சமூகத்தின் குருட்டுக் கண்கள் திறக்கப்படுமா...? கபூரியா உணர்த்தும் படிப்பினை - வக்பு சட்டத்தை தெரிந்திருங்கள்..!
சமூகம் விழித்துக்கொள்ளுமா? உலமாக்கள் இவற்றை விளங்கி/ அறிந்து வைத்துள்ளனரா?
கபூரியா, 1956ல் வக்ப் சட்டம் வரமுதல் ஆங்கில சட்டத்தின்படி ட்ரஸ்ட் ஆக 1931 ல் பதிவு செய்யபபட்டுள்ளது. 1980 களில் வக்பு ட்ரஸ்ட் ஆக பதிவு செய்ய அப்போதைய கபூரியா நம்பிக்கையாளர்களால் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. M CF கட்டணமும் செலுத்தப்பட்டுள்ளது. வக்பு நியாயாதிக்க சபை கபூரியா சொத்துக்கள் வக்பு சொத்துக்கள் என தீர்பளித்துள்ளது. காஸிமியா வக்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருப்பதால், அதன் குடும்ப நம்பிக்கையாளர்கள் நீக்கப்பட்டு புதிய நம்பிக்கையாளர்களை வக்பு நியாயாதிக்க சபை நியமித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். ஆகையால் காஸிமிய்யா சொத்துக்கள் மீட்டெடுக்கப்பட்டு வருகின்றன.
வக்பு சட்டபடி family- குடும்ப வக்பு (وقف اهلي) ஆக இருப்பினும் அதன் சொத்து வக்பு சொத்தே; தனிப்பட்ட சொத்தாகாது.
இருப்பினும் வக்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான வக்பு சொத்துக்களும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வருகின்றன. கொழும்பு பெரிய பள்ளிவாயில் சொத்துக்கள், காசிமியா சொத்துக்கள், புத்தளம் K K பள்ளிச் சொத்துக்கள், மாதளை காட்டுப் பள்ளிச் சொத்துக்கள் என்று பட்டியல் நீள்கிறது. இவற்றுக்கு வக்பு சபையும் திணைக்களமும் சமூகமும் பொறுப்புக் கூற வேண்டும் ; அல்லாஹ்விடத்தில் தப்ப முடியாது. காரணம் வக்பு சட்டம் சரியாக நடைமுறைப்படுத்துவதில் காட்டப்படும் அசிரத்தையே. குறிப்பாக அரசியல் மயப்படுத்தல் பிரதான காரணமாகும்.
நழீமியா உட்பட ஆயிரக்கணக்கான முஸ்லிம் பொதுச் சொத்துகள் வக்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவிலலை என்பதை கருத்தில் கொள்க வேண்டும். சுமார் 500 அரபு/ஹிப்ழ் மத்ரசாக்களும் வக்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை,
சட்டத்தரனி யாசீன் வக்பு சபை தலைவராக எடுத்த முன்னெடுப்புகள் சமூகத்தால் சாதமாகப் பார்க்கப் படவில்லை. சகல அரபு மத்ரஸாக்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களது சொத்துக்கள் வக்பு சொத்துக்களாக கருதப்பட வேண்டின், வக்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும்.
ஒரு சட்டத்தின் ஏற்பாடுகளின் படி செய்யப்படுகின்ற பதிவு மட்டுமே வக்பு சொத்துக்கள் என்பதற்கா ஆதாரமாக நீதிமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்படும்,
அந்த வகையில் 1956 ம் ஆண்டு கொண்டுவரப்பட்டு 1962 மற்றும 1982 களில் திருத்தம் செய்யப்பட்ட வக்பு சட்டம் மட்டுமே முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் எல்லைக்குள் வரும் ஒரே ஒரு சட்டம், இந்த சட்டத்தின் கீழ் பள்ளிவாயல்களையும், தர்கா மற்றும் ஸாவியாவிகளையும் பதிவு செய்ய முடியும். மேலதிகமாக, முஸ்லிம் அறக்கட்டளைகளையும் பதிவு செய்ய முடியும்.
வக்பு சட்டத்தின் பிரகாரம் பதிவு செய்யப்படும் நிறுவங்களின் நிர்வாகிகள் நியமனம், இடைநிறுத்தம், மற்றும் விலக்கல் என்பன தொடர்பில் பூரண அதிகாரம் வக்பு சபைக்கே உண்டு. ஊர் மக்களால் முறையாக தெரிவு செய்யப்பட்ட நிர்வாகிகளாக இருப்பினும் வக்பு சபையின் நியமனக்கடிதம் வழங்கப்படாத போது சட்டம் அவரை நிருவாகியாக கருதாது. மக்கள் தெரிவு செய்யும் திருவாகிகளை நீக்கவும் இடைக்கால நிருவாகிகளை தாமாகவே நியமிக்கவும் வக்பு சபைக்கு அதிகாரம உள்ளது.
பள்ளிவாயலின் கணக்கு சபைக்கு ஒவ்வொரு ஆறு மாதமும் காட்டப்படல் வேண்டும். செலவு போக வருடாந்த வருமானத்தின் மீதியில் பள்ளிவாயலாக இருப்பின் 6 வீதமும் அறக்கட்டளையாக இருப்பின் 7 வீதமும் வக்பு சபையின் கீழ் உள்ள முஸ்லிம் தர்ம நிதியத்துக்கு வருடாந்தம் கட்ட வேண்டும்.
சொத்துக்களை வாடகைக்கு விடுவதாயின் அல்லது விற்பதாயின் வக்பு சபையின் முன் அனுமதி பெறப்பட வேண்டும்.
பள்ளிவாயல்கள் அனைத்தும் வக்புகள்; தனியார் நிறுவனங்களல்ல; அவை அரச சொத்துக்களும் அல்ல. வக்பு சட்டத்தின்படி திணைக்களத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை; வக்பு சபை மட்டுமே பள்ளிவாயல்கள் விடயத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட நிறுவனம். வக்பு சபையின் ஏஜன்டாகவே திணைக்களம் இயங்குகிறது. அந்த அடிப்படையிலேயே அதிகாரம் திணைக்களத்துக்கு வக்பு சபையினால் வழங்கப்படுகிறது.
பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் அறக்கட்டளைகள் விடயத்தில் வக்பு சபை எடுக்கின்ற தீர்மாணங்களை கேள்விக்குட்படுத்துவதற்கு மாவட்ட நீதிமன்றங்களுக்கு அல்லது மஜிஸ்ட்ரேட் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை. அவற்றை வக்பு சட்டத்தின் 1982ம் ஆண்டு திருத்தங்களின்படி உருவாக்கப்பட்டுள்ள வக்பு நியாயாதிக்க சபைகளிலேயே கேள்விக்குட்படுத்தலாம். வக்பு நியாயாதிக்க சபை மாவட்ட நீதிமன்றத்திற்கு நிகரான அதிகாரங்களைக் 'கொண்டுள்ளது. வக்பு சபை உறுப்பினர்கள் மதவிவகார அமைச்சரால் நியமிக்கப்பட்டாலும் நியாயாதிக்க சபை உறுப்பினர்கள் நீதிச் சேவை ஆணைக்குழுவினால் நியமித்தப்படுகிறார்கள்.
மலேசியா உட்பட உலகின் பல முஸ்லிம் நாடுகளில கூட வக்பு சட்டமோ, வக்பு சபையோ, வக்பு நியாயாதிக்க சபையோ இல்லை. அன்மையில் வக்பு சபைக்கு ஆப்பு வைக்க சில தீய சக்திகள் எடுத்த முயற்சிகளை மறக்கவோ மறைக்கவோ முடியாது. 12 முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் தலையீட்டால் அமைசசர் உண்மையைப் புரிந்து தவறைத் திருத்திக்கொண்டுள்ளார். இந்த விடயத்தில் பாடுபட்ட சட்டத்தரணி சிராஷ் நூர்தீன் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் சகோதரர் ஹில்மி அஹ்மத் ஆகியோரை அல்லாஹ் பலப்படுத்துவானாக; அவர்களுக்கு நல்ல தேக ஆரோக்கியத்தை வழங்குவானாக; அவர்கள் வாழ்வில் எல்லாவித அருள்களையும் வாரி வழங்குவானாக!
சமூகம் வக்பு சட்டத்தை அறிந்து அதனைப் பயன்படுத்துவதோடு அதனைப் பாதுகாக்க முஸ்லிம் அரசியல் தலைவர்களை அறிவூட்ட வேண்டும், ஜம்இய்யதுல் உலமாவும் கூடுதல் கரிசனை செலுத்த வேண்டும். ஏனைய சமய சிவில் அமைப்புகளும் தொடர்ந்தும் விழிப்புடன் செயலாற்றி நமது முன்னோர் நமக்கு பெற்றுத் தந்த இந்தப் பொக்கிஷங்களைப் பாதுகாத்தல் வேண்டும்.
வக்பு சட்டத்தை திருத்தங்களுடன் https://www.srilankalaw.lk/.../muslim-charitable-and... ல் பார்க்கலாம்.
ஏ.பீ.எம். அஷ்ரப்
முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினதும் வக்பு சபையினதும் முன்னாள் பணிப்பாளர்.
Post a Comment