6 வருடத்தில் 75 மில்லியன் ரூபா பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை சம்பாதித்த வீரவன்ச - நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவை எதிர்வரும் ஒக்டோபர் 26ஆம் திகதி மருத்துவ நிபுணரால் வழங்கப்பட்ட மருத்துவச் சான்றிதழுடன் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று அறிவித்தல் அனுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் சட்டவிரோதமான முறையில் 75 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை சேர்த்தமை தொடர்பில் அவருக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல்களுக்கு எதிரான ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்கு வீரவன்ச நீதிமன்றில் முன்னிலையாகாததை கருத்திற்கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதி மாரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினருக்கு இந்த அறிவித்தலை விடுத்தார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான 6 வருட காலப்பகுதிக்குள், அமைச்சராக இருந்த காலத்தில் 75 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை வீரவன்ச சம்பாதித்துள்ளதாக கையூட்டல் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்றைய விசாரணையின் போது சட்டத்தரணி சவேந்திர சில்வா, தனது கட்சிக்காரருக்கு உடல்நிலை சரியில்லை எனவும், எனவே வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை எனவும் அறிவித்தார்.
இதனையடுத்தே வழக்கின் அடுத்த விசாரணை திகதியில் மருத்துவ சான்றிதழுடன் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு வீரவன்சவுக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்
Post a Comment