Header Ads



கீழ்த்தரமாக விமர்சிக்க வேண்டாம், ராஜபக்சர்களின் எழுச்சி விரைவில் நடக்கும், எமது அரசியலுக்கு ஒருபோதும் முடிவு கட்ட முடியாது


ராஜபக்சர்களை கீழ்த்தரமாக விமர்சிக்க வேண்டாம். ராஜபக்சர்களின் எழுச்சி விரைவில் நடக்கும். உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளின் சூழ்ச்சிகளால் ராஜபக்சர்களின் அரசியல் பயணத்துக்கு ஒருபோதும் முடிவு கட்ட முடியாது என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இலங்கை வருகை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.


மேலும் தெரிவிக்கையில்,“ராஜபக்சர்கள் தோற்கவும் இல்லை,தோற்கடிக்கப்படவும் இல்லை. சுயமாகப் பதவிகளிலிருந்து விலகிய அவர்கள் விரைவில் மீளெழுச்சி பெறுவார்கள்.


எதிரணியினர் ராஜபக்சர்களை கண்டபடி வசைபாடுகின்றனர். குறைத்து மதிப்பிடுகின்றனர். ராஜபக்சர்களின் அருமையும், திறமையும், எமக்கு ஆணை வழங்கிய மக்களுக்கு நன்றாக புரியும். உள்நாட்டு, வெளிநாட்டு சூழ்ச்சிகளால் ராஜபக்சர்களின் அரசியலுக்கு முடிவு கட்ட முடியாது.


தேர்தல் ஒன்று நடந்தால் அதில் ராஜபக்சர்களினதும் மொட்டு கட்சியினரினதும் கைகள் மீண்டும் ஓங்கும். அந்த தேர்தலில் எதிரணியினர் வழமை போன்று தோல்வியையே தழுவுவார்கள்.


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியதை நான் வரவேற்கின்றேன். தனது மீள் அரசியல் பிரவேசம் தொடர்பில் அவர் சிறந்த முடிவை எடுப்பார்.” என கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.