Header Ads



ரணில் நல்லது செய்யப் போவதில்லை - அன்று எஞ்சினீயர், இன்று செருப்புக்கூட இல்லாமல் காலிமுகத் திடலில் போராடும் ரிபாஸ் முகமது


 எம்.மணிகண்டன்

நூறு நாட்களைக் கடந்து விட்ட இலங்கையின் காலி முகத்திடல் போராட்டத்தில் அரசுக்கு எதிரான முழக்கங்களைக் கேட்கலாம். ஆனால் தங்களது வாழ்க்கையை இழந்திருக்கும் பலரது வேதனைக் குரல்கள் வெளியே அதிகமாகக் கேட்பதில்லை. அப்படியொரு குரல்தான் ரிஃபாஸ் முகமதுவுடையது.


"அன்று நான் சாப்ட்வேர் இன்சினீயர், இன்று உள்ளாடை கூட இல்லாமல் நிற்கிறேன்" என்கிறார் அவர்.


காலி முகத்திடலில் அதிபர் செயலகத்தை ஒட்டி அமைக்கப்பட்டிருக்கும் கூடாரத்தில் இருந்தபடி இவர் போராட்டத்தை ஒருங்கிணைத்து வருகிறார். இந்தப் போராட்டத்தில் பங்கேற்க வருவோரும், செய்தி சேகரிக்கச் செல்வோரும் ஒருமுறையேனும் இவரைச் சந்தித்திருப்பார்கள்.


"முதல்நாள் நான் போராட்டத்துக்கு வந்தபோது இங்கு பெரிய கூட்டம் எதுவும் இல்லை. அதிபர் செயலகத்தின் வாயிலில் மேடையும் கிடையாது. காவல்துறையின் தடுப்புக் கம்பிகளைப் பயன்படுத்தி போராட்டத்தைத் தொடங்கினோம்" என்கிறார் ரிஃபாஸ் முகமது.


உதவிகள் மூலமாகக் கிடைக்கும் உணவுப் பொட்டலங்கள், தண்ணீர் பாட்டிகள் போன்றவற்றை போராட்டத்தில் வருவோருக்கு விநியோகிக்கும் பணிகளை தனது குழுவினரோடு சேர்ந்து மேற்கொண்டு வருகிறார் இவர்.


"கூட்டம் அதிகமாக இருக்கும் சில நேரங்களில் எங்களுக்கே உணவு கிடைக்காத நிலை ஏற்படும். அப்போதெல்லாம் பசியோடு படுத்துறங்கும் நிலைதான் ஏற்படுகிறது"


காலி முகத்திடலில் அமைக்கப்பட்டிருக்கும் கூடாரங்களில் தரையில் ஓரிரு அங்குல உயரத்திலான பலகைகள் போடப்பட்டிருக்கின்றன. அவற்றில் இடைவெளிகள் இருக்கும். வெயிலின் போது கடுமையான வெப்பத்தையும், மழை நேரத்தில் கடுங் குளிரையும் தாங்க வேண்டியிருக்கும்.


"போராட்டம் தொடங்கிய முதல் ஒரு மாதத்துக்கும் மேலாக இங்கு கூடாரம் கூடக் கிடையாது. உணவும் தண்ணீரும் கொடுப்பதற்கு யாரும் கிடையாது. கிடைத்ததை உண்டபடி முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்தோம். உடைமைகளைக் கைகளில் பிடித்தபடி வெயிலிலும் மழையிலும் நனைந்து கொண்டேதான் போராட்டம் நடத்தினோம்" என்கிறார் ரிஃபாஸ் முகமது.


காலி முகத்திடல் போராட்டம் அவருடைய வாழ்க்கையை முற்றிலுமாகப் புரட்டிப் போட்டிருக்கிறது. அருகிலேயே குளிக்க வேண்டும். உடைகளைக் காய வைக்க வேண்டும். கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்ற நிலை.


"எனது வீடு கொழும்பு நகரில் வசதியானவர்கள் வாழும் இடத்தில் உள்ளது. குளிரூட்டப்பட்ட அறையில் கை நிறைந்த சம்பளத்துடன் பிரிட்டனைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். இப்போது காலில் போட நல்ல செருப்புகூட இல்லை. எனது செல்போன் உள்ளிட்ட உடைமைகள் அனைத்தும் காணாமல் போய்விட்டன. உள்ளாடைகளும் மாற்று ஆடைகளும்கூட இல்லை" என்கிறார் ரிஃபாஸ்.


