தம்பியின் அபூர்வ நோய் சிகிச்சைக்கு 47 கோடி திரட்டிய சிறுமி அதே நோய்க்கு மரணம்
அச்செய்தியில், "கேரள மாநிலம் கண்ணூரை அடுத்த மாட்டூல் பகுதியை சேர்ந்த ரபீக் - மரியம்மை தம்பதிகளின் மகள் அப்ரா (வயது 15). இவருக்கு சிறுவயதில் எஸ்.எம்.ஏ. எனப்படும் ஸ்பைனல் தசை சிதைவு நோய் பாதிப்பு ஏற்பட்டது. இந்த நோய் சிகிச்சைக்கு பல கோடி ரூபாய் செலவாகும் என்பதால் அந்த சிறுமி சக்கர நாற்காலியிலேயே தனது வாழ்க்கையை கழித்து வந்தார். மேலும் அங்குள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் அப்ராவின் தம்பி முகமதுவுக்கும் (இரண்டரை வயது) தசை சிதைவு நோய் ஏற்பட்டது. இதை குணப்படுத்த ஒரு டோஸ் மருந்துக்கு மட்டும் ரூ.18 கோடி வரை செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை கேட்டதும் சிறுமி அப்ரா தனது தம்பியை காப்பாற்ற கடந்த ஆண்டு சமூக வலைதளங்களில் வேண்டுகோள் விடுத்தார். இதன் காரணமாக அவருக்கு குறுகிய காலத்திலேயே சுமார் ரூ.47.5 கோடி கிடைத்தது.
இந்த பணத்தின் மூலம் அப்ராவின் சகோதரருக்கு கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதே மருத்துவமனையில் அப்ராவும் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் (ஜூலை 1) காலையில் அப்ரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment