முஸ்லிம்களுக்கு எதிரான நிரந்தர அடையாளச் சின்னம் மஜ்மாநகர், இதனை பாதுகாத்து, அதை புனித பூமியாகக் கருத வேண்டும்
- கலாநிதி அமீரலி -
ஜேர்மனியின் ஆஸ்விற்ஸ் சித்திரவதை முகாம் யூத இனத்துக்கு ஹிட்லர் வழங்கிய மயான பூமி. இனவெறி கொண்ட ஹிட்லரின் யூத இன ஒழிப்பின் நினைவுத் தலமாக அது இன்றும் என்றும் விளங்கும். இன்று வாழும் யூத மக்களும் இனிமேல் வாழப்போகும் யூத சந்ததிகளும் கண்ணீருடன் தரிசித்து மௌன அஞ்சலி செலுத்தும் ஒரு வரலாற்றுத் தலம் அது. ஜேர்மனிக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கும் அது ஒரு தரிசனத் திடலாக மாறியுள்ளது. அவ்வாறு தரிசனம் செய்யும் ஒரு மயான பூமியாக இலங்கை முஸ்லிம்களுக்கு ஓட்டமாவடியின் மஜ்மாநகர் மாறுமா? இக்கட்டுரை அதைப் பற்றிய சில சிந்தனைகளை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறது. அண்மையில் ஊடகவியலாளர்களான முகம்மது பைரூஸ், ஆயிஷா நாஸீம், அமலினி டி ஸைரா ஆகியோர் வெளியிட்ட மஜ்மாநகர் பற்றிய ஒர் ஆய்வறிக்கையே இதனை எழுதத் தூண்டியது. அவர்களுக்கு எனது நன்றிகள்.
இனவாதப் புற்றுநோய்
இனவாதம் சுதந்திர இலங்கையின் அரசியல், சமூகப் புற்றுநோய். அதை உண்டாக்கி ஆறாது வளர்த்தவர்கள் அரசியல்வாதிகளும் அரசியலுக்குள் நுழைந்த பௌத்த குருமாரும் அவர்களின் அடிவருடிகளும். அந்த அரசியல்வாதிகளுள் முஸ்லிம்களும் அடங்குவர். அந்தப் புற்றுநோய்தான் இன்றைய அரசியல் நிலைகுலைவுக்கும் பொருளாதாரச் சீரழிவுக்கும் சமூக அமைதியின்மைக்கும் பிரதான காரணம் என்பதை வரலாறு உணர்த்தும். அந்த உண்மையை உணர்ந்த ஒரு புதிய இளம் சந்ததி இன்று விழிப்புற்றெழுந்து புரையோடிய புற்று நோயை அறுவை சிகிச்சையால் அகற்றி நாட்டுக்கு மறுவாழ்வு வழங்க முன்வந்துள்ளது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒரு விடயம். அது ஒரு புறமிருக்க, இனவாதம், அதிலும் குறிப்பாகச் சிங்கள பௌத்த பேரினவாதம் எவ்வாறு கடந்த இரண்டு வருடங்களுக்குள் ஒரு பேரலையாக எழுந்து முஸ்லிம்களைக் குறிவைத்து வீசியது என்பதை சுருக்கமாக முதலில் விளக்க வேண்டியுள்ளது.
