சகல வசதிகளுடன் 4 இடங்கள் போராட்டங்களுக்காக வழங்கப்படும் - ஜனாதிபதி ரணில்
கொழும்பில் கடந்த வெள்ளிக்கிழமை (22) இடம்பெற்ற இராஜதந்திர அதிகாரிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.
ஜனாதிபதி செயலகத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து அகற்றுவது தொடர்பில் இராஜதந்திர அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவதற்காக இந்த சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
தற்போதைய அரசாங்கம் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் 21வது சரத்து மற்றும் இலங்கையின் அரசியலமைப்பின் 14 (1) (b) ஆகிய இரண்டையும் நிலைநிறுத்துவதாக ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்க கட்டிடங்களை முற்றுகையிட்டு சொத்துக்களை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என அமெரிக்க சிவில் லிபர்ட்டிஸ் யூனியன் வழங்கிய அறிவுறுத்தல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதையும் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.
உடமைகளுக்கும் உயிர்களுக்கும் தீங்கு விளைவிக்காமல் வன்முறையற்ற போராட்டங்கள் அனுமதிக்கப்படுவதை உறுதிசெய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இராஜதந்திரிகளுக்கு விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதேசத்தில் விகாரமஹாதேவி பூங்காவின் வெளி அரங்கம், புதிய நகர மண்டபம், ஹைட் பார்க், கெம்பல் பிட்டிய போன்ற அனைத்து வசதிகளும் அகிம்சை வழியிலான போராட்டங்களுக்காக வழங்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
´கோட்ட கோ கம´ போராட்டக் களம் தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை என்றும், பாதுகாப்புப் படையினரால் அது அகற்றப்படவில்லை என்றும் இங்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும், பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அனைவரையும் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவது உட்பட பின்பற்ற வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்தும் சட்டமா அதிபர் இராஜதந்திர அதிகாரிகளுக்கு இந்தக் கூட்டத்தில் விளக்கமளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Post a Comment