Header Ads



திரிபோஷாவில் பிரச்சினை இருக்கிறது - ஒப்புக் கொண்டார் சுகாதார அமைச்சர்


திரிபோஷா தொடர்பில் பிரச்சினை இருப்பதை தானும் ஒப்புக்கொள்வதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல  பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


ஆனால் சம்பந்தப்பட்ட திரிபோஷா தொகையில் எஃப்ளடொக்சின் இருப்பது ஒன்றரை மாதங்களுக்கு முன்பே உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறுகிறார்.


எவ்வாறாயினும், கடந்த ஓகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி திரிபோஷா கையிருப்பில் எஃப்ளடொக்சின் கலந்திருந்தமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அதன் விநியோகம் இம்மாதம் 6 ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.


இதேவேளை, கர்ப்பிணிப் பெண்களுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் வழங்கப்படும் சில திரிபோஷா மாதிரிகளில் எஃப்ளடொக்சின் கலந்திருப்பதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் கடந்த 20ஆம் திகதி வெளியிட்ட தகவலை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று பாராளுமன்றில் நிராகரித்தார்.


எவ்வாறாயினும், நாகொட தேசிய சுகாதார நிறுவகத்தினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது, ​​திரிபோஷாவில் எஃப்ளடொக்சின் அளவு குறிப்பிட்ட அளவை விட பாரியளவில் கலந்துள்ளதாக உறுதிப்படுத்தும் 6 பரிசோதனை அறிக்கைகளை நேற்று (21) நாட்டுக்கு வெளிப்படுத்தியிருந்தது.


சுகாதார அமைச்சின் உணவுப் பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகமும் நேற்று அறிக்கைகளை உறுதிப்படுத்தியதோடு, சில மாதங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் திரிபோஷாவில் எஃப்ளடொக்சின் கலந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.