கொழும்பை முற்றுகையிட்டு ஜனாதிபதி, பிரதமரை துரத்தியடிக்க புறப்பட்டார்கள் மாணவர்கள்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக பதவி விலகுமாறு கோரி இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
களனி பல்கலைக்கழகத்திற்கு வெளியே கூடிய ஆயிரக்கணக்கான மாணவர்கள் கோட்டை நோக்கி பேரணியை ஆரம்பித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், மாணவர்கள் அங்கு இன்று இரவு தங்கியிருந்து நாளை நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்றும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களினால் நாடு முழுமையான முடங்கியுள்ள நிலையில், ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும் என பல மாதங்களாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும் தான் தோல்வியுற்ற ஜனாதிபதியாக வெளியேற மாட்டேன் என்று அண்மையில் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்திருந்தார். இந்நிலையில், நாளைய தினம் கொழும்பை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்க அனைத்து தரப்பினரும் முடிவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நாளை இலங்கை முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடிக்கும் என முன்னதாக எச்சரிக்கைப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதுவொருபுறமிருக்க, ஜனாதிபதி செயலகம் உட்பட பல இடங்களில் தீவிர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இராணுவத்தினரும், பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தலைநகரச் செய்திகள் தெரிவிக்கின்றன.
Post a Comment