Header Ads



ஜனாதிபதியிடம் பப்ரல் தொடுத்துள்ள அதிரடிக் கேள்விகள்


திறமையின்மை அடிப்படையில் அரச ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க முன்வந்த ஜனாதிபதி, அதிக எண்ணிக்கையிலான அமைச்சர்களை நியமிப்பதற்கு எவ்வாறு அனுமதியளித்தார் என சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாடு (பஃப்ரல்) கேள்வி எழுப்பியுள்ளது.


நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளை மகிழ்விப்பதற்கும் அரசியல் அதிகாரத்தை தக்க வைப்பதற்கும் அதிக எண்ணிக்கையிலான அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களை நியமிப்பதால் அதிக செலவுகள் ஏற்படும் என்று தெரிவித்துள்ளது. 


அமைச்சர்கள் தங்களுக்கு உரிய சம்பளத்தை மாத்திரமே ஏற்றுக்கொள்வார்கள் என அரசாங்கத்தின் பிரதம கொறடா தெரிவித்துள்ள போதும் அதனை நிறைவேற்றுவது கடினமான விடயம் என அமைச்சர்கள் பலர் தெரிவித்துள்ளதாக பஃப்ரல் சுட்டிக்காட்டியுள்ளது.


அமைச்சர் ஒருவருக்கு 15க்கும் மிகாத தனிப்பட்ட அதிகாரிகள் இருக்கவேண்டும் மற்றும் ஊழியர்களுக்கு 6 வாகனங்களும் ஒவ்வொரு வாகனத்துக்கும் 600 லீற்றர் டீசல், 750 லீற்றர் பெற்றோல் என்பன வழங்கப்படும் என்று ஜனாதிபதியின் செயலாளர் சுற்றறிக்கை விடுத்துள்ளார்.


குறித்த சுற்றறிக்கை மூலம் அமைச்சர் மற்றும் ஊழியர்களின் தொடர்பாடல் செலவை அரசாங்கம் ஏற்கும் என்பதுடன், குறிப்பிட்ட அளவுக்கு அமைச்சர்களின் சிறப்புரிமைகளை மட்டுப்படுத்தியுள்ளதாக பஃப்ரல் கோடி காட்டியுள்ளது.


ஊழல் குற்றவாளிகளை அமைச்சரவைக்கு நியமித்ததையும் கண்டித்துள்ள பஃப்ரல், அதன் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கும் செய்தி குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளது.


பொது மக்கள் பிரதிநிதிகளின் செயற்திறனை அளவிடுவதற்கான அமைப்பு ஒன்றை உருவாக்குவதில் கவனம் செலுத்துமாறு அந்த அமைப்பு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

No comments

Powered by Blogger.