இழுத்தடிக்கப்படும் ஹிஜாஸின் வழக்கு விசாரணை
- எம்.எப்.எம்.பஸீர் -
‘இவ்வழக்கை துரிதமாக விசாரித்து முடிப்பதற்காகவே நீதிமன்ற விடுமுறை காலத்தில் கூட அதனை விசாரணைக்கு இரு தரப்பின் ஒப்புதலுடன் அழைத்தேன். ஆகஸ்ட் 22, 23 ஆம் திகதிகளில் வழக்கை விசாரிக்கவே திட்டமிடப்பட்டது. எனினும் சாட்சி விசாரணைகளுக்கு அரச தரப்பினரின் சட்டத்தரணிகள் தயாரில்லை என தெரிவித்துள்ளதால் என்னால் வழக்கை விசாரணை செய்ய முடியவில்லை. அதன் காரணமாகவே இந்த வழக்கு பிற்போடாப்படுகின்றது.’
‘சி.ஐ.டியினரின் நடவடிக்கைகள் தொடர்பில் நான் கடும் அதிருப்தி அடைகிறேன். அவர்களை எச்சரிக்கிறேன். இந்த (ஹிஜாஸ் ஹிஸ்புல்லா குறித்த) வழக்கு விசாரணைகள் சி.ஐ.டியினரின் செயற்பாடுகள் காரணமாக தொடர்ச்சியாக இவ்வாறு இழுத்தடிக்கப்படுகிறது, அதன் பிரதிபலன் பூரண கட்டமைப்பினையும் பாதிக்கும். மக்கள் நீதிமன்றையே குறை கூறுவர். கடந்த தவணையின்போதும் ( மே மாதம் ) சி.ஐ.டியினர் மூல ஆவணமொன்றினை எடுத்துவராததன் காரணமாகக் குறுக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. இம்முறை வழக்கின்போதும் ( ஜூன் 10 ஆம் திகதி)சி.ஐ.டியினர் அதே தவறைச் செய்துள்ளனர். வழக்கு விசாரணைக்கு வரும்போது மூல ஆவணத்தை எடுத்துவரவேண்டும் என்ற அடிப்படை அறிவுகூட சி.ஐ.டியினருக்கு இல்லையா? சி.ஐ.டியினரை விட சாதாரண பொலிஸார் திறமையாக செயற்படுகின்றனர்.’
மேலுள்ள இந்த இரு கருத்துக்களும் புத்தளம் மேல்நீதிமன்ற நீதிபதி நதி அபர்ணா சுவந்துருகொடவினால் திறந்த நீதிமன்றில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களாகும்.
முதலில் உள்ள கருத்து, நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 23) வழக்கு விசாரணைக்கு வந்த போது குறிப்பிட்ட விடயமாகும்.
மற்றையது, கடந்த ஜூன் 10 ஆம் திகதி வழக்கு விசாரணைகளிடையே, இரண்டாவது பிரதிவாதி ஷகீல் மெளலவி சார்பில் மன்றில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரள குறுக்கு விசாரணைகளை ஆரம்பித்து, அரசதரப்பின் பிரதான சாட்சியாளர் மலிக், கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத்திணைக்களத்திற்கு வழங்கிய வாக்குமூலத்தில் கூறிய முன்னுக்குப்பின் முரணான விடயங்களை சுட்டிக்காட்ட அவ்வாக்குமூலத்தின் மூலப்பிரதியை சாட்சியாளருக்குக் காண்பிக்குமாறு கோரியிருந்தார். அச் சந்தர்ப்பத்தில் மன்றில் ஆஜராகியிருந்த சி.ஐ.டியின் பொலிஸ் பரிசோதகர் துஷார தான் கொண்டுவந்திருந்த சில கோவைகளைக் காண்பித்தபோதிலும், குறித்த வாக்குமூலம் அதில் இருக்கவில்லை. இதனையடுத்து வழக்கை ஒத்தி வைத்து நீதிபதி நதீ அபர்னா சுவந்துருகொட தெரிவித்த விடயமாகும். இதன்போது வழக்கில் ஆஜராகும் சி.ஐ.டி பொலிஸ் பரிசோதகர் துஷாரவிற்கு எதிராக பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறு நீதிபதி குற்றப்புலனாய்வுத்திணைக்களத்தின் பிரதிப்பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்த போதும் அதுவும் நடந்ததாக தெரியவில்லை.
