Header Ads



அரசியல்வாதிகள், மக்கள், அதிகாரிகளிடமிருந்து 5.2 பில்லியன் ரூபா நிலுவை - திண்டாடும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை


நாடு முழுவதிலும் 28 இலட்சம் நீர் பாவனையாளர்கள் உள்ள நிலையில், 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட நீர் பாவனையாளர்கள் நீர்க்கட்டணத்தை செலுத்தத் தவறியுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதேவேளை, நாடளாவிய ரீதியில் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு நீர் பாவனையாளர்கள் 5.2 பில்லியன் ரூபாவை நிலுவையாக செலுத்த வேண்டியுள்ளதாகவும் அந்தத் தொகையை அவர்கள் செலுத்தத் தவறியுள்ளதாகவும் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பியல் பத்மநாதா தெரிவித்துள்ளார்.


அத்துடன் பல்வேறு மட்டங்களிலும் உள்ள அரசியல்வாதிகள், வழங்கப்பட்டுள்ள காலத்தில் நீர் கட்டணத்தை செலுத்தத் தவறினால் அவர்களுக்கான நீர் விநியோகத்தை துண்டிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்


அந்த அரசியல்வாதிகள் செலுத்தத் தவறியுள்ள நீர் கட்டணங்களின் நிலுவை 13 மில்லியனுக்கு மேற்பட்டதாகும் என தெரிவித்துள்ள அவர், அமைச்சர்கள், எம்பிக்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோரும் அதில் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


பொது அதிகாரிகள் 90 மில்லியன் ரூபாவை இவ்வாறு செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்..


நீர் கட்டணத்தைச் செலுத்த வேண்டியுள்ள ஓய்வு பெற்ற அமைச்சர்களின் நிலுவையை, ஓய்வூதியத்தில் இருந்து அறவிடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


அது தொடர்பாக பொது நிர்வாக உள்நாட்ட லுவல்கள் அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும், அவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்து அது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


செலுத்தப்படாத மின்கட்டணத்தை மீள அறவிடுவதற்கான பொறிமுறையை ஏற்படுத்துமாறு சபாநாயகரிடம் கடிதம் ஒன்றின் மூலம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் எனினும் இந்த விடயத்தில் சட்ட நடவடிக்கை எடுப்பது அரசியல்வாதிகளின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


ஒரு அமைச்சுக்கு சொந்தமான உத்தியோகபூர்வ இல்லத்தின் நீர் கட்டணத்தை நிர்ணயிப்பது சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளர் என்பதால் இந்த விடயத்தில் அரசியல்வாதிகளை மட்டும் குறை கூற முடியாது என தெரிவித்துள்ள அவர், இனிமேல் உத்தியோக பூர்வ இல்லத்தின் சாவிகள் வழங்கப்படும் போது இரண்டு மாதங்களுக்குள் நிலுவைத் தொகையை செலுத்தாவிட்டால் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என்ற உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


மொத்த நீர் பாவனையாளர்களிடமிருந்தும் 5.2 பில்லியன் ரூபாவை நிலுவையாக அறவிட வேண்டியுள்ளதாகவும் இது மொத்த நிலுவைத் தொகையில் 70 வீதமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


நீர் கட்டண பட்டியல் விநியோகிக்கப்பட்டு 14 நாட்களுக்குள் கட்டணம் செலுத்தாவிட்டால் 1.5 சதவீத கழிவு வழங்கப்படாதுடன் 30 நாட்களுக்குள் பணம் செலுத்தாவிட்டால் 2.5 சதவீதம் கூடுதல் கட்டணமாக அறவிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


நாடளாவிய ரீதியில் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு நீர் பாவனையாளர்கள் செலுத்தத் தவறியுள்ள தொகையின் பெறுமதி எழுநூறு கோடி ரூபாவாகும் என தெரிவித்துள்ள அவர், 10 இலட்சத்துக்கு அதிகமான வாடிக்கையாளர்கள் நீர் கட்டணத்தை செலுத்த தவறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


அரசியல்வாதிகளிடமிருந்து நீர் கட்டண நிலுவைத் தொகையாக 13 மில்லியன் ரூபா அறவிடப்பட வேண்டியுள்ளது. அத்துடன் பொது உத்தியோகபூர்வ இல்லங்களில் வசிக்கும் அதிகாரிகள் 90 மில்லியன் ரூபாவை இவ்வாறு வழங்க வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


லோரன்ஸ் செல்வநாயகம்

No comments

Powered by Blogger.