முஸ்லிம்கள் பல்வேறு மனித உரிமை மீறல்களை எதிர்நோக்கி வருகின்றனர் - புலம்பெயர் இலங்கை முஸ்லிம்கள் சுட்டிக்காட்டு
அத்தோடு, நல்லிணக்க விவகாரங்களையும் உறுதிசெயயும் விதமான நடவடிக்கைகளை தொடர்ந்தும் அமுலாக்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செப்டம்பர் 12 முதல் ஒக்டோபர் 7ம் திகதிவரை இடம்பெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவின் 51வது கூட்டத்தொடரில் இலங்கையின் மனித உரிமை விவகாரங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
46/1 மனித உரிமை ஆணைக்குழுவின் முன்மொழிவுகள் காலாவதியாகின்ற சூழ்நிலையில் குறித்த முன்மொழிவுகளை மீளவும் ஒரு புதிய பிரேரணையாக பிரித்தானியா முன்வைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் பொதுவான அறிக்கையிடல் மற்றும் விஷேட பிரதிநிதிகளின் அறிக்கையிடல் என்பன தற்போது வெளியிடப்பட்டிருக்கின்றன. A/HRC/51/5 மற்றும், A/HRC/51/26/Add.1 என்பனவே அவ்வறிக்கைகளாகும். இவற்றின் அடிப்படையில் சர்வதேசத்தில் வசிக்கின்ற இலங்கை முஸ்லிம் சிவில் சமூகப்பிரதிநிதிகள், மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தங்களது அவதானங்களை முன்வைத்துள்ளார்கள்.
புலம்பெயர் இலங்கை முஸ்லிம் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கலந்துரையாடலொன்று கடந்த ஞாயிறன்று இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின்போது, இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல் தொடர்பான விவகாரங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டதுடன் நடைபெறவுள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தொடரின் போது இடம்பெறும் இணை நிகழ்வுளின் போது இவ்விடயங்கள் தொடர்பில் சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வது குறித்தும் ஆராயப்பட்டது.
இலங்கை ஒரு அசாதாரணமான பொருளாதார நெருக்கடியையும், அரசியல் மாற்றங்களையும் எதிர்நோக்கியிருக்கின்றது. இந்நிலையில் மனித உரிமை விவகாரங்களில் சர்வதேச சமூகத்தின் முன்னாலும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னும் இலங்கை தனது பொறுப்புக்கூறலை ஒருபோதும் தட்டிக்கழிக்கமுடியாது. கடந்த இரண்டு தசாப்தங்களாக இலங்கையில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் விடயத்தில் பொறுப்பில் இருந்த அரசாங்கங்கள் நம்பிக்கைத்தருகின்ற முன்னேற்றகரமான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என்பது பொதுவான அவதானம். இந்நிலையில் பொறுப்பில் இருந்த அரசாங்கங்கள் மிகப்பாரிய பொருளாதார முறைகேடுகளில் ஈடுபட்டிருக்கின்றமை தற்போது வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. பொருளாதார முறைகேடுகள் மூலமும் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளன என்பதையும் அங்கிருந்து கிடைக்கின்ற தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கின்ற காரணத்தினால் அரச மட்டத்தினாலான முறைகேடுகள், சட்டவிரோத கைதுகள், தடுத்துவைப்புகள் அடக்குமுறைகள் தொடர்கின்றன. ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுக்கான முறையான விசாரணைகளோ சட்ட நடவடிக்கைகளோ இதுவரை முன்னெடுக்கப்படவில்லை. ஆனால் இதனைக் காரணமாக வைத்து 300ற்கும் அதிகமான முஸ்லிம் இளைஞர்களும் யுவதிகளும் பல மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். முஸ்லிம் அமைப்புக்களின் மீதான தடைகள் தொடர்கின்றன. ஏற்கெனவே சட்டவிரோதமாக கைதுசெய்யப்பட்ட முஸ்லிம் முக்கியஸ்தர்களின் மீதான சட்ட நடவடிக்கைகள் இன்னமும் முற்றுப்பெறவில்லை. இவ்வாறாக இலங்கை மக்கள் பொதுவாகவும் முஸ்லிம் மக்கள் குறிப்பாகவும் பல்வேறு மனித உரிமை மீறல்களின் விளைவுகளை எதிர்நோக்கியவண்ணமேயிருக்கின்றார்கள்.
இந்த அடிப்படைகளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகம் இலங்கையின் பொறுப்புக்கூறல் விவகாரங்களையும், சமூகங்களுக்கிடையேயான நல்லிணக்க விவகாரங்களையும் உறுதி செய்யும் விதமான நடவடிக்கைகளை தொடர்ந்தும் அமுலாக்கவேண்டும், அத்தோடு இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு ஏதுவான சர்வதேச சமூகங்களின் ஒத்துழைப்புக்களை உறுதிசெய்தல் வேண்டும் என்பதும் சர்வதேசங்களில் வாழ்கின்ற இலங்கை முஸ்லிம் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கோரிக்கையாக அமைந்திருக்கின்றது.– Vidivelli
Post a Comment