Header Ads



பதக்கம் வென்ற நேத்மி ஏமாற்றப்பட்டு, நாமலிடம் அழைத்து செல்லப்பட்டாரா..? பத்திரிகை செய்தியும், நாமலின் முறைப்பாடும்


பொதுநலவாய விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற நேத்மி அஹிம்சா, ஏமாற்றப்பட்டு முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவிடம் அழைத்து செல்லப்பட்டதாக சிங்கள ஊடகம் ஒன்று சர்ச்சையான செய்தியை வெளியிட்டுள்ளது. இச்செய்தி தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு நாமல் ராஜபக்ச பொலிஸில் முறைபாடு செய்துள்ளார்.

பத்திரிகை வெளியிட்ட செய்தி..

பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற கிரிஉல்ல பகுதியை சேர்ந்த நேத்மிக்கு பாராட்டு விழாவை விளையாட்டு அமைச்சு ஏற்பாடு செய்திருந்தது. கொழும்பில் உள்ள இலங்கை அறக்கட்டளையில் இந்த நிகழ்வு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. விழாவிற்கு வருவதற்கு நேத்மிக்கு போக்குவரத்து வசதி இல்லை என்பதால். மொட்டு கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் வாகனம் வழங்குவதாக உறுதியளித்தார். அதன்படி குறித்த வாகனத்தில் நேத்மி அஹிம்சா தனது பயிற்சியாளருடன் கொழும்புக்கு வந்து கொண்டிருந்தார். விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை புறக்கணித்து நேத்மியை நாமல் ராஜபக்சவிடம் அழைத்து செல்லும் சதியை அவர் அறிந்திருக்கவில்லை. பிரதேச சபை உறுப்பினர் சாரதிக்கு வழங்கிய இரகசிய அறிவுறுத்தலின் பிரகாரம் விளையாட்டுத்துறை அமைச்சரின் வீட்டிற்கு செல்லுமாறு கூறியதாக கூறி சிறுமியை நாமல் ராஜபக்சவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். விளையாட்டு அமைச்சருக்குப் பதிலாக அங்கு நாமலைப் பார்த்த நேத்மியும் பயிற்சியாளரும் ஆச்சரியமடைந்தள்ளனர். ஆனால் அவர்களால் அங்கு எதைச் செய்ய முடியவில்லை. நமாலின் மெய்ப்பாதுகாவலர்கள் தொலைபேசிகளை அணைக்குமாறு அறிவுறுத்தியதால் அவர்கள் தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தொலைபேசிகள் அணைக்கப்பட்டிருந்ததால், பாராட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குழம்பிபோயுள்ளனர். இதற்கிடையில் நேத்மி மற்றும் நாமலின் சந்திப்பு குறித்த செய்தியை நாமலின் உதவியாளர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட அது வைரலாகியிருந்தது. நேத்மி பின்னர் நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு வந்து விளையாட்டு அதிகாரிகளிடம் தங்களுக்கு நேர்ந்த விடயத்தை கூறியதும் அனைவரும் கவலையடைந்ததாக குறித்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது

நாமல் ராஜபக்ச எம்.பி பொலிஸில் புகார்…

ஞாயிறு பத்திரிகையில் வெளியான குறித்த செய்தி தொடர்பில் முறையான, முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தங்காலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

No comments

Powered by Blogger.