட்டாங்க.
குடிக்கவும் தண்ணீர் இல்ல. தெரியாமல்தான் தண்ணீர் கொண்டு வருவோம். அப்படி கஷ்டப்பட்டு வாழ்ந்து, அதற்கு பிறகு பாதரோட கதைத்து, பாடசாலை கட்டிக் கொடுத்து, அதற்கு பிறகு இங்கே குடியேத்தினார்கள். 2001ம் ஆண்டு நாங்களே வந்தோம். யாரும் கூட்டிக்கொண்டு வரவில்லை. பாடசாலைகளை நடத்த யானைக்கு பயந்து யாரும் வரமாட்டார்கள். யானை பிரச்சினை காரணமாக ஆசிரியர்கள் வரமாட்டார்கள்.
கடைசியாக ஆண்டு 8 வரை படித்தோம். இப்படி கஷ்டப்பட்டு, மூன்று வருடத்திற்கு முன்பு இருந்து தான் 11ம் ஆண்டு வரை பாடசாலை நடக்குது. தமிழ் ஆட்கள் எல்லை ஒதுக்கினார்கள். ஏனென்றால், நாங்கள் குறவன், குறத்தி என்று சொல்லி, அவங்க உயர்ந்த ஜாதி என்றதே அவர்களின் எண்ணம். ஆனால் இப்ப எங்க கிட்ட சாப்பிடுகிறவர்கள் இருக்கிறாங்க," என தெலுங்கு இனப் பெண்ணொருவர் பிபிசி தமிழிடம் கூறினார்.
குறப்பிள்ளைகள் என்று பழிப்பாங்க...
இவ்வாறு பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில், பல சவால்களை எதிர்நோக்கி, இன்று பல்கலைக்கழகம் வரை சென்ற தெலுங்கு பெண்ணான நல்லனன் சுகன்யா, பிபிசி தமிழுக்கு தனது அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டார்.
''அளிக்கம்பை பிள்ளைகள் குறப் பிள்ளைகள் என்று பழிப்பாங்க. குறத்தி என்று பழிப்பாங்க. அப்போ எங்களுக்கு ஒரு கவலை. எங்களை எல்லாரும் வேறு மாதிரி பிரித்து பார்க்கின்றார்களே. நாங்களும் இந்த சமூதாயத்தில் படித்து, ஒரு இடத்திற்கு வர வேண்டும் என்று ஒரு ஆசை. நான் இங்கதான் வந்து படித்தேன். நீங்கள் எல்லாம் அப்படி கவலைப் படக்கூடாது என்று ஒரு நாள் சார் சொன்னார். நீங்கள் அப்படி இல்லை. நீங்கள் சோழர் பரம்பரையை சேர்ந்தவர்கள் என்றார்" என்று கூறிய சுகன்யா,
பிச்சை எடுப்பது குறித்து பழித்தவர்கள் தான் நன்கு படித்து முதல் மதிப்பெண் எடுத்த பிறகே தன்னுடன் சேர்ந்தார்கள் என்றும் பகிர்ந்துகொண்டார்.
Post a Comment