Header Ads



பொன்சேக்காவை சிறைக்குள் தள்ளுவாரா ரணில்..? ஓகஸ்ட் 9 என்ன நிகழும்..??


 - Siva Ramasamy -

பொன்சேகா எனும் ஆமிக்காரன் !

பொன்சேகாவின் எச்சரிக்கை இலேசானதல்ல...

ஓகஸ்ட் 9 ஆம் திகதி , அரச அடக்குமுறைக்கு அச்சப்படாமல் போராட்டம் நடத்த முன்வருமாறு மக்களுக்கு அறைகூவியிருக்கிறார் பீல்ட் மார்ஷல் பொன்சேகா.…

கமலஹாசனின் மாறுபட்ட நடிப்புகளை போல் , அடிக்கடி ஒவ்வொரு வேடத்தில் வருவார் பொன்சேகா.. 

ஜனாதிபதி வேட்பாளர் , மைத்ரி ஆதரவு , மைத்ரி எதிர்ப்பு , ரணில் ஆதரவு ரணில் எதிர்ப்பு என்று அரசியலுக்குள் இருந்தாலும் அவருக்குள் இருக்கும் ஆமிக்காரன் அடிக்கடி புரட்சி எண்ணத்துடன் இருப்பதை காண முடிகிறது..

முன்னிலை சோஷலிச கட்சியின் குமார் குணரட்ணம்( கெமுனு - இயக்கப்பெயர் ) ஆயுதப்போராளியாக திருகோணமலையில் இருந்தபோது , அங்கு கட்டளைத்தளபதியாக இருந்தவர் பொன்சேகா.  குணரட்ணம் வெளிநாடு செல்ல உதவியதாகவும் சொல்லப்படுகிறது.

அந்த நட்பின் அடிப்படையில் தான் கொழும்பின் அண்மைய போராட்டக்களங்களுக்கு சென்ற போதெல்லாம் பாதுகாப்பாக திரும்பினார் பொன்சேகா.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை பொறுமையாக செயற்படுவதால் , எப்படியாவது விரைவில் ஆட்சியை கைப்பற்றுவது என்று திட்டமிடுகிறார் பொன்சேகா. படைகளுக்குள் அவருக்கு செல்வாக்கு இருக்கக் கூடும்.

அதற்கு பெரட்டுக்காமி என்ற சோஷலிச முன்னிலை கட்சியின் ஆதரவு அவருக்குண்டு..

அடுத்த 9 ஆம் திகதி மக்களை கொழும்புக்கு அழைத்தாலும் மக்கள் ஆதரவு அவருக்கு கிடைக்குமோ இல்லையோ , பல்கலை மாணவர்கள் ஆதரவுண்டு.. பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள் குமார் குணரத்னத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இதற்கப்பால் போர்க்காலம் முதல் நட்பு பாராட்டும் சீனாவின் முழு ஆசீர்வாதம் பொன்சேகாவுக்கு உண்டு..

ஆனால் மக்கள் வருவார்களா?

ஏற்கனவே நடக்கும் கைதுகளால் , கடத்தல்களால் ஒரு பக்கம் அச்சம் தலைதூக்கியுள்ளது. இன்னொரு பக்கம் -  சமையல்  சிலிண்டர்கள் கிடைத்து விட்டதே எரிபொருளும் விரைவில் தாராளமாக கிடைக்கும் என்ற  மக்களின் எதிர்பார்ப்பு , அரசியல் கட்சிகளின் ரணில் சரணம் என்பன மக்கள் எழுச்சியை இப்போதே மழுங்கடித்திருக்கின்றன.

ஆனாலும்,

பொன்சேகாவின் அழைப்பை சாதாரணமான ஒன்றாக கருதிவிட முடியாது.

புலிகளின் குண்டுவெடிப்பில் சிக்கி குற்றுயிராக கிடந்தபோது, தப்பித்து , மீள எழும்பி இந்த நிலைமைக்கு வருவதற்கு பொன்சேகாவுக்கு கைகொடுத்தது அந்த மன ஓர்மம்தான்..

தமிழர் , முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்ப்பது என்ற பேச்சுக்கெல்லாம் பொன்சேகாவிடம் இடமிருக்காது.. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ச் சமூகம் ஆதரவளித்தாலும்   பின்னர் தெய்வாதீனமாக தப்பித்துக் கொண்டமை வரலாறு..

ஒகஸ்ட் 9 இல் மக்களை , மாணவர்களை திரட்டி அரசுக்கு அச்சுறுத்தலாகும் வகையில் பொன்சேகா எழுந்து நிற்பாராயின் , அவசரகால சட்டத்தின் கீழ் , ஆட்சிக்கவிழ்ப்பு தேசத்துரோக குற்றச்சாட்டின்கீழ் அவரை நீண்டகாலம் சிறைக்குள் தள்ளுவார் ரணில்..!

No comments

Powered by Blogger.