போராட்டத்தில் பங்கேற்பது தெரியவந்ததால் ரிஃபாஸின் நிறுவனம் அவரை வேலையில் இருந்து நீக்கி விட்டது. காவல்துறையினர் வீட்டுக்குத் தேடி வருவதால் அங்கும் நெருக்கடி ஏற்படுவதாக அவர் கூறுகிறார்.


அதிபராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ பதவியில் இருந்து விலகிய பிறகு போராட்டக் களத்தில் கூட்டம் குறைவாகவே தென்படுகிறது. நீண்ட வரிசையில் உணவுக்காகக் காத்திருப்போர் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கிறார்கள்.


உணவுப் பொருள்களும் உதவிகளும் குறைந்திருக்கின்றன என்பதை போராட்டக்காரர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். ரிஃபாஸ் முகமது குழு நிர்வகிக்கும் கூடாரத்துக்கு நாம் சென்றபோது அங்கு வழக்கமாக விநியோகிக்கப்படும் தண்ணீர் பாட்டில்களும், உணவுப் பொட்டலங்களும் இல்லை. இதற்கு முன்பு அப்படி நேர்ந்ததில்லை என்று அங்கிருந்தவர்கள் தெரிவித்தார்கள். எனினும் சில மணி நேரங்களுக்குப் பிறகு தண்ணீர் பாட்டில்கள் மட்டும் வந்து சேர்ந்தன.


"நாட்டில் நல்ல மாற்றம் ஏற்பட வேண்டும் என்றுதான் போராட்டம் நடத்துகிறோம். தொடர்ந்து முழக்கங்களை எழுப்புவதால் எங்கள் எங்களது தொண்டை பாதிக்கப்பட்டு பேச முடியாத நிலை கூட ஏற்படும். அப்போதும் ஏதாவது மருந்து, நிவாரணிகளை எடுத்துக் கொண்டு முழக்கங்களைத் தொடருவோம். போராட்டத்தின்போது கண்ணீர்ப்புகைக் குண்டு பட்டு சில நாள்கள் மருத்துவமனையிலும் இருக்க நேர்ந்தது."


ரிபாஸ் அகமதுவைப் போலவே காலி முகத்திடல் போராட்டக் களத்தில் ஏராளமான ஆண்களும் பெண்களும் இருக்கிறார்கள். பலருக்கும் நூறு நாட்களுக்கும் மேலாக இதுவே வசிப்பிடம். சிலர் காய்கறிகளை வாங்கி களத்திலேயே சமைத்து உண்கிறார்கள். சிலர் வெளியில் இருந்து வரும் உணவுப் பொட்டலங்களைப் பெற்றுக் கொள்கிறார்கள்.


செவ்வாய்க்கிழமை நடந்த போராட்டத்தில் ரிபாஸ் அகமது உள்ளிட்ட போராட்டக்காரர்கள் ரணில் விக்கிரமசிங்கவின் உருவ பொம்மையை ஊர்வலமாக எடுத்து வந்தனர். கோட்டாபயவைப் போலவே ரணில் விக்கிரமசிங்கவும் நாட்டுக்கு நல்லது செய்யப் போவதில்லை என்று இவர்கள் கூறுகிறார்கள்.


போராட்டத்தில் ஈடுபடும் பலருக்கு தங்களது தனிப்பட்ட வாழ்க்கையிலும், நாட்டிலும் எதிர்காலத்தை நோக்கிய அச்ச உணர்வு இருக்கிறது.


எப்போது போராட்டத்தை முடித்துவிட்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவீர்கள் என்று கேட்டால், "எங்களிடம் கோரிக்கைகள் இருக்கின்றன. அவை நிறைவேற்றப்பட்டு நாட்டுக்கு நல்லது நடக்கும்வரை எங்களது போராட்டம் தொடரும்" என்கிறார் ரிஃபாஸ் முகமது. BBC

No comments

Powered by Blogger.