Header Ads



இந்திய ஜனாதிபதியாக திரெளபதி முர்மூ தெரிவு, முதல் பழங்குடியினத்தவர்


இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் திரெளபதி முர்மூ வெற்றிப் பெற்றுள்ளார்.

இதன்மூலம் நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர் என்ற சிறப்பை பெற்றுள்ளார் அவர்.

திரெளபதி முர்மூ நாட்டின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் ஆவார்.

முன்னதாக மூன்றாம் சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது திரெளபதி முர்மூ மொத்த வாக்கு எண்ணிக்கையில் 50 சதவீத எண்ணிக்கையை கடந்துவிட்டார் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.

இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜூன் 29ஆம் தேதி நடைபெற்றது. ஜூலை 18ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த வாக்குகள் இன்று -21- முதல் எண்ணப்பட்டு வந்தன.

வெற்றிப் பெற்ற திரெளபதி முர்மூவிற்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்துள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவும் திரெளபதி முர்மூவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மூன்றாம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திரெளபதி முர்மூ 812 வாக்குகளை பெற்றுள்ளார். யஷ்வந்த் சின்ஹா 521 வாக்குகளை பெற்றுள்ளார்.

2


திரௌபதி முர்மூ, புவனேஷ்வரில் உள்ள ரமாதேவி மகளிர் கல்லூரியில் 1979 இல் பி.ஏ. தேர்ச்சி பெற்றார். ஒடிஷா அரசில் எழுத்தராக (clerk) தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். அப்போது நீர்ப்பாசனம் மற்றும் எரிசக்தி துறையின் இளநிலை உதவியாளராக இருந்தார். பிற்காலத்தில் அவர் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

ராய்ரங்பூரில் உள்ள ஸ்ரீ அரவிந்தோ ஒருங்கிணைந்த கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கௌரவ ஆசிரியராக அவர் இருந்தார். அவர் பணிபுரிந்த நாட்களில், ஒரு கடின உழைப்பாளியாக அவர் அங்கீகரிக்கப்பட்டார்.

திரௌபதி முர்மு 1997ஆம் ஆண்டு ராய்ரங்பூர் நகர் பஞ்சாயத்து தேர்தலில் வார்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் நகர பஞ்சாயத்தின் துணைத் தலைவராக ஆக்கப்பட்டார்.

அதன்பிறகு அவர் அரசியலில் தொடர்ந்து முன்னேறினார். மேலும் இரண்டு முறை (2000 மற்றும் 2009 ஆண்டுகள்) ராய்ரங்பூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து பாஜக டிக்கெட்டில் எம்எல்ஏ ஆனார். முதல் முறையாக எம்.எல்.ஏ ஆன பிறகு, 2000 முதல் 2004 வரை நவீன் பட்நாயக் அமைச்சரவையில், சுயேச்சைப் பொறுப்புடன் மாநில அமைச்சராக இருந்தார்.

அவர் வர்த்தகம் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக சுமார் இரண்டாண்டுகளும், மீன்வளத் துறை மற்றும் கால்நடை வளத் துறை அமைச்சராக சுமார் இரண்டு ஆண்டுகளும் பதவி வகித்தார். அப்போது ஒடிஷாவில், நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது.

2015 மே 18 ஆம் தேதி அவர் ஜார்கண்டின் முதல் பெண் மற்றும் பழங்குடி ஆளுநராக பதவியேற்றார். அவர் ஆறு ஆண்டுகள், ஒரு மாதம் மற்றும் 18 நாட்கள் இந்த பதவியை வகித்தார். ஐந்தாண்டு பதவிக் காலம் முடிந்த பிறகும் பதவியில் இருந்து நீக்கப்படாத ஜார்கண்ட் மாநிலத்தின் முதல் ஆளுநர் இவர்.

அவர் இங்கு பிரபலமான ஆளுநராக இருந்தார். ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சிகள் ஆகிய இரு தரப்பிலுமே அவருக்கு நற்பெயர் இருந்தது.

அவர் தனது பதவிக்காலத்தில் பல முக்கிய முடிவுகளை எடுத்தார். சமீப ஆண்டுகளில், சில ஆளுநர்கள் அரசியல் ஏஜெண்டுகள் போல் செயல்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால், ஆளுநராக இருந்த திரௌபதி முர்மு இது போன்ற சர்ச்சைகளில் சிக்காமல் விலகியிருந்தார்.

அவரது பதவிக்காலத்தின்போது, பாஜக கூட்டணியின் முந்தைய ரகுபர் தாஸ் அரசிடமும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியின் தற்போதைய ஹேமந்த் சோரேன் அரசிடமும், தங்கள் சில முடிவுகளை மறுபரிசீலனை செய்யுமாறு அவர் அறிவுறுத்தினார். அத்தகைய சில மசோதாக்களை அவர் தாமதமின்றி திருப்பி அனுப்பினார்.

No comments

Powered by Blogger.