இலங்கையில் சீனத் தூதுவரின் கட்டுரைக்கு, இந்தியா பதிலடி
இலங்கைக்கான சீனத் தூதர் இலங்கை பத்திரிகை ஒன்றில் அமெரிக்காவையும், பெயர் குறிப்பிடாமல் இந்தியாவையும் விமர்சித்து எழுதிய கட்டுரை ஒன்றுக்கு இந்தியத் தூதரகம் கடும் பதிலடி தந்து ட்வீட் செய்துள்ளது.
சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபைத் தலைவர் நான்சி பெலோசி தைவான் வருகை புரிந்ததையும், சீனாவின் யுவான் வாங் 5 ஆய்வுக் கப்பலை இந்தியாவின் எதிர்ப்பை மீறி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட இலங்கை அனுமதித்த செயலையும் ஒப்பிட்டு இலங்கைக்கான சீனத் தூதர் சே ஜென்ஹாங் இலங்கையில் வெளியாகும் ஸ்ரீலங்கா கார்டியன் பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.
சீனத் தூதரின் கட்டுரை
'ஒற்றை சீனக் கொள்கையில் இருந்து யுவாங் வாங் 5 வரை' என்று தலைப்பிட்ட அந்த ஆங்கிலக் கட்டுரையில், நான்சி பெலோசி வருகையும், யுவான் வாங் 5 கப்பல் ஹம்பாந்தோட்டை வந்ததும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பற்றதாகவும், பல்லாயிரம் கி.மீ. தூர இடைவெளியில் நடந்ததாகத் தோன்றினாலும், இந்த இரண்டும் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. குறிப்பாக இரு நாடுகளும் பரஸ்பரம் தங்கள் இறையாண்மையை, பிரதேச ஒருமைப்பாட்டை பாதுகாத்துக்கொள்ளும் விவகாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று குறிப்பிட்டுள்ளார் ஜென்ஹாங்.
நான்சி பெலோசி வருகையின்போது "இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அரசியல் கட்சிகளும், சமூகக் குழுக்களும் சீனாவுக்கான நீதியைப் பேசியதற்காக நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 1971ம் ஆண்டு ஐ.நா. சபையில் இலங்கை உள்ளிட்ட 22 நாடுகளால் முன்மொழியப்பட்டு ஐ.நா.வின் 26வது பொதுச் சபைக் கூட்டத்தில் அபரிமிதமான பெரும்பான்மையோடு நிறைவேற்றப்பட்ட '2758 எண்ணிடப்பட்ட' தீர்மானம் ஒற்றை சீனக் கொள்கையை அதிகாரபூர்வமாக ஏற்கிறது. தைவான் சீனாவின் பிரிக்க முடியாத பகுதி. மக்கள் சீனக்குடியரசுதான் அந்தப் பகுதியை பிரிதநிதித்துவப் படுத்தும் சட்டபூர்வமான அரசாங்கம்" என்று குறிப்பிட்ட சீனத் தூதர், நான்சி பெலோசியின் வருகை ஒற்றை சீனக் கொள்கையை மோசமாக மீறுவதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கை 450 ஆண்டுகாலம் மேற்கத்திய காலனியாதிக்கத்தில் இருந்தது என்றும் 17 முறை அண்டை நாட்டின் அத்துமீறலுக்கு உள்ளானதாகவும் குறிப்பிட்ட சீனத் தூதர், 1840 முதல் 1949 வரை அதுபோன்ற அவமானத்துக்கு சீனாவும் உள்ளானதாகவும், அதனால்தான் சர்வதேச அரங்கில் இலங்கையின் இறையாண்மை, சுதந்திரம், பிரதேச ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். யுவான் வாங் 5 கப்பலின் ஆய்வு நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டது என்றாலும், பாதுகாப்பு கவலைகள் என்ற பெயரில் இலங்கையின் ஹம்பாத்தோட்டை துறைமுகத்தில் அதனை நிறுத்த எதிர்ப்புத் தெரிவித்து வெளிநாட்டுத் தலையீடு இருந்ததாகவும் அவர் இந்தியாவை மறைமுகமாக அந்தக் கட்டுரையில் விமர்சித்திருந்தார்.
மேலும், தூரத்திலும், அருகாமையிலும் உள்ள சில நாடுகள் ஆதாரமற்ற காரணங்களின் அடிப்படையில் இலங்கையை மிரட்டுவதாகவும் அவர் கூறினார். அடுத்த மாதம் நடக்கவுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் மனித உரிமை பிரச்சனை கிளப்பப்படலாம் என்று கூறிய அவர் நாடு பொருளாதார நெருக்கடியில் இருக்கும்போது மனித உரிமையைப் போதிக்கும் நாடுகள் உறுதியான உதவியைத் தருவார்களா அல்லது மனித உரிமை என்ற முகமூடியோடு உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தியா எதிர்வினை
இந்தக் கருத்தால் எரிச்சலடைந்த இந்தியா, ட்விட்டரில் கடுமையாக எதிர்வினையாற்றியது. இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் இருந்து தொடர் ட்வீட்டுகள் மூலம் இந்தியா தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்தது.
தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் இதே கருத்தை ட்வீட் செய்திருந்தது இந்தியத் தூதரகம்.
"சீனத் தூதுவரின் கருத்துகள் குறித்து நாம் கவனஞ்செலுத்தியுள்ளோம். அடிப்படை இராஜதந்திர நெறிமுறைகளை அவர் மீறுவது, ஒரு தனிப்பட்ட பண்பாகவோ அல்லது ஒரு பொதுவான தேசிய அணுகுமுறையின் பிரதிபலிப்பாகவோ இருக்கலாம்," என்று ட்வீட் செய்த இந்தியத் தூதரகம்,
மேலும் "இலங்கைக்கு வடக்கே அமைந்திருக்கும் அயல்நாட்டின் மீதான அவரது நோக்கு, அவரது சொந்த நாட்டினுடைய நடத்தையின் பிரதிபலிப்பாக இருக்கலாம். ஆனால், இந்தியா அவ்வாறானதொன்றல்ல என்பதனை நாம் அவருக்கு உறுதிப்படுத்துகின்றோம்.
விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சிக்குரியதெனக்கூறப்படும் கப்பலொன்றின் வருகைக்கு பூகோள அரசியல் சூழலை பொருத்துவிக்கும் அவரது நடவடிக்கை ஒரு பாசாங்கான செயலாகும்.
தற்போது, மறைமுகமானதும் கடன்களை அடிப்படையாகக் கொண்டதுமான நிகழ்ச்சி நிரல்களே , குறிப்பாக சிறிய நாடுகளுக்கு மிகப் பாரிய சவாலாக உள்ளன. அத்துடன், அண்மைக்காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் ஓர் எச்சரிக்கை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு தற்போது ஆதரவு தேவையாக உள்ளதே தவிர மற்றொரு நாட்டின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலான தேவையற்ற சர்ச்சைகளோ, அழுத்தங்களோ அல்ல" என்று இந்தியா கூறியுள்ளது.
தாய்வான் நீரிணையின் இராணுவமயமாக்கல் மற்றும் சீனாவின் யுவான் வங் 5 கப்பலின் ஹம்பாந்தோட்டை வருகை ஆகியவற்றை தொடர்புபடுத்தி இலங்கைக்கான சீனத்தூதுவர் எழுதிய கட்டுரை குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும்முகமாக உயர் ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் மேலுள்ள ட்விட்டர்பதிவுகளை வெளியிட்டுள்ளார் என்ற குறிப்பும் அதில் வெளியிடப்பட்டது.
Post a Comment