Header Ads



ராஜபக்சவினர் இல்லாத அரசாங்கத்தை அமைக்க வேண்டும் - சம்பிக்க


 நாட்டை வங்குரோத்து அடைய செய்த அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் சுதந்திரமாக நடமாடும் போது, வங்குரோத்து நிலைமை காரணமாக தமது வாழ்க்கை அழிக்கப்பட்டமைக்கு எதிராக வீதிக்கு இறங்கிய மக்களை தண்டிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.


கண்டி டேவோன் ஹோட்டலில் நடைபெற்ற கட்சியினருடனான சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.


மக்களின் நம்பிக்கை வெல்ல அரசாங்கம் அடக்குமுறையை நிறுத்த வேண்டும். மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதே தற்போதைய அரசாங்கத்திற்கு இருக்கும் சவால். மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டுமாயின் அடக்குமுறையை நிறுத்த வேண்டும்.


ஒருவர் சட்டத்தை மீறி செயற்பட்டால், அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதை எதிர்க்க போவதில்லை. அனைவருக்கு நியாயமான முறையில் சரிசமமாக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.


நாட்டை அதளபாதாளத்திற்குள் கொண்டு செல்ல அடிப்படை காரணமாக அமைந்த ராஜபக்சவினர் மீண்டும் அரசியல் களத்திற்கு வந்து செயற்பட்டு வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது. ராஜபக்சவினர் இல்லாத அரசாங்கத்தை அமைப்பது ஜனாதிபதியின் பொறுப்பு


மீண்டும் தமது மோசடிகளை முன்னெடுத்துச் செல்ல அவர்கள் முயற்சித்து வருகின்றனர். அமைக்கப்பட உள்ள பல்கட்சி அல்லது சர்வக்கட்சி அரசாங்கத்தை ஊழல்வாதிகள் மற்றும் ராஜபக்சவினர் இல்லாத அரசாங்கமாக அமைக்கும் பொறுப்பு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.


அப்படியில்லை என்றால், அதன் மீதான அடிப்படையான நம்பிக்கை இல்லாமல் போகும். ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான மற்றும் நாட்டின் வங்குரோத்து நிலைமைக்கு காரணமான அரசியல்வாதிகளிடம் இருந்து விடுதலை பெற்ற நாட்டை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


அப்படியில்லை என்றால், அரசாங்கம் எப்படியான அடக்குமுறையை முன்னெடுத்தாலும் மக்கள் போராட்டங்களை நோக்கி தள்ளப்படுவார்கள் எனவும் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார். 

No comments

Powered by Blogger.