UNP + SJB இணைய வேண்டும், சஜித்தின் புகைப்படத்தைக் கூட இன்னும் அகற்றவில்லை - ஹரீன்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மீது மக்கள் புதிய எதிர்பார்ப்புடன் உள்ளதால் மக்களுக்கு போராட்டங்கள் போதும் என்ற நிலை வந்து விட்டது என பாராளுமன்றத்தில் தெரிவித்த அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து செயற்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
பாராளுமன்ற வரலாற்றில் ஜனாதிபதியொருவரின் உரைக்கு அதிகளவில் வரவேற்பளிக்கப்பட்ட உரையாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உரையைக் குறிப்பிட முடியும்.
கோட்டாபய ராஜபக்ஷவே ரணில் விக்கிரமசிங்கவுக்கு முன்னர் ஜனாதிபதியாக பதவி வகித்தார். அதன்போது அவர் தவறவிட்டவை மற்றும், ரணில் விக்கிரமசிங்க புரிந்துகொண்டுள்ள விடயங்கள் தொடர்பிலும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷ நெருக்கடிகளை சரியாக அடையாளம் காண தவறிவிட்டார். அதேபோன்று நெருக்கடிக்கு குறுகிய கால மற்றும் நீண்டகால வேலைத்திட்டங்களும் அவரிடம் இருக்கவில்லை.
2019 இல் இருந்தே புதியவர்களை தெரிவு செய்ய வேண்டும் என்ற போராட்டம் ஆரம்பமாகியது. அதன்படி அவர்கள் எதிர்பார்ப்புகளுடன் வீதிகளில் சித்திரங்களை வரைந்தனர்.
அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறாத பட்சத்திலேயே போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏப்ரல் 09 ஆம் திகதி போராட்டம் இவ்வாறான நெருக்கடியுடனேயே ஆரம்பமாகியது.
போராட்டங்களுக்கு மக்கள் ஆதரவு எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை. இப்போது மக்களுக்கு போராட்டங்கள் போதும் என்ற நிலை வந்து விட்டது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மீது மக்கள் புதிய எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறாவிட்டால் மீண்டும் போராட்டங்கள் தொடரலாம். நான் இன்னும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினராகவே உள்ளேன்.
இன்னும் எனது அலுவலகத்தில் சஜித் பிரேமதாசவின் புகைப்படத்தைக் கூட அகற்றவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவதையே நான் விரும்புகின்றேனென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்
Post a Comment