புதிய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள், பேச்சாளராக பந்துல நியமனம்
நாட்டில் அரசியல், பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த விரைவில் சர்வகட்சி அரசாங்கமொன்று அமைக்கப்படுவதற்காக அனைத்து கட்சிகளுடனும் பேச்சு நடத்தப்படுமென நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய ஒரு அரசாங்கமொன்றை அமைக்கும் வரையில் இடைக்கால அமைச்சரவையொன்றே தற்போது நியமிக்கப்பட்டதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாராளுமன்ற நடவடிக்கைகளை மிகவும் தரமானதாகவும் வினைத்திறனாகவும் முன்னெடுப்பது தொடர்பாகவும் அமைச்சரவையில் கவனம் செலுத்தப்பட்டதுடன் அனைத்து அமைச்சர்களும் பாராளுமன்றத்துக்கு காலை சமுகமளிக்க வேண்டுமென்றும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் பாராளுமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக சபை முதல்வர் அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் சமுகமளித்து பதிலளிப்பது சிறந்ததென்றும் தெரிவிக்கப்பட்டது.விரைவில் பாராளுமன்ற நிறைவேற்றுக் குழுக்களை நியமிப்பது தொடர்பாகவும் அமைச்சரவையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் இன்னும் இரண்டு வாரத்தில் சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment