நான் தமிழன் என்று ஒரு வெறுப்புப் பேச்சைக் கூட, முஸ்லிம்கள் பேசியதில்லை - கஜேந்திரன் உருக்கம்
- ஏ.எச்.ஏ. ஹுஸைன் -
ஏறாவூர் நகர அஞ்சல் அலுவலர் கந்தையா கஜேந்திரன் தனது அஞ்சல் அலுவலக உதவியாளர் என்ற பதவியில் 29 வருடங்கள் கடமை புரிந்த நிலையில் ஓய்வு பெற்றுச் செல்வதையொட்டி அவருக்கு சக அலுவலர்களால் பிரியாவிடை வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஏறாவூர் தபால் நிலைய பொறுப்பு அஞ்சல் அதிபர் எஸ்.எச்.எம். கஸ்ஸாலி தலைமையில் திங்கள்கிழமை 29.08.2022 பிரியாவிடை வைபவம் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு அஞ்சல் பயிற்சிக் கல்லூரியின் போதனாசிரியை கே. பாத்திமா ஹஸ்னா, செங்கலடி தபால் நிலைய பொறுப்பு அஞ்சல் அதிபர் ஏ.எல்.எம். றியாழ், தபாலதிபர் பி. நிறோன் உட்பட பிரதேச தபாலதிபர்கள் ஓய்வு நிலை தபாலதிபர்கள் அஞ்சல் அலுவலக அலுவலர்கள் ஆகியயோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பிரியாவிடை பெற்றுச் செல்லும் அஞ்சல் அலுவலக உதவியாளர் கஜேந்திரன் உரையாற்றுகையில், கடந்த 29 வருட எனது சேவைக் காலத்தில் எத்தனையோ கசப்பான இன வன்முறைகள் இடம்பெற்றன. இது எந்தப் பொறுமைசாலியும் பொறுமையிழக்கும் ஒரு கால கட்டமாக இருந்தது. ஆயினும் இந்தத் துயரமான காலப்பகுதியில் ஏறாவூர் அஞ்சல் அலுவலகத்தில் கடமையாற்றும் எனது அதிகாரிகள் சக அலுவலர்கள் சேவை பெற்ற பொதுமக்கள் எவரும் என்னை வெறுத்து நான் தமிழன் என்று ஒரு வெறுப்புப் பேச்சைக் கூட பேசியதில்லை. உங்களில் ஒரு உறவாக சகோதரனாகவே என்னை பராமரித்தீர்கள். இச்சந்தர்ப்பத்தில் நான் ஓய்வு பெற்றுச் செல்வது ஒரு துயரமாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், நான் இப்படியான மனித நேய உறவுகளை விட்டுப் பிரிவதுதான் எனக்கு துயரமாக இருக்கிறது” என்றார்.
தனது சேவைக் காலத்தில் கடமை கண்ணியம் நேர்மை பொறுப்புணர்வு அன்பு அகிய பண்புகளோடு கஜேந்திரன் தனது சேவைக்காலத்தில் அரும்பணியாற்றியவர் என மட்டக்களப்பு அஞ்சல் பயிற்சிப் போதனாசிரியர் பாத்திமா ஹஸ்னா உட்பட இன்னாள் முன்னாள் தபாலதிபர்கள், சக ஊழியர்கள் ஆகியோரும் பாராட்டிப் பேசினர்.
Post a Comment