நீதவான் விடுத்த அதிரடி உத்தரவு, சிக்குவாரா சனத் நிஷாந்த..?
நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த நீதிமன்றத்தை அவமதித்ததாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) குற்றம் சுமத்தியிருந்தது.
நேற்று (23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை தப்ப வைப்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகளும், சில நீதிபதிகளும் பொறுப்பாவார்கள். “சில நீதிபதிகள் இதற்கு பொறுப்பேற்க வேண்டும், அவர்கள் இந்த குற்றவாளிகளுக்கு ஒரே நாளில் பிணைவழங்குகிறார்கள்,” என்று தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த ஜே.வி.பி உறுப்பினரும் சட்டத்தரணியுமான சுனில் வட்டகல, நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த நீதித்துறையை அவமதித்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் அசல் காணொளிகளை பெற்றுக்கொள்ளுமாறு கோட்டை நீதவான் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு இன்று உத்தரவிட்டுள்ளார்.
நீதித்துறையை அவதூறாகப் பேசும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏதேனும் கருத்துக்களை வெளியிட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதவான் மேலும் உத்தரவிட்டார்.
இதனிடையே நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக இனம்காணப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ib
Post a Comment