அடிப்படைவாதப் போதனைகளை செய்ததாக சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, புத்தளம் அல்-சுஹைரியா அரபுக்கல்லூரியின் அதிபர் ஷகீல் கான் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் புத்தளம் மேல் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலின் கீழும், விளக்கமறியலிலும் நீண்ட நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னணியிலும், சர்வதேச அழுத்தங்கள், கரிசனைகளை அடுத்தே, இந்த வழக்கு உண்மையில் பதிவு செய்யப்பட்டது.
கைதின் போது, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் சூத்திரதாரியை கைது செய்துவிட்டோம் என்ற அளவுக்கு பொலிஸ் திணைக்ளத்தின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன. எனினும் நீதிமன்றில் முன் வைக்கப்பட்டுள்ள குற்றப் பத்திரிகையை பார்க்கும் போதும், சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக பலரை அச்சுறுத்தி (அஹ்னாப் ஜஸீம், வஸீர் மெளலவி , ஷகீல் மெளலவி உள்ளிட்டோர் – வெவ்வேறு வழக்குகளில் இது தொடர்பில் நீதிமன்றங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன) சி.ஐ.டி.யினர் சாட்சியம் பெற முயன்றமையை அவதானிக்கும் போதும் வழக்கின் பின்னணி தெளிவாக தெரிகிறது.
எவ்வாறாயினும் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதிக்கும் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் புத்தளம் அல் சுஹைரியா மத்ரஸா பாடசாலையில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு, கற்றுக்கொடுக்கப்பட்ட சொற்கள் ஊடாகவோ, தவறான பிரதி நிதித்துவம் ஊடாகவோ பல்வேறு மதங்களுக்கு இடையில் மோதல் ஏற்படும் வண்ணம் எதிர் உணர்வுகளை தூண்டும் விதமாக சொற் பொழிவினை நடாத்தியமை, அதற்காக சதி செய்தமை தொடர்பில் பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) எச் பிரிவுடன் இணைத்து கூறப்படும் அச்சட்டத்தின் 3 (அ) பிரிவின் கீழ் தண்டனைக் குறிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்பில், ‘இஸ்ரேலியர்கள் கைப்பற்றியிருப்பது, எமது பள்ளிவாசல்கள். இலங்கையில் கத்தோலிக்கர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தினாலேயே அவர்கள் அச்சப்படுவர்.’ என கூறி இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்த வீடியோக்களை கண்பித்தமை ஊடாக மதக் குழுக்கள் இடையே மோதல் நிலைமையை ஏற்படுத்தும் வண்ணம் உணர்வுகளை தூண்டியதாக பயங்கரவாத தடை சட்டத்தின் 2 (1) எச் பிரிவுடன் இணைத்து நோக்கப்படும் அச்சட்டத்தின் 2 (2) 11 பிரிவின் கீழ் தண்டனைக் குறிய குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த இரு குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் உதவி ஒத்தாசை புரிந்ததாக சுஹைரியா மத்ரஸா பாடசாலை அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீல் மீது பயங்கரவாத தடை சட்ட ஏற்பாடுகள் பிரகாரம் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனைவிட, பலஸ்தீன் – இஸ்ரேல் தொடர்பிலான யுத்த வீடியோ காட்சிகளை காண்பித்து ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கூறியதாக கூறப்படும் வசனங்கள் ஊடாக வெறுப்புணர்வுகளை விதைத்தாக குற்றம் சுமத்தி சிவில் அரசியல் உரிமைகள் குறித்தான சர்வதேச இணைக்கப்பாட்டு சட்டத்தின் 3 (1) ஆம் உறுப்புரையுடன் இணைத்து பார்க்கப்படும் அச்சட்டத்தின் 3 (3) ஆம் உறுப்புரையின் கீழ் குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராகவும், அதற்கு உதவி ஒத்தாசை புரிந்தமை தொடர்பில் மத்ரஸா அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீலுக்கு எதிராகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அப்படியானால், இவ்வழக்கின் சாட்சி விசாரணைகளை துரிதமாக முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பது, வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபரின் கடமையாகும். எனினும் இந்த வழக்கு, தொடர்ச்சியாக இழுத்தடிக்கும் ஒரு போக்கை அவதானிக்க முடிகிறது.
