ரணில் ஒரு திருடன், துரோகி, மோசடிக்காரன் என்றுகூறிய பொதுஜன பெரமுனவுக்கு அவரை ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழிய உரிமையுள்ளதா..?
நாடாளுமன்றத்தில் இன்று -20-நடைபெற்ற அதிபர் தேர்தலில் மக்களின் கருத்துக்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படவில்லை எனவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் போராட்டத்தை உணர்ந்து செயற்படவில்லை எனவும் இலங்கை இராமஞான மகா நிகாயத்தின் பிரதம சங்கநாயக கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், மதத் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக, தற்போதைய நிர்வாகம் மிக விரைவில் சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கும், மக்களின் துன்பங்களுக்கு முடிவு கட்டுவதற்கும், உழைக்க வேண்டும் என்றும் சோபித தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க நாட்டை தவறாக வழிநடத்தியதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றம் சுமத்தியதாக தெரிவித்த சோபித தேரர், திருடன், துரோகி,பத்திர மோசடி செய்து நாட்டை வெளியே விற்றவர் என்று கூறி விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் பறித்ததாக தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்க இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்தால், தமக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்த ஓமல்பே சோபித தேரர்,அதிபர் பதவிக்கு திருடனான ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை முன்மொழிவதற்கு தினேஷ் குணவர்தனவுக்கு சட்ட மற்றும் தார்மீக உரிமை உள்ளதா என்றும் தாம் கேள்வியெழுப்புவதாகவும் தெரிவித்தார்.
அடுத்த தேர்தலில் திருடிய, ஏமாற்றிய, பொய் சொன்னவர்களை வீட்டுக்கு அனுப்ப மக்கள் காத்திருக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.
Post a Comment