Header Ads



ஆட்டோக்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாபம்


இந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் புதிதாக 19 முச்சக்கர வண்டிகள் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.


மேற்படி எட்டு மாத காலப்பகுதியில் ஏனைய வகைகளில் சுமார் 15,000 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.


கடந்த 2021ஆம் ஆண்டில் 2,093 முச்சக்கர வண்டிகளும், 2020ஆம் ஆண்டில் 7,150 முச்சக்கர வண்டிகளும், 2019ஆம் ஆண்டில் 15,490 முச்சக்கர வண்டிகளும், 2018ஆம் ஆண்டில் 20,063 முச்சக்கர வண்டிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.


மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அறிக்கைகளின்படி, 2011 முதல் 2020 வரையான வருடாந்தம் சராசரியாக 50,000 புதிய முச்சக்கர வண்டி பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


2011ஆம் ஆண்டிலேயே அதிகூடிய அளவில் முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த ஆண்டில் 138,426 புதிய முச்சக்கர வண்டிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இரண்டாவதாக அதிகளவில் முச்சக்கரவண்டி பதிவு செய்யப்பட்ட ஆண்டாக 2015ஆம் ஆண்டு காணப்படுகிறது. அவ்வாண்டில் 129,547 முச்சக்கர வண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.


நாட்டில் தற்போது 1,184,339 பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளும், 4,833,928 பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களும் உள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.


இந்த ஆண்டின் கடந்த எட்டு மாதங்களில் 6,209 மோட்டார் சைக்கிள்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 964 கார்களும் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.