Header Ads



'உணவற்றோருக்கு உணவு' கிண்ணியா இளைஞர் குழுவொன்றின் மனிதாபிமான பணி


நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினை காரணமாக 'உணவற்றோருக்கு உணவு' எனும் வேலைத் திட்டம் கிண்ணியாவிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டத்தை கிண்ணியாவின் மனிதநேய


சிந்தனையுள்ள இளைஞர்கள் ஒன்றிணைந்து ஆரம்பித்து வைத்துள்ளனர். தற்போது ஒரு வாரம் பூர்த்தியாகி இருக்கின்ற தறுவாயில் இத்திட்டமானது பிரதேசத்தைத் தாண்டி அமோக வரவேற்பை பெற்றுள்ளதோடு வசதி படைத்தவர்களிடம் இருந்து நன்கொடைகளும் கிடைக்கப் பெற்ற வண்ணமுள்ளன.


பொருளாதாரப் பிரச்சினை காரணமாக உணவின்றி தவிக்கும் ஏழை மக்களுக்காக உணவினை வழங்கும் நோக்கில் இத்திட்டம் நாடளாவிய ரீதியில் பல இடங்களில் நடைபெற்று வருகின்றது. கிண்ணியாவில் இத்திட்டத்தில் முழுமையாக படித்து முடித்த இளைஞர்கள் சிலர் பங்கேற்றிருப்பது மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சமூக ஊடகங்களிலும் இதற்கான பாராட்டுகள் குவிந்துள்ளன.


குறித்த வேலைத் திட்டத்தின் ஊடாக கிண்ணியா குட்டிக்கராச்சியில் பொது இடமொன்றில் சந்தை போன்ற அமைப்பில் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. 


தற்போதைய பொருளாதார நெருக்கடியான சூழலில் உணவின்றி தவிக்கும் மக்கள் குறித்த இடத்திற்கு வருகை தந்து தங்களுக்குத் தேவையான பொருட்களை பெற்றுச் செல்ல முடியும் என்று ஏற்பாட்டாளர்களான இளைஞர்கள் தெரிவிக்கின்றனர். அத்தியாவசிய பொருட்களை நன்கொடையாக வழங்கக் கூடியவர்கள் அவ்விடத்திற்கு வருகை தந்து பொருட்களை வழங்க முடியும் என அந்த இளைஞர்கள் குறிப்பிடுகின்றனர். 


இவ்விடத்தை பார்வையிடுவதற்கும் உதவிகளை வழங்குவதற்கும் பலர் வருகை தந்த வண்ணமிருக்கின்றனர். தற்போது இத்திட்டத்தின் மூலம் வறுமைக்கோட்டின் கீழ் வாழுகின்ற அத்தியாவசிய உணவுகளின்றி கஷ்டத்தை எதிர்கொள்ளும் மக்கள் பாரிய நன்மை அடைந்து வருகின்றனர்.  


அதேவேளை, இத்திட்டத்தை கிண்ணியாவின் பல பிரதேசங்களிலும் ஆரம்பிப்பதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.அதுமட்டுமன்றி, கிண்ணியாவின் அயல் பிரதேசங்களிலும் இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. அந்த வகையில் கிண்ணியாவின் அயல் பிரதேசமான கந்தளாய் பிரதேசத்திலுள்ள சமூகத் தலைவர்களும் இவ்விளைஞர்களினால் கவரப்பட்டு அவ்வாறானதொரு வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 


மனிதநேய சிந்தனையுள்ள சில இளைஞர்களின் சிந்தனைக் கருவில் உதித்த இத்திட்டமானது தற்போதைய பொருளாதார நெருக்கடிமிக்க சூழலில் பல ஏழை மக்களின் வயிற்றுப் பசியைத் தீர்த்திருக்கின்றமை பாராட்டத்தக்க விடயமாகும். 


இளைஞர்களென்றால் சந்தியில் அமர்ந்து அரட்டையடிக்கின்ற கலாசாரம் முற்றுப் பெற்று ஆக்கபூர்வமான விடயங்களிலும் அவர்களால் பங்கெடுக்க முடியும் என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும் என சமூக ஆர்வளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.


இர்ஷாத் இமாமுதீன்

No comments

Powered by Blogger.