Header Ads



"அன்று வந்த கனவு... நான் ஹிஜாப் அணியக் காரணம் இதுதான் - மனம் திறந்த சனா கான்


- மு.பூபாலன் -

"எனது கடந்தகால வாழ்க்கையில் பெயர், புகழ், பணம் எல்லாம் என்னிடம் இருந்தன. ஆனால் நிம்மதி என்னிடம் இல்லை. அந்த நாள்கள் மிகவும் கடுமையான ஒன்றாக இருந்தன. மிகுந்த மன உளைச்சலுடன் இருந்தேன்." - 

இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிப் படங்களில் நடித்தவர் சனா கான். இவர் நடிகை, மாடல் மற்றும் நடனக் கலைஞராகத் திரையுலகில் பணியாற்றி வருபவர். தமிழில் இவர் நடிகர் சிம்புவின் 'சிலம்பாட்டம்', 'பயணம்' ஆகிய படங்களில் நடிகையாகவும் 'ஈ', 'அயோக்கியா' போன்ற படங்களின் பாடல் காட்சிகளில் சிறப்புத் தோற்றத்திலும் பணியாற்றியிருக்கிறார். அதேபோல, கடந்த 2012-ல் சல்மான் கான் தொகுத்து வழங்கிய இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதிப் போட்டிவரை வந்தார்.

சமீபகாலமாக சனா கான் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சி என எதிலும் பணியாற்றுவதில்லை. கடந்த 2020-ல் முஃப்தி அனஸ் சயத் என்பவரைத் திருமணம் செய்து திருமண வாழ்வில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொலி ஒன்றைப் பதிவு செய்த சனா, தனது வாழ்வின் கடுமையாக நாள்கள் குறித்தும் தான் ஹிஜாப் அணிந்ததற்கான காரணம் குறித்தும் பேசியிருந்தார்.

இது பற்றிக் கூறிய அவர், “எனது கடந்தகால வாழ்க்கையில் பெயர், புகழ், பணம் எல்லாம் என்னிடம் இருந்தன. ஆனால் நிம்மதி என்னிடம் இல்லை. அந்த நாள்கள் மிகவும் கடுமையான ஒன்றாக இருந்தன. மிகுந்த மன உளைச்சலுடன் இருந்தேன். அப்போது 2019-ல், ரமலான் நாளன்று எனக்கு ஒரு கனவு வந்தது. அதில் ஒரு கல்லறையைப் பார்த்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அந்தக் கல்லறையில் நான் இருப்பதைப் பார்த்தேன்.

அந்தக் கனவு, இதுதான் என் முடிவு என்று இறைவன் எனக்கு உணர்த்தியது போல் இருந்தது. இது எனக்குக் கொஞ்சம் பதற்றத்தை ஏற்படுத்தியது. அதன்பின் ஏராளமான இஸ்லாமிய உரைகளைக் கேட்க ஆரம்பித்தேன். குறிப்பாக அதிலிருந்த 'உங்களின் கடைசி நாள் ஹிஜாப் அணிந்த முதல் நாளாக இருக்க விரும்பவில்லை' என்ற அழகிய வாசகம் ஒன்று என்னை ஆழமாகச் சிந்திக்க வைத்தது.

மறுநாள் காலையில் நான் எழுந்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அது என் பிறந்தநாள். அன்று முதல் ஹிஜாப் அணிய ஆரம்பித்தேன். இனி இதை ஒருபோதும் அகற்ற மாட்டேன் என்று உறுதி செய்து கொண்டேன். இப்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்றார்.

No comments

Powered by Blogger.