ராஜபக்சாக்களின் அரசியல் மறுவாழ்வு
2005 இலிருந்து பத்து ஆண்டுகளாக இலங்கையின் ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்சவும் பாதுகாப்புச் செயலாளராக அவரது இளையோன் கோத்தாபயவும் இணைந்து செயற்பட்டபின், 2015 இல் நல்லாட்சி அரசு என்ற பெயரில் மைத்திரிபால சிரிசேனவை ஜனாதிபதியாகவும் ரணில் விக்கிரமசிங்ஹவை பிரதமராகவும் கொண்ட ஓர் ஆட்சியை மக்கள் தெரிவு செய்தனர். அந்தச் சோடியின் ஆட்சி போற்றத்தக்கவாறு எதனையும் சாதிக்காமல் 2019 இல் முற்றுப் பெறவே ராஜபக்ச குடும்பம் மீண்டும் அரசியலில் குதித்தது. இந்த மறுவாழ்வில் மூத்தவன் பிரதமராகவும் இளையவன் ஜனாதிபதியாகவும் களமிறங்கினர். அவர்களின் தேர்தல் பிரச்சாரத்தின் அடிநாதமாக அமைந்தது சிங்கள பௌத்த பேரினவாதமே. தமிழர்களின் திமிரையும் எதிர்ப்பையும் முறியடித்துவிட்டோம், இப்போது இஸ்லாமியத் தீவிரவாதம் சிங்களவர்களுக்கும் பௌத்தத்துக்கும் ஓர் எதிரியாக எழுந்துள்ளது, ஆகவே அதனையும் தோற்கடிக்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு எங்களுக்குச் சந்தர்ப்பம் தாருங்கள் என்ற தோரணையிலேயே பொதுஜன பெரமுன கட்சியினர் வீடுவீடாகச் சென்று பெளத்த சிங்களவர்களின் வாக்குகளைத் திரட்டினர். அந்தப் பிரச்சாரத்துக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது சஹ்ரானின் தேசிய ஜமாஅத் கும்பல் 2019 இல் அரங்கேற்றிய ஈஸ்டர் குண்டு வெடிப்புச் சம்பவம். அந்தக் கும்பலை யார் யார் எதனைக் குறிவைத்து இயக்கினர் என்பது பற்றிய உண்மைகள் இதுவரை வெளிவராததன் மர்மம் என்ன? இருப்பினும், ஈற்றில் ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபயவும் பொதுத் தேர்தலில் மகிந்தவின் கட்சியினரும் அமோக வெற்றியை ஈட்டியதோடு ராஜபக்ச குடும்ப அரசியலின் அடுத்த அத்தியாயம் ஆரம்பமாயிற்று. அதன் பிறகு நடந்ததென்ன?
இஸ்லாமோபோபியாவின் மறுமலர்ச்சி
இஸ்லாத்தைப்பற்றிய அச்சமும் பயமும் கலந்த ஒரு பிரமையே இஸ்லாமோபோபியா. அந்தப் பிரமை பல தசாப்தங்களின் பின் இலங்கையில் மறுமலர்ச்சி பெற்றது ராஜபக்ச ஆட்சியிலேயே. 2009 இல் தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாகத் தோற்கடித்த பின்னர், வெற்றிமேடையில் ஏறிநின்று பேசிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ‘இனிமேல் இந்த நாட்டில் சிங்களவர்களோ தமிழர்களோ முஸ்லிம்களோ இருக்கமாட்டார்கள், இலங்கையர் மட்டுமே இருப்பர்’ என்று கூறியபோது அதை அங்கிருந்த எல்லோரும் ஆதரிக்கவில்லை என்பதை சிதறலாய் எழுந்த கரகோஷங்கள் பறைசாற்றின. அதன் பிறகு அவர் அந்தக் கருத்தை வேறு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிப்படுத்தவில்லை. அதற்குக் காரணம் சிங்கள பௌத்த பேரினவாதிகளின் கருத்தில் இலங்கையில் தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் இடமில்லை என்பதே.
இலங்கையை ஒரு தனிச் சிங்கள பௌத்த நாடாக மாற்ற வேண்டும் என்ற சிந்தனை 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே அநகாரிக தர்மபால போன்ற தலைவர்களால் வித்திடப்பட்டது. நாட்டைவிட்டு முஸ்லிம்களை அரேபியாவுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோஷமும் அவரிடமிருந்தே ஆரம்பமாகியது. முஸ்லிம்களை இலங்கையின் யூதர்களென்றும் சில சிங்களப் பத்திரிகைகள் அக்காலத்தில் விபரித்தன. அந்தச் சிந்தனையின் விளைவே 1915ஆம் ஆண்டு வெடித்த சிங்கள -முஸ்லிம் இனக்கலவரம். அதே போன்ற சிந்தனை 2009க்குப் பின்னர் மீண்டும் புத்துயிர் பெறலாயிற்று. 2014ல் வெடித்த அளுத்கம கலவரம் அந்தச் சிந்தனையின் எதிரொலியே. அதனைத் தடுப்பதற்கு அப்போது பாதுகாப்புச் செயலாளராகக் கடமையாற்றிய கோத்தாபய ராஜபக்ச எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை. அந்தக் கலவரத்தைத் தொடர்ந்து அம்பாறை, திகன, கண்டி, கட்டுகஸ்தோட்டை என்றவாறு முஸ்லிம்களுக்கெதிரான வன்செயல்கள் திட்டமிட்டவாறு அவிழ்த்துவிடப்பட்டன. பொதுபல சேனா, ராவண பலய போன்ற பேரினவாத இயக்கங்கள் அக்கலவரங்களை முன்னின்று நடத்தின. இவையெல்லாம் இஸ்லாமோபோபியாவின் எதிரொலிகள் என்பதை மறுக்க முடியாது. ஆனால் அவை கோத்தாபய ராஜபக்ச ஜனாதியாகுமுன் நடைபெற்றவை. அவர் ஜனாதிபதியாகியபின் என்ன நடந்தது?
