பாஸிசவாதத்தை விதைப்பவர்களை புனர்வாழ்வு செய்ய வேண்டும் - வஜிர
கே: தற்போது உங்கள் கட்சியின் தலைமை நாட்டின் தலைமையாக மாறியுள்ளது. அரசியலமைப்புக்கு அமைய இந்நியமனம் மேற்கொள்ளப்பட்டாலும், பொதுமக்களின் பிரதிநிதித்துவம் இல்லை என சில தரப்பினர் கூறுகின்றார்கள் அல்லவா?
பதில்: அரசியலமைப்பில் 37/1, 37/2 மற்றும் 40 சரத்துகள் ஏன் எழுதப்பட்டுள்ளன?அரசியலமைப்பு பற்றி அறியாத, ஜனநாயகம் பற்றி எதுவும் புரிந்து கொள்ளாதவர்களே இவ்வாறு கூறுகின்றார்கள். வரலாற்றிலும் இதுபோன்ற சந்தர்ப்பங்களுக்கான உதாரணங்கள் காணப்படுகின்றன.
1993 மே முதலாம் திகதி ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச மரணமடைந்தார். அவ்வேளையிலும் ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டார். அவ்வேளையில் எதிர்க்கட்சித் தலைவியாக சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையார் பதவி வகித்தார். அவர் அவ்வேளையில் பொறுப்புடன் தனது பதவியை வகித்தார்.
கே: ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இப்பதவிக்கு வருவதற்காக திரையின் பின்னால் இருந்த முக்கியமானவர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன என்று கூறப்படுவதை ஏற்றுக் கொள்வீர்களா?
பதில்: நான் தனியாக அதனை செய்தேன் எனக் கூற முடியாது. நாம் ஒரு அணியாக இலக்கை நோக்கி பயணித்தோம். 2019 ஆம் ஆண்டு எமது ஆட்சியின் போது நாம் தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. அதன் காரணமாக நம் நாட்டின் நிர்வாகம் பாதிக்கப்படும் என்பதை நிச்சயமாக அறிந்திருந்தோம்.அது பற்றிய விசேட அனுபவம் ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருந்தது. அதனால்தான் அவர் இந்த நாடு முகம் கொடுத்துவரும் நிலைமை பற்றி அடிக்கடி தனது கருத்துக்களை தெரிவித்து வந்தார். நாம் பாராளுமன்றத்துக்கு 50 வருட அனுபவம் உள்ள தலைவராகவே ரணில் விக்கிரமசிங்கவை அனுப்பியுள்ளோம்.
கே: ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொருளாதார ரீதியாக பாதிப்படைந்துள்ள ஒரு நாட்டின் ஜனாதிபதி பதவியையே ஏற்றுள்ளார். அவரால் அந்த இடத்தில் இருந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியுமா?
பதில்: உண்மையில் 2022 ஏப்ரல் 8 ஆம் திகதி இலங்கை வங்குரோத்து அடைந்த நாடாக கூறப்பட்டது. அரசியலமைப்பின் 148,149, 150 மற்றும் 151 என்னும் சரத்து மீறல் இடம்பெற்றுள்ளது. நாடொன்றை வங்குரோத்து அடைந்த நாடாக அறிவிப்பதற்கு முன்னர் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஜனாதிபதியால் ஆறு ஏழு மாதங்களுக்குள் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும். தற்போது இரண்டு வருடங்களாக கிடைக்காத உரம் வந்துள்ளது. எரிவாயு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கியூ வரிசையை குறைத்து நாட்டை பழைய நிலைமைக்கு கொண்டு வர வேண்டும். அதனை ஜனாதிபதியால் நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.
கே: நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்றால் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்களிப்புடன் கூடிய சர்வ கட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என கூறப்படும் யோசனை குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?
பதில்: நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது மாற்றம் அடையாத தேசிய கொள்கையை அரசியலமைப்பில் இணைத்து செயல்பட வேண்டும். அவ்வாறான கொள்கைகளை அரசியல் அமைப்பில் இணைப்பதற்கு நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து அரசியல் கட்சிகளையும் இணைத்து ஒற்றுமையா க இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர விரும்புகின்றார். அதற்காக அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பினையும் விடுத்துள்ளார்.
கே: இணைந்து செயலாற்றக் கூடிய முறை ஒன்று தற்போது உள்ள அமைச்சரவையில் உருவாகியுள்ளதா?
பதில்: இணைந்து செயலாற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு நாம் பயணித்துள்ளோம். ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு ஆசனமே இருந்தது. நிறைவேற்று முறை மூலம் தற்போது இன்னொன்றும் கிடைத்துள்ளது. அதனால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இரண்டு ஆசனங்களே உள்ளன. தற்போது நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்ற விடயம் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. உதாரணமாக பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் யோசனை முன்வைக்க முடியும். அதனையே ஜனாதிபதியும் எதிர்பார்க்கின்றார். அதன் மூலமே நாட்டில் நிலையான தன்மையை ஏற்படுத்தி முன்னோக்கி பயணிக்கலாம்.
கே: ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளதல்லவா?
