பாராளுமன்றத்துக்குள் வன்முறையாளர்கள் பிரவேசிப்பதை தடுத்த படையினருக்கு ரணில் பாராட்டு
பெலவத்த, அக்குரேகொடவில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்திற்கு இன்று (09) முற்பகல் விசேட உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி அவர்கள், இராணுவத்தினரை சந்தித்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அன்று வன்முறையாளர்கள் பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்து சட்டத்துறையை முடக்கியிருந்தால் நாடு ஆட்சியை இழந்திருக்கும் எனவும் அவ்வாறு நடந்திருந்தால் நாட்டின் நிலைமை முற்றிலும் மாற்றமாக அமைந்திருக்கும் எனவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். எந்தவொரு நபர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தாமல் அமைதியான முறையில் அந்த நடவடிக்கையை முன்னெடுத்த பாதுகாப்புப் படையினருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் குறிப்பிட்டார்.
இராணுவத் தலைமையக வளாகத்தை வந்தடைந்த ஜனாதிபதி அவர்களை இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் விக்கும் லியனகே வரவேற்றதுடன், பின்னர் ஜனாதிபதி அவர்களுக்கு விசேட இராணுவ மரியாதையும் வழங்கப்பட்டது.
ஜனநாயகத்தை பாதுகாக்கும் உன்னத இடமான பாராளுமன்ற வளாகத்துக்குள் வன்முறையாளர்கள் பிரவேசிப்பதை வெற்றிகரமாக தடுத்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி வைத்ததோடு, சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரிகளுடன் குழுப் புகைப்படத்தில் தோன்றியதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அதிதிகளின் குறிப்பேட்டில் குறிப்பொன்றையும் இட்டார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள்,
“பாராளுமன்றத்தைப் பாதுகாத்தமைக்காக உங்கள் அனைவருக்கும் எமது நன்றியைத் தெரிவிக்கும் வகையில் இன்று இந்த விசேட நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளோம். பலருக்கு இதன் முக்கியத்துவம் தெரியாது. எனவே விஷேடமாக இதைப் பற்றி சில விடயங்களைக் குறிப்பிட விரும்பினேன். இந்த நாட்டைப் பாதுகாப்பதும், இந்த நாட்டின் அரசியலமைப்பைப் பாதுகாப்பதும் உங்களின் தலையாய கடமையாகும்.
மக்களின் இறையாண்மையை நடைமுறைப்படுத்த 03 பிரதான நிறுவனங்கள் உள்ளன. பாராளுமன்றம், நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை. இந்த 03 நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், இந்த நாடு கட்டுப்பாட்டை இழக்கும். அரசியலமைப்பு சிதையும். ஜனநாயகம் இழந்துவிடும். அப்படிப்பட்டதொரு சூழ்நிலையில்தான் நீங்கள் பாராளுமன்றத்தை பாதுகாத்தீர்கள்.
நிகழ்வுகள் பற்றி பேசுகையில், ஜூலை 09, முன்னாள் ஜனாதிபதி இருந்த ஜனாதிபதி மாளிகை வன்முறையாளர்களால் கைப்பற்றப்பட்டது, பின்னர் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை செலுத்தும் ஜனாதிபதி அலுவலகம் கையகப்படுத்தப்பட்டது. ஜனாதிபதியிடம் நடைமுறைப்படுத்த எந்த நிறுவனமும் இல்லை. மாலையில் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான "அலரி மாளிகை" கையகப்படுத்தப்பட்டது. அந்த அலுவலகத்தின் செயல்பாடுகளை மேற்கொள்ள முடியவில்லை. அப்போது முன்னாள் ஜனாதிபதி கொழும்பில் இல்லாததாலும், அவர் இருக்கும் இடம் தெரியாததாலும், நான் பதவி விலகுவேன் என்ற நம்பிக்கையில் எனது வீட்டிற்கு தீ வைத்தார்கள். ஆனால் சேர் எர்னஸ்ட் டி சில்வா மாவத்தையில் பிரதமர் அலுவலகம் மாத்திரம் இருந்தது.
கடந்த 13ம் திகதி திரும்பி வந்து பிரதமர் அலுவலகத்தை கைப்பற்றினர். அப்போது நிர்வாகத்தை இயக்க எந்தவொரு அலுவலகமும் இல்லை. அப்போது ஜனாதிபதி இருந்த ஜனாதிபதி மாளிகையும் இல்லாமல் போய்விட்டது. நிரைவேற்றுத்துறையாக, இயங்குவதற்கு
எந்தவொரு இடமும் இருக்கவில்லை. மாலையில் நிலைமை மாறியது. பாராளுமன்றத்தை முற்றுகையிட முயன்றனர். பாராளுமன்றத்தை கைப்பற்றினால், சட்டத்துறையை அமல்படுத்த முடியாது. சட்டத்துறையை அமல்படுத்த முடியாவிட்டால், நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லை.
நீதிமன்றத்தை சுற்றிவளைத்து நீதிமன்றத்தை நிறுத்துவது எளிதான காரியம். மற்ற இரண்டு நிறுவனங்களைப் போல அல்ல. பாராளுமன்றத்தை இழந்தால் அது பெரிய பிரச்சனையாகிவிடும். அன்றைய தினம் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. சபாநாயகருக்கு தெரியும், இந்த குழு வருவதை அறிந்ததும், கட்சி தலைவர்கள் கூட்டத்தை நிறைவு செய்தார். பாராளுமன்றத்தை பாதுகாக்க யாரும் இருக்கவில்லை. பாராளுமன்றம் வீழ்ந்தால் அரசியல் அமைப்பு பறிபோகும். எனவே, அவ்வேளையில் பாதுகாப்புச் சபையின் தலைவர்களிடம் குறிப்பாக சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் லியனகே ஆகியோரிடம் பாராளுமன்றத்தைப் பாதுகாக்குமாறு கூறினேன். பாராளுமன்றத்தை இழந்தால் ஆட்சி இல்லாமல் போகும். பாராளுமன்றம் இல்லாததால், பாதுகாப்பு அமைச்சை செயற்படுத்த முடியாது. அதனால்தான் உங்களிடம் அந்த செயற்பாட்டை ஒப்படைத்தேன்.
அதன்படி பாராளுமன்றத்தை கைப்பற்ற வந்தவர்களுக்கு துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அதற்காக உங்கள் அனைவருக்கும் எனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களில் பலர் காயமடைந்துள்ளனர். பாதுகாப்பு இருந்ததால் அடுத்த நாளே நாட்டில் நிலைமை மாறியது. பாராளுமன்றம் பாதுகாக்கப்படாவிட்டால் இன்று நாட்டில் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.
இது வடக்கில் பார்த்த பெரிய யுத்தங்கள் போல் இல்லை, ஜனநாயகத்தை பாதுகாக்க நீங்கள் எடுத்த ஒரு நடவடிக்கை. அன்று பயங்கரவாதத்தை ஒழித்தது போல் ஜனநாயகத்தையும் பாதுகாத்தீர்கள். இந்தப் பாராளுமன்ற கட்டிடத்தை பாதுகாத்து பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு இடமளித்ததன் மூலம் அரசியலமைப்பு ரீதியான கடமை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் மூலம் நாடும் பாதுகாக்கப்பட்டுள்ளது. இப்போது இருப்பது பாராளுமன்றத்தை முன்னோக்கி கொண்டு செல்வதே ஆகும். பாராளுமன்றத்தை முன்னோக்கி கொண்டு சென்று பா.உறுப்பினர்கள் மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். உங்களின் நடவடிக்கை இப்போது முடிந்துள்ளது. பாராளுமன்றத்தில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
புதிய அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டு வர நாம் முயற்சிக்கிறோம். புதிய பாராளுமன்ற சீர்திருத்த முன்மொழிவுகளை கொண்டு வந்து சர்வகட்சி ஆட்சியை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இது பற்றி கலந்துரையாடப்படுகிறது,
இப்போது உங்கள் கடமையை செய்யுங்கள். இப்போது பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டும். பிரதமர் மற்றும் சபாநாயகர் அவர்களிடம் தயவு செய்து இதனை பாராளுமன்றத்தில் நினைவூட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த அர்ப்பணிப்பிலிருந்து நாம் பயனடைய விரும்பினால், அனைவரும் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தை மீண்டும் நாட்டின் நலனுக்காக செயல்படுத்த வேண்டும்.
இந்தச் சந்தர்ப்பத்தில் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நாட்டுக்காக, பாராளுமன்றத்துக்காக, அரசாங்கத்துக்காக நன்றி தெரிவிக்கிறேன். இந்த நடவடிக்கையை எடுத்ததால், இப்போது எமக்கு நாட்டின் பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க முடியும். வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. பயணங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
அடுத்த ஆண்டுக்குள் நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டுமானால், அது பாராளுமன்றத்தில் செய்யப்பட வேண்டும். அதைப் பாதுகாக்க உழைத்திருக்கிறீர்கள். பாராளுமன்றம் செயல்பட வாய்ப்புஅளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நீங்கள் அனைவரும் வான்வழிப் படையைச் சேர்ந்தவர்கள். அதைப் பற்றியும் சில வார்த்தைகளைச் சொல்ல விரும்புகிறேன். ஏனெனில் இது நம் நாட்டில் ஒரு முக்கிய அலகாகக் கருதப்படுகிறது.
அன்று 1992 மற்றும் 1993 ஆம் ஆண்டுகளில் இந்தப் படையை உருவாக்க வேண்டும் என்று நாம் கலந்துரையாடினோம். அந்த நேரத்தில், நான் அக்டோபர் மாதம் லண்டன் சென்றேன். நான் லண்டனில் ஜெனரல் மைக்கேல் ரோஸை சந்தித்தேன். அவரை எனக்கு அறிமுகப்படுத்தியது ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்கள். ஜெனரல் ரணதுங்க மற்றும் ஜெனரல் ஆடிகல ஆகியோர் அவருடன் இருந்தனர். அவர் இப்படி ஒரு பிரிவைத் தொடங்க வேண்டும் என்றார். அப்போதைய இராணுவத் தளபதி வைத்தியரத்னவிடம் அந்தப் பணி ஒப்படைக்கப்பட்டது, பின்னர் ஜெனரல் ஜெரி சில்வா படையை ஆரம்பித்து இந்தப் பணியை சிறப்பாகத் தொடர்ந்தார். குறிப்பாக அப்போது தொடங்கியதை தொடர்வதில் நாம் மகிழ்ச்சி அடைகிறோம்.
பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2022-08-09
Post a Comment