இஸ்லாமோபோபியாவின் உச்சம்
கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாக வந்ததன் பின்பே இஸ்லாமோபோபியா ஆட்சி பீடத்தின் அங்கீகாரத்தை பெற்றது எனக்கருதலாம். 2020 இல் கேகாலை மாவட்டப் பள்ளிவாசலொன்றின் வளாகத்தினுள் இரவோடிரவாகப் புத்தர் சிலை ஒன்று தோன்றி அது நீதிமன்றத்தின் அங்கீகாரத்தையும் பெற்றமை ஜனாதிபதியின் கண்காணிப்பின்கீழ் என்பதை மறக்கலாமா? மகர சிறைச்சாலையிலிருந்த பள்ளிவாசலை சிறைக் காவலர்கள் அபகரித்து அதை அவர்களின் ஓய்வுநேரக் களியாட்டக் கூடமாக மாற்றியபோது ஜனாதிபதி கைகட்டிநின்றதைத்தான் மறக்கலாமா? கூரகலையில் தப்தர் ஜெய்லானியின் ஒரு பகுதியை இடித்து நொறுக்கியபின் அந்த இடத்தில் பௌத்த விகாரையை விரிவாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டதும் இந்த ஜனாதிபதியின் அனுமதி இல்லாமலா? அவை மட்டுமா? இஸ்லாமிய நூல்களின் இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டதும் மதரசாக்களை அரசாங்கம் கையகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதும் அவரின் ஆட்சியின்கீழ் அல்லவா?
இவற்றையெல்லாம் விட கொவிட் கொள்ளை நோயை இலங்கைக்குக் கொண்டுவந்தவர்கள் தப்லீக் பிரச்சாரத்துக்குச் சென்றுவந்த முஸ்லிம்களென்று பேரினவாதிகள் கதையொன்றை அவிழ்த்துவிட, அதனைத் தொடர்ந்து ஒரு மண்ணியல் பேராசிரியையின் விநோதமான அபிப்பிராயத்தை ஆதாரமாகக் கொண்டு, அந்தக் கொள்ளை நோயால் மரணித்தவர்களை மண்ணுக்குள் புதைத்தால் மண்ணடியிலுள்ள நீர் வழியாக அந்த நோய் பரவுமென்று முடிவுகண்டு அந்த உடல்களை தீயிட்டுக் கொழுத்த வேண்டுமென பங்குனி மாதம் 2020 இல் வர்த்தமானிமூலம் ஜனாதிபதி ஆணையிட்டார். இதனை அறிந்த மருத்துவ நிபுணர்களே அதிர்சிக்குள்ளானார்கள். உலக சுகாதார நிறுவனம் உடனடியாக அதனை கண்டித்தது.
அந்தப் பேராசிரியையின் போலி விஞ்ஞானக் கண்டுபிடிப்பு ஒரு புறமிருக்க, சுமார் 1400 வருடங்களுக்கும் மேலாக உலக முஸ்லிம்களின் மத ஆசாரங்களிலொன்று, அதாவது மரணித்தவர்களை பூமிக்குள் சகல மார்க்கச் சடங்குகளுடன் அடக்கவேண்டும் என்ற நியதி இலங்கையிலே இஸ்லாமோபோபியாவின் ஆதிக்கத்தால் சட்டத்தின் மூலம் ஒரே நொடியில் நொறுக்கப்பட்டது. இந்த மனித உரிமை மீறல் இலங்கையிலேதான் முதன் முதலில் நடைபெற்றது என்பதையும் அறிதல் வேண்டும். எனவேதான் ஜனாதிபதி கோத்தாபயவின் ஆட்சியில் இஸ்லாமோபோபியா அதன் உச்சத்தை எட்டியது என்று கூறுவதில் எந்தத் தவறும் இல்லை.
