Header Ads



பத்திரிகை விற்பனை வீழ்ந்தது - கறுப்புச் சந்தையை நாடும் நிறுவனங்கள்


மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் பத்திரிகை விற்பனை குறைவடைந்துள்ளதாக பத்திரிகை நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.


எவ்வாறாயினும் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் பத்திரிகைகளின் விற்பனை ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளதாக அந்த நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன. 


டொலர் நெருக்கடி மற்றும் நாட்டின் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, பத்திரிக்கைகளை அச்சிட பயன்படுத்தும் காகித இறக்குமதிக்கான நாணய கடிதத்தை திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், சில நிறுவனங்கள் முன்னதாக இறக்குமதி செய்த காகிதத்தை கொண்டு செய்தித்தாள்களை அச்சிட்டு வருகின்றன. 


இந்தவிடயம் தொடர்பில், லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவரும், வெகுசன ஊடக அமைச்சின் செயலாளருமான அனுஷ பெல்பிட்டவிடம் Hiru வினவியது, அதற்கு பதிலளித்த அவர், மேலும் ஐந்து மாதங்களுக்கு பத்திரிகைகள்,  அச்சிடுவதற்குத் தேவையான காகிதங்கள் தமது நிறுவனத்திடம் இருப்பதாகத் குறிப்பிட்டார். 


ஆனால் சில நிறுவனங்கள் தற்போது, பத்திரிகை அச்சிட தேவையான காகிதத்தினை கறுப்புச் சந்தை மூலம் கொள்வனவு செய்ய எதிர்ப்பார்த்துள்ளன.


இதனால் காகித விலை மேலும் அதிகரிக்ககூடும் என அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பத்திரிகைகளை அச்சிடுவதற்கான செலவு அதிகமாக உள்ளதாகவும், எரிபொருள் விலையேற்றம் காரணமாக போக்குவரத்துச் செலவும் அதிகரித்துள்ளதாகவும் செய்தித்தாள் நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன. முன்னர் பல பத்திரிகை பதிப்புகள் வெளிவந்த போதிலும், தற்போது மட்டுப்படுத்தப்பட்ட அளவில் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. 


30 ரூபாவாக இருந்த நாளாந்த செய்தித்தாள்களின் விலை கடந்த ஜூன் மாதம் 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 50 ரூபாவரை உயர்த்தப்பட்டது. அத்துடன், ஞாயிறு பத்திரிகை ஒன்றின் விலையானது 150 ரூபாவாக உயர்த்தப்பட்டது. 


செய்தித்தாள்களின் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ள போதிலும், மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால், அவர்களது தேவைகளில் பத்திரிகைகளை கொள்வனவு செய்வதில்  முன்னுரிமை பெறுவதில்லை என பத்திரிகை நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. 


இந்தநிலைமையால் ஒட்டுமொத்த பத்திரிக்கைத் துறையும் பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக பத்திரிகை நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.