பதில்: காலிமுகத்திடல் போராட்டம் மிகவும் அழகான போராட்டம். அந்தப் போராட்டத்தின் நோக்கம் ஒரு பிரிவினருடையதல்ல. அதற்கு பல அரசியல் கட்சிகள்,வர்த்தகர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அனைத்து சக்திகளும் ஒரே நோக்கத்திற்காக ஒன்றிணைந்ததை காண முடிந்தது. அந்த நோக்கத்திற்காக செயல்பட்ட மக்கள் பிரிவினருக்கு பல தலைமைகள் காணப்பட்டன. இறுதியில் தவறான இடத்திற்கு பயணித்தார்கள். இலங்கை சர்வதேசத்தின் பார்வைக்கு மோசமான நாடாகியது. ஒரு சிறு பிரிவினரே அதற்காக செயல்பட்டார்கள். ஜனாதிபதி மாளிகை தனியார் சொத்தல்ல. இலங்கை மக்களின் அடையாளம். வீடியோ காட்சிகளை காண்பித்து இரகசிய இடங்களையும் உலகிற்கு பகிரங்கமாக்கினார்கள். அரசு தலைவர்கள் ஒரு நாட்டிற்கு விஜயம் செய்யும் போது தங்களுடைய தலைவர்களுக்கு பாதுகாப்பு உள்ளதா என ஆராய்வார்கள். ஆனால் இலங்கை உலகின் முன்னால் சிறுமைப்படுத்தப்பட்டது. நாம் மக்களின் நியாயமான கோரிக்கைகளை எதிர்ப்பவர்கள் அல்ல. அதன் பின்னால் மறைந்து நாட்டின் அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஜனநாயகத்துக்கு எதிராக பாஸிசவாதத்தை விதைப்பவர்களை புனர்வாழ்வு செய்ய வேண்டும்.
கே: ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளை எதிர்காலத்தில் அரசுடன் இணைத்துக் கொள்ள எதிர்பார்க்கின்றீர்களா? அவற்றுடன் இணைந்து நடவடிக்கையில் மேற்கொள்ள உங்கள் திட்டங்கள் எவை?
பதில்: அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நடத்தியும் உள்ளோம். அனைவரும் இணைத்து செயலாற்ற விரும்புகின்றோம். இந்நாட்டின் தற்போதைய பிரச்சினையை தீர்த்து நாட்டை அபிவிருத்தி செய்ய நாம் அனைவரும் இணைய வேண்டியுள்ளது.
கே: போராட்டக்காரர்கள் மீது படையினர் தாக்குதல் நடத்தியதாலும் மேலும் பல குற்றச்சாட்டுகளின் கீழ் எதிர்காலத்தில் அவர்களை கைது செய்வதற்கு உள்ள திட்டங்கள் காரணமாக சர்வதேச ரீதியாக அரசாங்கத்திற்கு கிடைக்கவுள்ள உதவிகள் கிடைக்காமல் போகும் என எதிர்வு கூறப்படுகின்றது. இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பதில் : ஜனநாயக நாடுகள் ஜனநாயக கட்டமைப்புக்குள்ளேயே செயல்பட வேண்டும்.ஜனநாயகத்தை மதிக்கும் சர்வதேச நாடுகளும் ஜனநாயகத்துக்கு பாதிப்பு ஏற்படும் சந்தர்ப்பங்களில் அவர்கள் செயற்பட்ட விதத்திலேயே இந்நாடும் செயல்படுகின்றது. அதனால் அது கருத்துக்களை கூறுவதற்கு உள்ள உரிமைக்கு அச்சுறுத்தலுக்கு ஆளாகாது. ஆனால் கருத்துக்களை கூறும் உரிமைக்குப் பின்னால் மறைந்து நாட்டில் உள்ள ஜனநாயகத்தின் அடிப்படை பண்புகளை தாக்குவார்களானால் அவ்விடத்தில் ஜனநாயகத்திற்காக அரசாங்கம் செயல்பட வேண்டியுள்ளது. நாட்டின் பாதுகாப்புக்காக நடவடிக்கையில் ஈடுபட வேண்டியது முப்படைகளினதும் பொலிஸாரினதும் கடமை என்று நான் எண்ணுகிறேன்.
கே: ஆரம்ப காலம் தொட்டு இந்நாட்டின் பிரபல அரசியல் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி கடந்த காலங்களில் பின்னடைவை சந்தித்தது. அக்கட்சியை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டு வர மக்களை இணைப்பதற்கான திட்டம் உள்ளதா?
பதில்: ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இச்சந்தர்ப்பத்தில் நாட்டின் அரசியல் நடவடிக்கை மற்றும் நிலைமை வேறானது. அதனால் அனைத்து அரசியல் சக்திகளும் ஒன்றாக இணைந்து செயல்பட்டு இந்நாட்டில் காணப்படுகின்ற பாரிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி எதிர்கால நடவடிக்கைகளை இலங்கை பூராவும் செயல்படுத்த வேண்டியுள்ளது. அதனை விரைவுபடுத்தவும் வேண்டும்.
சுபத்ரா தேசப்பிரிய
தமிழில்: வீ.ஆர்.வயலட்
Post a Comment