Header Ads



கட்டார் தூதுவருடன், சஜித் சந்திப்பு - கலந்துரையாடிய விடயங்கள் என்ன..?


 இலங்கைக்கான கட்டார் தூதுவர் ஜஸீன் பின் ஜாபர் ஜஸீம் அல் சரூர் இன்று (07) கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை சந்தித்தார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலவரம் மற்றும் அது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதோடு, இலங்கை எதிர்நோக்கியிருக்கும் எண்ணெய் நெருக்கடி தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கை வாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கட்டாரின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இலங்கை - கட்டார் இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவம் குறித்தும் இதன் போது அவர் வலியுறுத்தினார்.

இத்தருணத்தில் இலங்கைக்கு வழங்கப்பட முடியுமான சாத்தியமான அனைத்து ஆதரவுகளையும் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கட்டார் தூதுவர் இதன் போது உறுதியளித்தார்.

கட்டார் அபிவிருத்தி நிதிய திறப்பு விழாவில் அன்று பங்கேற்றதற்கு எதிர்க்கட்சித் தலைவருக்கு நன்றி தெரிவித்த கட்டார் தூதுவர்,இதில் பங்கேற்றது தொடர்பாக அச்சமயம் எதிர்க்கட்சித் தலைவர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளையும் அவர் நினைவு கூர்ந்தார்.

இதன் போது ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் கட்டார் அரசு சார்பில் வருத்தம் தெரிவிப்பதாக தெரிவித்த தூதுவர், எதிர்க்கட்சித் தலைவருடன் வலுவான உறவைப் போனுவதாகவும் தெரிவித்தார்.

எண்ணெய் மற்றும் எரிவாயு நெருக்கடியைத் தீர்க்க எதிர்க்கட்சித் தலைவர் மேற்கொண்டு வரும் தலையீட்டிற்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்த கட்டார் தூதுவர், இதன் பொருட்டு முடியுமான பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

மதவாதம்,இனவாதம்,பிரிவினைவாதம் இல்லாத நாட்டை உருவாக்குவதற்கு தான் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் கட்டார் தூதுவரிடம்  தெரிவித்ததோடு, எதிர்காலத்தில் கட்டாரில்  இலங்கைக்கு குறைந்தது ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகளை தயார் செய்வதாகவும் கட்டார் தூதுவர் இதன் போது உறுதியளித்தார்.

No comments

Powered by Blogger.