Header Ads



ஜனாதிபதியை நியமிப்பதில் ஊழல், முறைகேடுகள் - பாராளுமன்ற சலுகை வசதிகள் கொடுக்கப்பட்டன


இடைக்கால ஜனாதிபதியை நியமிப்பதில் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒன்று சேர்ப்பதில் பல்வேறு அனுகூலங்களும் சலுகைகளும் வழங்கப்பட்டன எனவும், அவற்றை ஊழல் மற்றும் முறைகேடுகள் என்று கூறலாம் எனவும், அந்த சலுகைகள் வடிவில் முறைகேடுகளை தொடர அமைச்சரவை பத்திரம் கூட சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (16) தெரிவித்தார்.

நமது நாடு பொருளாதார, சமூக மற்றும் அரசியல் பேரழிவை எதிர்கொண்டிருக்கும் நேரத்தில் தற்போதைய பிரதமரால் விசித்திரமான அமைச்சரவைப் பத்திரமொன்று  சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் அடுத்த சில மாதங்களுக்கு இடைக்கால ஜனாதிபதி நியமனத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பல வசதிகளை தொடர்ந்தும் சில மாதங்களுக்கு நடைமுறைப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அவர்  தெரிவித்தார்.

இடைக்கால ஜனாதிபதி நியமனத்தில் தடையின்றி பங்கேற்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாகவும், இந்த வசதி மேலும் தொடர்ந்து செயற்படுத்த அனுமதி வழங்கப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 5 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் வசதி, சாரதி வசதி, போக்குவரத்து வசதிகள் கூட செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

நாட்டில் குழந்தைகள் மற்றும் பெண்களின் ஊட்டச்சத்து குறைபாடு வேகமாக அதிகரித்து வரும் நேரத்தில், அவர்களுக்கு ஊட்டச்சத்துச் சலுகைகள் வழங்குவதற்கு பதிலாக, இது போன்ற அரசியல் விளையாட்டுகள் அரங்கேறி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தேசிய மக்கள் பேரவையின் மகளிர் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் கூட்டம் இன்று (16) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்றதோடு, இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டைக் கட்டியெழுப்பும் போர்வையில் மேற்கொள்ளப்படும் போலியான செயல்களுக்கு தான் ஒத்துழைப்பு வழங்குவதில்லை எனவும், அரசாங்கத்தால் பாராளுமன்ற உறுப்பினர் ஏலமும் கூட நடத்தப்படுவதாகவும், இத்தகைய விடயங்களை முன்னெடுக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும், இந்த அரசியல் சூதாட்டத்திற்கு தான் தயாராக இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.