ஜனாதிபதியின் அதிகாரவலுவை அதிகரிப்பதற்காக நிறைவேற்றப்பட்ட அரசியற்சட்டத் திருத்தத்துக்கு வாக்களித்த உள்நாட்டு முஸ்லிம் பிரபலங்கள் பூதவுடல்களின் கட்டாய தகனத்தைக்கண்டு முதலைக்கண்ணீர் வடித்துக்கொண்டு கைகட்டி வாய்புதைத்து நிற்க, அதனைக்கண்ணுற்ற வெளியுலகு கண்டனம் எழுப்பத் தொடங்கியது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் செயலகம் மிகவும் காரசாரமான கண்டனங்களை முன்வைத்தது. உலக முஸ்லிம் அமைப்பும் சேர்ந்து கண்டித்தது. உலக அரங்கில் இலங்கையின் பெயர் நாற்றமடிக்கத் தொடங்கவே ஒரு வருடத்தின் பின்னர் தகனக் கட்டளை வாபஸ் பெறப்பட்டு அடக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அந்த அனுமதியின் விளைவாகப் பிறந்ததே மஜ்மா நகர் மயானம்.
மஜ்மா நகர்: இஸ்லாமோபோபியாவின் ஆஸ்விற்ஸ்
மண்ணியல் பேராசிரியையின் தொற்றுநோய் நிபுணத்துவம் போலி என்பதை உலகமே சுட்டிக்காட்டியபோது அந்த நிபுணத்துவத்தை நேரடியாக உதறித்தள்ளாமல் இஸ்லாமோபோபியாவுக்கு வக்காலத்து வாங்கும் போக்கில் அங்கீகரிக்கப்பட்டதே அரசின் புதிய முடிவு. இதனை அரசின் விஷப்பரீட்சை ஒன்று அதன் அரங்கின் பின்புறத்தில் அரங்கேற்றப்பட்டதுபோல் தோன்றவில்லையா? கொவிட் நோயால் மரணித்த உடல்களை எந்த மையவாடியிலும் அடக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்ளாமல் நாட்டின் வரண்ட பகுதி ஒன்றில்மட்டுமே அடக்கலாம் என்று கருதி கிழக்கிலங்கையின் ஓட்டமாவடியை அரசு தெரிவு செய்தது.
எனினும், ஓட்டமாவடிப் பிரதேச சபை அடையாளம்கண்ட ஒரு பகுதியை ஏற்காமல் இராணுவமும் அரசின் செயலாளர் ஒருவரும் சேர்ந்து விவசாயிகளும் கால்நடை வளர்ப்போரும் பயன்படுத்தும் மஜ்மா நகர் நிலத்தில் 21.5 ஏக்கர் நிலத்தை மயான பூமியாக மாற்றினர். இந்த நிலம் வரண்ட பூமியல்ல என்பதை உணர்ந்தால் அதனை எதற்காகத் தெரிவுசெய்தனர் என்பதன் இரகசியம் முஸ்லிம் மக்களின் வாழ்வாதாரங்களை நசுக்க வேண்டும் என்ற இஸ்லாமோபோபியரின் எண்ணத்தைப் புலப்படுத்துவதாக இல்லையா?
ஒதுக்கப்பட்ட அந்த நிலத்தில் இதுவரை 10 ஏக்கர் பயன்படுத்தப்பட்டுள்ளது. பங்குனி 2021க்கும் பங்குனி 2022க்கும் இடையில் 3600க்கும் அதிகமான பூதவுடல்கள் அங்கே அடக்கப்பட்டுள்ளன. அவற்றுள் மிகப்பெரும்பான்மை முஸ்லிம்களின் உடல்களாகும். இலங்கையின் எந்த இடத்தில் ஒரு முஸ்லிம் கொவிட் நோயால் மரணித்தாலும் அந்த உடலை இராணுவம் தன் செலவில் கொண்டுவர அந்த உடலுக்குரிய உறவினர்களுள் ஓரிருவரே தமது சொந்தச் செலவில் மஜ்மா நகர் வந்து அதற்கான இறுதி மரியாதைகளைச் செய்யும் ஒரு துர்ப்பாக்கிய நிலையை இந்தப் புதிய கட்டளை ஏற்படுத்தியது. இதைவிடவும் கொடூரமான ஒரு மனச்சித்திரவதை ஒரு குடும்பத்துக்கு இனிமேல் ஏற்படுமோ தெரியாது. ஆனால் இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பதை மறுக்க முடியாது.
