1903 இல் நிர்மாணிக்கப்பட்ட மஹர பள்ளிவாசல், இயங்க தொடர்ந்து அனுமதி மறுப்பு - புத்தர் சிலை அப்படியே உள்ளது
(ஏ.ஆர்.ஏ. பரீல்)
சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ள, மஹர சிறைச்சாலை வளாகத்தில் இயங்கி வந்த ஜும்ஆ பள்ளிவாசலை அப்பிரதேசத்தில் வேறோர் இடத்தில் நிர்மாணித்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
100 வருடங்களுக்கும் மேலாக மஹர சிறைச்சாலை வளாகத்தில் இயங்கி வந்த ஜும்ஆ பள்ளிவாசல் சிறைச்சாலை அதிகாரிகளின் ஓய்வறையாக மாற்றப்பட்டு புத்தர் சிலையொன்றும் அங்கு வைக்கப்பட்டு 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
பள்ளிவாசல் சிறைச்சாலை அதிகாரிகளின் ஓய்வறையாக மாற்றப்பட்டதிலிருந்து பள்ளிவாசலை மீள பெற்றுத்தருமாறு அப்பகுதி முஸ்லிம்கள் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரிடமும், அரச தலைவர்களிடமும் கோரிக்கைவிடுத்தும் பலன் ஏற்படாத நிலையிலே பள்ளிவாசலை வேறோர் இடத்தில் புதிதாக நிர்மாணித்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பள்ளிவாசலை நிர்மாணித்துக் கொள்ள கம்பஹா அரசாங்க அதிபரிடம் அரச காணியொன்றினைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவருடன் உத்தியோகபூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இப்றாஹிம் அன்ஸார் தெரித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், அரச காணியொன்றினைப் பெற்றுக் கொள்ள முடியாமற்போனால் தனியார் காணியொன்றினை கொள்வனவு செய்வது தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
மஹர சிறைச்சாலை வளாக பள்ளிவாசலின் அப்போதைய நிர்வாக சபை மற்றும் அப்பகுதி மக்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது என்றார்.
பள்ளிவாசல் நிர்வாகம் பள்ளிவாசல் மூடப்பட்டதையடுத்து அப்போதைய நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவை, அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா தலைமையில் சந்தித்து கலந்துரையாடியதையடுத்து அமைச்சர் பள்ளிவாசலை மீண்டும் முஸ்லிம்களிடம் கையளிக்குமாறு அப்போதைய சிறைச்சாலை ஆணையாளருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார். என்றாலும் அவரது உத்தரவு அமுல்படுத்தப்படவில்லை.
மஹர சிறைச்சாலை வளாகத்தின் பள்ளிவாசல் 1903 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டதாகும். 1902 இல் மஹர சிறைச்சாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களாக மலே இனத்தவர்களே கடமையாற்றினார்கள். அவர்கள் தங்கள் சமயக்கடமைகளை முன்னெடுப்பதற்காக இப்பள்ளிவாசல் ஆரம்பிக்கப்பட்டது. பள்ளிவாசல் 1967 ஆம் ஆண்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களையடுத்து சிறைச்சாலை நிர்வாகம் பாதுகாப்பு காரணங்களைக்கூறி பள்ளிவாசலை மூடி அவர்களது ஓய்வு அறையாக மாற்றிக்கொண்டுள்ளது.
மஹர சிறைச்சாலையை அண்மித்து வாழும் முஸ்லிம்கள் தங்களுக்கென புதிதாக பள்ளிவாசலொன்றினை நிர்மாணித்து தருவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முஸ்லிம் அரசியல் தலைவர்களைக் கோரியுள்ளனர்.- Vidivelli
Post a Comment