கோட்டாபயவின் பரிந்துரையை நிராகரித்து, தனது விசுவாசியின் மகனுக்கு பதவி
கோட்டாபய அதிகாரத்தில் இருக்கும் போது பரிந்துரை செய்த ஜப்பானுக்கான தூதுவரை, தற்போது அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்க நிராகரித்துள்ளார்.
ஜப்பானுக்கான சிறிலங்கா தூதுவராக பரிந்துரைக்கப்பட்ட, ஓய்வுபெற்ற அட்மிரல் ஜயநாத் கொலம்பகேயின் நியமனத்தையே, அதிபர் ரணில் விக்ரமசிங்க நிறுத்தியுள்ளார்.
வெளிநாட்டுச் சேவை அதிகாரி அருணி விஜேவர்தன மே மாத இறுதியில் வெளிவிவகாரச் செயலாளராக நியமிக்கப்பட்டமையை அடுத்து, கொலம்பகே ஜப்பானில் பதவியேற்பதற்கு முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச பரிந்துரைத்தார்.
இவ்வாறான நிலையிலேயே கொலம்பகேவின் நியமனமத்தை தற்போது ரணில் நிறுத்தியுள்ளார்.
அவருக்கு பதிலாக மூத்த வெளிநாட்டுச் சேவை அதிகாரி ரொட்னி பெரேராவை ரணிலின் புதிய நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.
கொலம்பகேவுக்கு பதிலாக பெரேராவை நியமிக்கும் முடிவை அரசாங்கம், நாடாளுமன்றத்தின் உயர் பதவிகள் குழுவிற்கு (HPC) அறிவித்துள்ளது.
இத்தகைய இராஜதந்திர நியமனங்களை சபாநாயகர் தலைமையிலான குழு ஆராய்வது ஒரு சம்பிரதாயமாக கருதப்படுகிறது.
அரசாங்கத்தை பதவி விலகக்கோரிய அரசியல் பிரசாரங்களுக்கு மத்தியில் இந்த நியமனம் வழங்கப்பட்டது. ரொட்னி பெரேராவின் மூத்த சகோதரரான ரொனால்ட் பெரேரா, இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் (SLIC) தலைவராக அண்மையில் நியமனம் பெற்றார்.
அவர்கள் இருவரும் ரணில் விக்ரமசிங்கவின் விசுவாசியான மறைந்த முன்னாள் அமைச்சர் போல் பெரேராவின் மகன்களாவர்.
ரொட்னி பெரேரா முன்னர் சிறிலங்காவின் தூதுவராக வோஷிங்டனில் பணியாற்றினார். JAICA(ஜெய்க்கா)நிதியுதவியுடன் கூடிய இலகு ரயில் திட்டம், முன்னாள் அதிபர் கோட்டாபயவினால் ரத்து செய்யப்பட்டதால், மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள ஜப்பானுடனான உறவை சரிசெய்ய வேண்டும் என்பதற்காகவே கொலம்பகேக்கு பதிலாக, ரொட்னி பெரேரா நியமிக்கப்படவுள்ளார் என்று அரசாங்கம் கூறுகிறது.
Post a Comment