சர்வ கட்சி அரசாங்கத்தை நிறுவ, எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவில் சர்வகட்சி அரசாங்கமொன்றினை நிறுவுவதற்குத் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகும் நிலையில், சர்வ கட்சி அரசாங்கமொன்றினை நிறுவுவதற்கு தங்களுக்கு இதுவரை உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்படவில்லை என தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்கட்சிகளின் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு நேர்மையான சர்வகட்சி அரசாங்கமொன்று அமைக்கப்படவேண்டும். நேர்மையான முறையில் பேச்சுவார்த்தைகள் இதற்காக முன்னெடுக்கப்படவேண்டும். ஆனால் சர்வகட்சி அரசாங்கமொன்று அமைப்பதற்கான உத்தியோகபூர்வ அழைப்பு இதுவரை எமக்கு விடுக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.அவர் இது தொடர்பில் விடிவெள்ளிக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்;
தரகர்கள் மற்றும் ஏஜண்டுகள் மூலம் அழைப்பு விடுத்து பேச்சுவார்த்தை நடத்த முடியாது. அரசியல் கட்சிகளிலிருந்து சிலரை பிடுங்கி எடுத்து ஆட்சி அமைப்பது சர்வகட்சி ஆட்சியாக அமையாது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து உறுப்பினர்களை பிடுங்கி எடுத்து ஆட்சியமைப்பது நேர்மையான ஆட்சியாகப் போவதில்லை. உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டால் கட்சி அது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானம் மேற்கொள்ளும் என்றார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
‘சர்வகட்சி அரசாங்கமொன்று அமைப்பது தொடர்பில் எமக்கு உத்தியோகபூர்வ அழைப்பு ஏதும் விடுக்கப்படவில்லை.சர்வகட்சி அரசாங்கமொன்று அமைக்கப்படவுள்ளதாக பத்திரிகைகள் ஊடாகவே அறிந்து கொண்டோம். உத்தியோகப்பூர்வ அழைப்பு கிடைக்கப் பெற்றால் அது தொடர்பில் கட்சியின் அரசியல் உயர்பீடம் ஒன்று கூடி கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்ளும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
தேசிய காங்கிரஸ்
‘சர்வ கட்சி அரசாங்கமொன்று அமைக்கப்படவுள்ளதாகவோ அதில் இணைந்து கொள்ளுமாறோ எங்கள் கட்சிக்கு இதுவரை உத்தியோகபூர்வமான அழைப்பு கிடைக்கப்பெறவில்லை என தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார்.
Post a Comment