Header Ads



வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களிடையே LankaRemit தேசிய பணவனுப்பல் செயலியை பிரபல்யப்படுத்த திட்டம்


புலம்பெயர்ந்த பணியாளர்கள் மத்தியில் LankaRemit தேசிய பணவனுப்பல் நடமாடும் செயலியை பிரபல்யப்படுத்தும் நோக்குடன் இச்செயலியிலுள்ள வசதிகளை செய்துகாட்டுவதற்கு 2022 ஓகஸ்ட் 26 அன்று இலங்கை மத்திய வங்கியும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகமும் இணைந்து இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் வைபவம் ஒன்றினை ஏற்பாடுசெய்தன.


LankaRemit செயலியானது இலங்கைக்கு பணம் அனுப்புவதற்கு விரைவான, பாதுகாப்பான, மிகவும் வசதியான பணம் அனுப்பும் வழியினை வெளிநாட்டு வாழ் இலங்கையர்களுக்கு வழங்குகின்றது.


இலங்கை மத்திய வங்கியானது லங்கா கிளியர் (பிறைவேட்) லிமிடெட் நிறுவனத்துடன் கூட்டிணைந்து "LankaRemit" நடமாடும் செயலியை உருவாக்கி 2022 பெப்புருவரியில் அதன் முதற் கட்டத்தை நடைமுறைப்படுத்தியது.


வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் போன்ற ஆர்வலர்களின் உதவியுடன் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் "LankaRemit" பற்றிய விழிப்புணர்வினைத் தோற்றுவிக்கும் செயன்முறையினை இலங்கை மத்திய வங்கி முன்னெடுக்கின்றது.


வெளிநாடுகளில் வழங்கப்பட்ட இலத்திரனியல் நிதிய மாற்றல் அட்டைகளைப் பயன்படுத்தி இலங்கையிலுள்ள பயன்பெறுநர்களுக்கு நிதியங்களை பரிமாற்றல் செய்வதற்கும் பயன்பாட்டு கட்டணப் பட்டியல்களுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கும் LankaRemit பயனர்களை இயலச்செய்கின்றது. அருகாமையிலுள்ள பணம் பரிமாற்றல் தொழிற்படுத்துநரை மற்றும் அத்தகைய அமைவிடங்கள் பற்றிய தொடர்புடைய விபரங்களைக் கண்டறிதலுக்கான இயலுமை போன்ற பல எண்ணிக்கையான பெறுமதிசேர்க்கப்பட்ட சேவைகளையும் LankaRemit அதன் பயனர்களுக்கு வழங்குகின்றது. மேலும், வெளிநாட்டிலுள்ள பணப் பரிமாற்றல் தொழிற்படுத்துநர்கள் ஊடாக பணம் அனுப்பப்பட்டதன் பின்னர் கண்காணிப்பு இலக்கமொன்றினைப் பயன்படுத்தி செயலியின் வாயிலாக இலங்கையிலுள்ள பயன்பெறுநர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு பணவனுப்பலையும் பயனர் கண்காணிக்க முடியும். வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புநர்களுக்குகென இலங்கை அரசாங்கத்தினால் அல்லது உரிய அதிகாரிகளினால் எவையேனும் எதிர்கால நன்மைத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுமாயின் அத்தகைய நலத்திட்டங்களும் LankaRemit செயலியில் கிடைக்கப்பெறும்.


எந்தவொரு நாட்டிலிருந்தும் இலங்கைக்கு பணம் அனுப்புகின்ற எவரேனும் ஆள் கூகுள் பிளே ஸ்டோர், அப்பிள் அப்ஸ்டோர், ஹூவாவி அப்கலரி போன்றவற்றில் LankaRemit நடமாடும் செயலியை பதிவிறக்கம் செய்யலாம். LankaRemit உடன் இணைந்துள்ள பணம் அனுப்பும் சேவை வழங்குநர்கள் தொடர்ந்தும் அதிகரித்தவண்ணமுள்ளதுடன் இலங்கைக்கான பணவனுப்பல்களை வசதிப்படுத்துவதற்கு உலகளாவிய பணப் பரிமாற்றல் தொழிற்படுத்துநர்கள் மற்றும் உலகளாவிய நிதித் தொழில்நுட்பங்கள் உள்ளடங்கலாக நிதியியல் பணிகள் தொழில் துறையிலிருந்து அதிக சேவை வழங்குநர்கள் கிட்டிய எதிர்காலத்தில் இச்செயலியுடன் இணைந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.


வெளிநாட்டில் பணியை ஆரம்பிப்பதற்கு தயாராகவிருக்கின்ற புலம்பெயர் பணியாளர்களுக்கு LankaRemit இன் அம்சங்களும் நன்மைகளும் பற்றி விளக்கமளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷ நாணயக்கார, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் பி நந்தலால் வீரசிங்க, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் சார்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் துணைத் தலைவர் திரு. ஏ.ஏ.எம். ஹில்மி அதேபோன்று பல அரசாங்க நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், கொடுப்பனவு சேவை வழங்குநர்கள் போன்றவற்றின் பிரதானிகளும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வு வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் மத்தியில் LankaRemit பற்றிய விழிப்புணர்வையும் அதனை பின்பற்றுவதையும் அதிகரிக்குமென்றும் நாட்டிற்கு வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புகின்ற போது முறையான பணவனுப்பல் வழிகளின் பயன்பாட்டினை ஊக்குவிக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.