ஜனாதிபதி மாளிகையில் இருந்த பணத்தை, பொலிஸார் இதுவரை நீதிமன்றில் ஒப்படைக்காதது அம்பலம்
கடந்த 9 ஆம் திகதி மக்கள் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய போது அங்கிருந்து கண்டுபிடிக்கப்பட்ட 1,78,50,000 ரூபா பணத்தை பொலிஸார் இதுவரை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லையென்பது இன்று -28- தெரியவந்தது.
இந்த பணத்தை எண்ணும் போது அவ்விடத்தில் இருந்ததாகக் கூறப்பட்டு கைது செய்யப்பட்ட நால்வர் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இவ்விடயம் தெரியவந்தது.
கடந்த 9 ஆம் திகதி நடைபெற்ற மக்கள் போராட்டத்தின் போது கோட்டை ஜனாதிபதி மாளிகையை மக்கள் கைப்பற்றிய போது, அங்கிருந்து கண்டிபிடிக்கப்பட்ட பணத்தை போராட்டக்காரர்கள் கோட்டை பொலிஸ் நிலையத்தில் கையளித்தனர்.
இந்த பணம் எண்ணப்பட்டதன் பின்னர் உத்தியோகபூர்வமாக கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கையளிக்கும் விதம் கோட்டாகோகம செயற்பாட்டாளர்களால் சமூக ஊடங்கள் மூலம் நேரடியாக ஔிபரப்பு செய்யப்பட்டது.
அந்த பணத்தை எண்ணும் போது அவ்விடத்தில் இருந்ததாகக் கூறப்படும் நான்கு இளைஞர்கள் நேற்று கைது செய்யப்பட்டதுடன், கொம்பனித்தெரு பொலிஸார் இன்று B அறிக்கையொன்றை சமர்ப்பித்து அவர்களை கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
சட்டவிரோத ஒன்றுகூடலின் பங்காளர்களாகி, முறையற்ற விதத்தில் உள்ளே பிரவேசித்தமை தொடர்பில் சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
ஜே. ஜெயராம், ஜெயராம் உதய குமார், குசல் சந்தருவன், அபதுல் காதர் சலீம் ஆகிய நால்வரே இவ்வாறு ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது, போராட்டக்காரர்களால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இன்று உத்தரவிட்டது.
பணம் தொடர்பிலான அறிக்கையை விரைவில் மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.
இதேவேளை, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஐந்து இலட்சம் ரூபா சரீரப் பிணையில் சந்தேகநபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment