ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு ஜப்பானிடமிருந்து 500 மில்லியன் யென் நிதி
இலங்கையில் தொற்றா நோய்களுக்கு எதிராக சிகிச்சைகளை வழங்கக்கூடிய வகையில் ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் மருத்துவ வசதிகளை மேம்படுத்துவதற்கு அவசியமான நவீன ஜப்பானிய மருத்துவ சாதனங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு 500 மில்லியன் ஜப்பானிய யென்களை மானியமாக வழங்கும் நிகழ்வு நேற்று (18) இடம்பெற்றது.
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி இதற்கான குறிப்பில் கைச்சாத்திட்டார். இந்நிகழ்வில் திறைசேரி செயலாளரான மஹிந்த சிறிவர்தன பங்குபற்றியிருந்தார்.
இதனூடாக இலங்கையில் சமூக மற்றும் மனித நேய விருத்திக்கு பங்களிப்பு வழங்கவும் எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டில் தற்போது நிலவும் மோசமான பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக இந்த நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
சான் பிரான்சிஸ்கோ சமாதான மாநாட்டின் போது, ஜப்பானை மீண்டும் சர்வதேச சமூகத்துடன் இணைக்கும் வகையில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன ஆற்றியிருந்த உரைக்கு தமது நன்றியை தெரிவிக்கும் வகையில் ஜப்பானிய அரசாங்கத்தின் நிதி உதவியில் ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலை 1983 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த உறவை மேலும் கட்டியெழுப்பும் வகையில், இந்த நிதி உதவியினூடாக, நவீன மருத்துவ சாதனங்களான CT angiography, catheter சத்திரசிகிச்சை சாதனம், அங்க மாற்று அறுவைச்சிகிச்சை சாதனங்கள், ophthalmology சாதனம் போன்றவற்றை வழங்குவதுடன், புதிய பற்சிகிச்சை நிலையமொன்றையும் நிறுவவுள்ளது. மேலும் தொற்றா நோய்களான புற்றுநோய், பக்கவாதம் மற்றும் நீரிழிவு போன்றவற்றுக்கான சிகிச்சைகளை வழங்கும் வசதிகளை நிறுவவுள்ளதுடன், இலங்கையில் கட்புலனற்றவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் சிகிச்சை வசதிகளையும் ஏற்படுத்தவுள்ளது.
இலங்கையில் சம்பவிக்கும் 80சதவீதத்துக்கும் அதிகமான மரணங்களுக்கு தொற்றா நோய்கள் காரணமாக அமைகின்றன. கொவிட்-19 தொற்று ஏற்பட்டதும் இந்த குறைபாடுகளைக் கொண்டவர்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படுகின்றனர். மேலும், நாட்டில் தற்போது நிலவும் மோசமான பொருளாதார சூழ்நிலை காரணமாக, பல மக்களின் சுகாதார மற்றும் போஷாக்கு நிலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் அவர்கள் மத்தியில் தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்த வசதிகளினூடாக தொற்றா நோய்களை இனங்காணல் மற்றும் சிகிச்சையளித்தலை மேம்படுத்தக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்ப்பதுடன், குறிப்பாக மேல் மாகாணத்தில் இந்த தொற்றா நோய்களால் ஏற்படும் இறப்பு வீதத்தை குறைத்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையே இராஜதந்திர உறவுகள் ஆரம்பமாகி 70 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், இரு நாடுகளுக்குமிடையிலான நெருக்கமான பரஸ்பர உறவுகளின் அடையாளமாக ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலை அமைந்திருக்கும் என நாம் நம்புகின்றோம். இந்தப் பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கு அவசியமான உதவிகளை வழங்க ஜப்பான் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், இலங்கையின் நீண்ட கால அபிவிருத்திப் பங்காளர் எனும் வகையில் தொடர்ந்தும் தமது உதவிகளை வழங்கும்.
Post a Comment