வழக்கின் முதல் பிரதிவாதி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் ஒரு பிரபல மனித உரிமைகள் குறித்த சட்டத்தரணியாவார். இவ்வழக்கு தொடர்ச்சியாக இழுத்தடிக்கப்படுவது, மனித உரிஐகள் விவகாரங்களையும், அவரது ஏனைய வழக்குகளையும் கூட பாதிக்கக் கூடியது.
2 ஆ பிரதிவாதி ஷகீல் மெளலவி மற்றும் அவரது முழு வாழ்வியலையும் இவ்வழக்கு பாதித்துள்ளது.
அப்படியானால் உண்மையில் இவ்வழக்கு அவசரமாக விசாரிக்கப்பட வேண்டியது. எனினும் இவ்வழக்கின் போக்கில் அவ்வாறான எந்த நகர்வுகளையும் அவதானிக்க முடியவில்லை.
இந்த இழுத்தடிப்பு நிலைமையானது, இலங்கையின் குற்றவியல் நீதிப் பொறிமுறையில் உள்ள மிகப் பெரும் குறைபாடாகும். இதனால் பெரும்பாலான அப்பாவிகள், குற்றமிழைக்காமல், பல ஆண்டுகள் அலைக்கழிக்கப்படுகின்றனர் என்பது யாரும் மறுக்க முடியாத ஓர் உண்மை எனலாம்.
சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக சி.ஐ.டி.யினருக்கு வழங்கிய வாக்குமூலத்திலோ, நீதிவானுக்கு வழங்கிய இரகசிய வாக்குமூலத்திலோ தான் எதனையும் தெரிவிக்கவில்லையென அரச தரப்பின் பிரதான சாட்சியாளர் மொஹமட் மலிக் கடந்த ஜூன் 10 ஆம் திகதி நீதிமன்றில் ஒப்புக்கொண்டிருந்தார்.
வழக்கில் குறுக்கு விசாரணைகளின்போது ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்காக ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி நளிந்த இந்திரதிஸ்ஸவின் கேள்விகளுக்கு பதிலளித்து பிரதான சாட்சியாளர் மேற்படி விடயத்தை ஒப்புக்கொண்டிருந்தார். ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவைப் பெயர் குறிப்பிட்டோ அல்லது அவரது ஆள் அடையாளங்களைக் குறிப்பிட்டோ எந்தவிதமான வாக்குமூலங்களையும் தான் வழங்கவில்லை என்பதை இதன்போது அவர் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறான நிலையில், இந்த வழக்கு இழுத்தடிக்கப்படுவது கவலைக்குரியதாகும்.
சரி, ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் விவகார வழக்கில் கடந்த 22,23 ஆம் திகதிகளில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம். நேரடியாக சொல்வதானால், திட்டமிட்டபடி எதுவுமே நடக்கவில்லை என்பதே உண்மை, 22 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு தயாராக இல்லை என (சாட்சி நெறிப்படுத்தலை முன்னெடுக்க) சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகும் சட்ட வாதி, பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளுக்கு அறிவித்து, வேறு ஒரு திகதியை பரிந்துரைத்து அதில் சாட்சி விசாரணைகளை முன்னெடுக்க கோரியுள்ளார்.
அரச சட்டவாதி இல்லாமல், குறித்த வழக்கின் சாட்சி நெறிப்படுத்தல் சாத்தியமில்லை என்ற ரீதியில், அத்தகைய பரிந்துரைகளை செயற்படுத்துவதை தவிர வேறு சிறந்த நகர்வுகள் இருப்பதாக தெரியவில்லை என்பதால் பிரதிவாதிகளின் சட்டத்தரணிகள் வேறு வழியின்றி இணங்கியுள்ளனர். அதன்படி அன்று திறந்த மன்றில் வழக்கு விசாரணைக்கு கூட அழைக்கப்படவில்லை.
எனினும் புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபஹி நதீ அபர்ணா சுவந்துருகொட, ஆகஸ்ட் 23 ஆம் திகதி வழக்கை கண்டிப்பாக
திறந்த மன்றில் அழைப்பதாக இரு தரப்பினருக்கும் அறிவித்திருந்த நிலையில், அன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு வந்தது.
சட்டமா அதிபர் தொடர்ந்துள்ள வழக்கை துரிதமாக விசாரணை செய்வதற்காகவே தான், நீதிமன்ற விடுமுறை காலப்பகுதியிலும் அவ்வழக்கை விசாரணைக்கு அழைத்ததாகவும், சட்டவாதிகளும் சட்டத்தரணிகளும் விசாரணைக்கு தயாரின்மையால் இவ்வழக்கு தொடர்ந்து ஒத்தி வைக்கப்படுவதாக புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி நஹீ அபர்னா சுவந்துருகொட இதன்போது ( ஆலஸ்ட் 23 )திறந்த நீதிமன்றில் அறிவித்தார்.
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு கடந்த 23 ஆம் திகதி புத்தளம் மேல்நீதிமன்ற நீதிபதி நதி அபர்ணா சுவந்துருகொட முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போது பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ள ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, அரபுக்கல்லூரியின் அதிபர் ஷகீல் கான் ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தனர். ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்காகவும், மத்ரசா அதிபருக்காகவும் சட்டத்தரணி ஷெனால் பெரேரா மன்றில் ஆஜரானார். வழக்குத்தொடுனர் சட்டமா அதிபர் சார்பில் வழக்கை நெறிப்படுத்த வழமையாக பிரதி சொலிஸிட்டர் ஜெனரல்களான சுதர்ஷன டி சில்வா, லக்மினி கிரிஹாகம ஆகியோர் ஆஜராகும் நிலையில், அரச சட்டவாதி நிமேஷா டி அல்விஸ் முன்னிலையானார். இந்நிலையில் கடந்த 23 ஆம் திகதி அரசதரப்பின் பிரதான சாட்சியாளரிடம் மேலதிக குறுக்கு விசாரணைகள் தொடர இருந்தன. எனினும் பிரதான சாட்சியாளர் மலிக் மன்றில் ஆஜராகியிருக்கவில்லை.
இதன் போது மன்றில் விடயங்களை முன் வைத்த அரச சட்டவாதி நிமேஷா டி அல்விஸ், பிரதான சாட்சியாளரை அடுத்த தவணையின் போது மன்றுக்கு அழைத்து வரும் பொறுப்பை வழக்குத் தொடுநரான முறைப்பாட்டாளர் தரப்பு ஏற்பதாக கூறினார். அத்துடன் வழக்கின் அடுத்த தவணை விசாரணைகளை ஒக்டோபர் 4 மற்றும் 11 ஆம் திகதிகளில் நடாத்துமாறும் அன்றைய தினம் மன்றில் ஆஜராக முறைப்பாட்டாளர் தரப்பின் 2,3 ஆம் சாட்சியாளர்களை மன்றில் ஆஜராக அறிவித்தல் பிறப்பிக்குமாறும் கோரினார்.
எனினும் ஒக்டோபர் 11 ஆம் திகதி தனக்கு வேறு வழக்கொன்று பட்டியலிடப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்த நிலையில், 4 ஆம் திகதி விசாரணை செய்ய முடியும் என குறிப்பிட்டார்.
இதன்போது ஒக்டோபர் 4 ஆம் திகதி வழக்கை விசாரணைக்கு எடுக்க பிரதிவாதிகளுக்கு ஆட்சேபனை உள்ளதா என நீதிபதி வினவினார். எனினும் பிரதிவாதிகளுக்காக மன்றில் ஆஜரான சட்டத்தரணி ஷெனால் பெரேரா அதற்கு ஆட்சேபனை இல்லை என கூறினார்.
இதனையடுத்து திறந்த மன்றில் நீதிபதி நதீ அபர்னா சுவந்துருகொட ‘ இவ்வழக்கை துரிதமாக விசாரித்து முடிப்பதற்காகவே நீதிமன்ற விடுமுறை காலத்தில் கூட அதனை விசாரணைக்கு இரு தரப்பின் ஒப்புதலுடன் அழைத்தேன். எனினும் சாட்சி விசாரணைகளுக்கு இரு தரப்பின் சட்டத்தரணிகளும் தயாரில்லை என தெரிவித்துள்ளதால் என்னால் வழக்கை விசாரணை செய முடியவில்லை. அதன் காரணமாகவே இந்த வழக்கு பிற்போடப்படுகின்றது.’ எனக் கூறி வழக்கை ஒக்டோபர் 4 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார். அன்றைய தினம் 2,3 ஆம் இலக்க அரச சாட்சியாளர்களுக்கும் மன்றில் ஆஜராக நீதிபதி அறிவித்தல் அனுப்பினார்.-Vidivelli
Post a Comment