எனவேதான் மஜ்மா நகர் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராகப் பேரினவாதிகளால் திட்டமிட்டு அவிழ்த்துவிடப்பட்ட இஸ்லாமோபோபியாவின் நிரந்தர அடையாளச் சின்னமாக இன்று மாறியுள்ளது. இந்த மயான பூமியை முஸ்லிம்கள் பாதுகாத்து அதை ஒரு புனித பூமியாகக் கருதி அதன் சோக வரலாற்றை சந்ததி சந்ததியாகத் தமது வாரிசுகளுக்கும், சகோதர இனங்களுக்கும், வெளியுலகுக்கும் ஞாபகப்படுத்த வேண்டும். அதைத்தான் ஜேர்மனியின் ஆஸ்விற்ஸ் யூதமக்களுக்காகச் செய்து கொண்டிருக்கிறது. உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் மஜ்மா நகர் மயானம் மௌன அஞ்சலி செலுத்தும் தலமாக மாற வேண்டும்.
ஓர் எச்சரிக்கை
மகர சிறைச்சாலைப் பள்ளிவாசல் பறிபோய் மூன்று வருடங்களாகின்றன. அது பறிபோனபோது அமைச்சராய் இருந்த நிமல் சிறிபால டி சில்வா அதுபற்றிப் பேசுகையில் அப்பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்த்துவைப்பதாகக் கூறினார். அந்தத் தீர்வின் லட்சணத்தை இனியும் சொல்ல வேண்டுமா? இப்போது அங்குள்ள முஸ்லிம் மையவாடியும் பறிபோகும் ஆபத்துள்ளதாக அறிகிறோம். இதுவும் இஸ்லாமோபோபியர்களின் திட்டமிட்ட ஒரு சதியோ என எண்ணத் தோன்றுகிறது. அந்த ஆபத்து படிப்படியாக நாட்டின் ஏனைய பகுதிகளின் மையவாடிகளுக்கும் ஏற்படுமாயின் காலவோட்டத்தில் மஜ்மா நகரே அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே முஸ்லிம் மையவாடியாக மாறுமோ?
பேரினவாதம் தலைவிரித்தாடும் வரை சிறுபான்மை இனங்களுக்கு நிம்மதியே இருக்காது. ஒரு புதிய ஜனாதிபதியின்கீழ் அரசு இயங்கினாலும் அவரும் பேரினவாதக் கும்பலின் சிறைக்கைதியாகவே இருக்கிறார் என்பதை உணரவேண்டும். எனவே இனவாதப் புற்று நோயை அறுவை சிகிச்சை செய்து அகற்றாதவரை ஜனநாயகம் என்பது ஓர் அரசியல் பம்மாத்தாகவே இருக்கும். அதனாலேதான் இளைய தலைமுறையினர் “கோத்தாவே வீட்டுக்குப் போ” என்ற கோஷத்துடன் தமது போராட்டத்தை ஆரம்பித்து அரசியலில் அடிப்படை மாற்றம் தேவை எனக் கோரினர். அந்தப் போராளிகளை சிறையில் அடைப்பதால் போராட்டம் ஓய்ந்துவிட்டதாகக் கருதமுடியாது. அது மீண்டும் வேறு தோற்றத்தில் உருவாகலாம். அவ்வாறு உருவாகும்போது சிறுபான்மை இனங்கள் அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் அதற்குப் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அந்தப் போராளிகளின் வெற்றியிலேதான் முஸ்லிம்களுக்கு சுபீட்சமுண்டு. இதை முஸ்லிம் அரசியற் பிரபலங்கள் உணர்வார்களா? – Vidivelli
Post a Comment