ஜெய்லானி பள்ளிவாசல் காணியில் 70 % அபகரிப்பு, 2 ஸியாரங்கள் மண்ணில் மூடப்பட்டன, விஜயம் செய்ய முஸ்லிம்கள் அச்சம்
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கூரகலயில் அமைந்துள்ள வரலாற்றுப்புகழ்மிக்க தப்தர் ஜெய்லானி பள்ளிவாசலை அவ்விடத்திலிருந்தும் அகற்றிக்கொள்ள முடியாது. ஜெய்லானி பள்ளிவாசலை பாதுகாப்பது எமது கடமையாகும்.
பள்ளிவாசலை புனர்நிர்மாணம் செய்வதற்கு பள்ளிவாசல் நிர்வாகம் தீர்மானித்துள்ளது என பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் இப்திகார் அஸீஸ் தெரிவித்தார்.
தப்தர் ஜெய்லானி பள்ளிவாசல் நிர்வாகம் பள்ளிவாசல் தொடர்பான எதிர்கால செயற்திட்டங்களை பள்ளிவாசலில் ஒன்று கூடி ஆராய்ந்தது.
பள்ளிவாசல் நிர்வாக சபைத்தலைவர் இப்திகார் அஸீஸ் தொடர்ந்தும் விடிவெள்ளிக்கு கருத்துத் தெரிவிக்கையில் பள்ளிவாசலில் ஐவேளை தொழுகை ஜும்மா தொழுகை மெளலூது, திக்ரு மஜ்லிஸ் மற்றும் மாதாந்த கொடியேற்றம் போன்றவனவற்றை எவ்வித தடைகளுமின்றி தொடராக முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பள்ளிவாசல் காணியில் சமாதானம் மற்றும் நல்லுறவுக்கான மத்திய நிலையமொன்றினை நிறுவுவதற்கும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிகசாலை,அருங்காட்சியம் என்பனவும் நிறுவப்படவுள்ளன. இந்த மத்திய நிலையம் ஏனைய மதத்தினரை கவரும் வகையில் அவர்கள் இங்கு விஜயம் செய்யும் வகையில் அமைக்கப்படவுள்ளது.
தப்தர் ஜெய்லானியில் வரலாற்றுப் புகழ்மிக்க இரண்டு ஸியாரங்கள் மண்ணில் மூடப்பட்டு விட்டன. அந்த ஸியாரங்களை மீண்டும் திறப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தேரருடன் முன்னெடக்கப்பட்டுள்ளது.
பள்ளிவாசலுக்குச் சொந்தமான காணியில் 70% அபகரிக்கப்பட்டுவிட்டது. இப்பகுதி முஸ்லிம்கள் பெரும்பான்மை சமூகத்துடன் சமாதானமாக நல்லுறவுடன் வாழ்வதற்கே விரும்புகிறார்கள்.
பள்ளிவாசலை இருக்கும் இடத்திலிருந்து அகற்றிக்கொள்ளுமாறு எவருக்கும் உத்தரவிடமுடியாது. இப்பள்ளிவாசல் நூற்றாண்டு கால வரலாறு கொண்டதாகும்.
கூரகலயில் பாரிய தாதுகோபுரம் மற்றும் பன்சலை நிர்மாணிக்கப்பட்டதையடுத்து ஜெய்லானி பள்ளிவாசலுக்கு விஜயம் செய்வதற்கு முஸ்லிம்கள் அச்சம் கொண்டுள்ளனர்.
முஸ்லிம்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை. தப்தர் ஜெய்லானி பள்ளிவாசலுக்கு விஜயம் மேற்கொள்ளலாம். யாத்திரிகர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும்.
பள்ளிவாசலில் ஒவ்வொரு மாதமும் விசேட சமய நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. எதிர்வரும் நவம்பர் மாதம் கந்தூரி வைபவம் ஏற்பாடு செய்யப்படும். பள்ளிவாசலுக்கு விஜயம் செய்யும் மக்களுக்கு தேவையான வசதிகளை பள்ளிவாசல் நிர்வாக சபை ஏற்பாடு செய்துள்ளது.
ஜெய்லானியில் நிறுவப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள சமாதானம், மற்றும் நல்லுறவு மத்திய நிலையத்துக்கும் பள்ளிவாசல் புனர்நிர்மாணப் பணிகளுக்கும் பள்ளிவாசல் நிர்வாகம் முஸ்லிம் சமூகத்திடமிருந்து உதவிகளை எதிர்பார்த்துள்ளது என்றார்.- Vidivelli
Post a Comment