அமைச்சுப் பதவிகள் கிடைக்காமையால், பொதுஜன பெரமுன எம்.பிக்கள் கவலை
தமக்கு இதுவரை அமைச்சுப் பதவிகள் கிடைக்கவில்லை என்ற காரணத்தினால், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சில எம்.பிக்கள் கவலையடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவை அமைச்சுப் பதவிகளுக்காக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்12 உறுப்பினர்களின் பெயர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பல வாரங்களுக்கு முன்னர் அனுப்பப்பட்டுள்ள போதும், பதவிகள் கிடைக்காமை குறித்து எம்.பிகள் மிகவும் கவலையடைந்துள்ளதாக அறியமுடிகிறது.
30 பேர் கொண்ட அமைச்சரவைக்கு 18 பேர் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 12 பேர் நியமிக்கப்பட உள்ளனர். அதற்காக பொதுஜன பெரமுன 12 பேரின் பெயர்களை அனுப்பியுள்ளது.
எனினும், ஏனைய கட்சிகளும் சில அமைச்சுப் பதவிகளை வழங்க வேண்டியிருப்பதால் அது 8 ஆகக் குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏனைய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏ.எல்.எம். அதாவுல்லா, ஜீவன் தொண்டமான், வஜிர அபேவர்தன, துமிந்த திஸாநாயக்க ஆகியோருக்கும் அமைச்சரவை அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக அறியமுடிகிறது.
ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் விஜயத்தை முடித்துக்கொண்டு எதிர்வரும் 30 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாடு திரும்பிய பின்னர் அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment