நாட்டை இழிவுபடுத்தும் செய்திகள் பரப்பப்படுவதைத் தடுக்க வேண்டும்
சர்வதேச அளவில் நாட்டை இழிவுபடுத்தும் செய்திகள் பரப்பப்படுவதைத் தடுப்பதற்கு தேசிய பாதுகாப்பிற்கு பொறுப்பானவர்கள் ஊடகங்களுடன் நெருக்கமாக பணியாற்ற வேண்டும் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
ஊடகவியலாளர்களுடனான தனது நெருங்கிய தொடர்பு காரணமாக கடந்த காலங்களில் இதுபோன்ற செய்திகள் வெளியிடப்படுவதைத் தடுக்க உதவியதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பாதுகாப்புத் துறை மற்றும் பொலிஸ் பேச்சாளர்கள் ஊடகவியலாளர்களின் நம்பிக்கையை கட்டியெழுப்பும் வகையில் மிகவும் அண்ணியொன்னியத்துடன் செயல்பட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
ஊடகத்துறை அமைச்சும், அரசாங்க தகவல் திணைக்களமும் இணைந்து "தேசிய பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஊடக அறிக்கையிடல்" என்ற தொனிப்பொருளில் நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்புச் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் பாதுகாப்புச் செயலாளர் மேலும் உரையாற்றுகையில் :-
நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் நட்பெயரை பாதுகாக்கும் பாரிய பொறுப்பு ஊடகங்களுக்கு உள்ளன. இதனால் அவர்களுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தல், நாட்டின் நலனை கருத்தில் கொண்டு பாதுகாப்பு துறை நீதித்துறை மற்றும் ஊடகத்துறை ஒன்றிணைந்து பயணிப்பது காலத்தின் கட்டாய தேவையாக கருதுவதாகவும் தெரிவித்தார்.
நான்காவது ஈழ யுத்தத்தின் போது ஊடகங்களுடன் சரியான முறையில் உறைவை பேணியதாலும் அந்த ஊடகங்களை சரியாக பயன்படுத்தியமையினாலுமே இந்த யுத்தத்தை வெற்றி கொள்ள முடிந்தது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
இதேவேளை, கடந்த மே 9ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின் போது அவை தொடர்பாக ஊடகங்கள் அறிக்கை இட்ட முறைமை சரியானவா அல்லது பிழையானதா என்பது தொடர்பில் தமது மனதில் கை வைத்து கேட்க வேண்டும்.
வளர்ந்து வரும் எதிர்கால சந்ததியினருக்கு ஊடகங்கள் ஊடாக வன்முறைகளை காண்பிப்பது பொருத்தமானதா என்பது தொடர்பிலும் நாங்கள் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
எது எவ்வாறாக இருந்தாலும் ஒரு பிரச்சினையை தீர்க்க வன்முறையை அல்லது காட்டு தர்பாரை பயன்படுத்த ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட பங்குகொண்ட இந்த கருத்தரங்கில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகன் மொஹான் சமரநாயக்க, ஸ்ரீபாலி மண்டத்தின் பேராசிரியர் சிரேஷ்ட சட்டத்தரணி பிரதீபா மஹனாம, தென்பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன ஆகியோர் விஷேட விரிவுரைகளை நடத்தினர்.
இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரட்ன, பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கேர்னல் நளின் ஹேரத், கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக சில்வா, விமானப்படை பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க, பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பேச்சாளர் அனுர திசாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
(ஸாதிக் ஷிஹான்)
Post a Comment