Header Ads



ரணிலின் உரைகளை காலநிலை மாற்ற நிகழ்ச்சிக்கு ஒப்பிடும் இம்ரான் Mp


இந்த அரசாங்கத்தில் இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டு அல்லது இரண்டரை வருடங்கள் கோமாவில் இருந்து இப்போதுதான் கண்ணை விழித்திருக்கிறார்களா? அவர்களுக்கு அவர்களுடைய செயற்பாடுகள் எல்லாம் மறந்து இன்று புதிதாக பிறந்திருக்கிறார்களா என்ற சந்தேகம் எழும்புகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்துள்ளார்.

நேற்று(8) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், “நாடாளுமன்ற உறுப்பினர்களில் இந்த அரசாங்கம் செய்கின்ற செயற்பாடுகளை சரி என நியாயப்படுத்தியவர்கள் இன்று அமைதி காத்துத்கொண்டும் பசுத்தோல் போத்திய புலி போல் பதுங்கிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த அரசங்கத்தில் இருக்கின்ற எம்.பி க்கள் சொன்னார்கள் இந்த நாட்டை நாங்கள் வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்குவோம். இந்த நாடு ஒரு சிங்கப்பூராக மாறும் என்று சொன்னவர்கள் எல்லாம் இன்று ஆலோசனை வழங்குகின்ற ஆலோசகராக இருக்கின்றார்கள்.

உண்மையிலேயே இதனுடைய முழுப் பொறுப்பையும் மொட்டுக்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களே ஏற்க வேண்டும் என்பதை நாங்கள் இந்த நேரத்தில் கூறிக்கொள்கிறோம்.

குறிப்பாக இந்த அரசாங்கம் செய்த சில விடயங்கள், செயற்பாடுகள் காரணமாக தான் இன்று இந்த நாடு இந்த நிலைக்கு வந்திருக்கிறது என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். இவர்கள் இனவாதத்தை ஏற்படுத்தியன் காரணமாக அந்த மக்களின் சாபமும், விவசாயிகளுக்கு செய்த அநியாயத்திற்காக அந்த மக்களின் சாபமும், ஏழைமக்களின் சாபமும் இந்த அரசாங்கத்தையும் நாட்டையும் இந்த நிலைக்கு கொண்டுவந்துள்ளது.

இப்போது பிரதமர் ஆற்றுகின்ற உரைகளை கேட்கின்ற போது காலநிலை மாற்றத்தை கூறுகின்ற நிகழ்ச்சி போல் உள்ளது. இவர் பதவி ஏற்கின்ற பொழுது அவருடைய நண்பர்கள், ஆதரவாளர்கள் மற்றும் கட்சிப் போராளிகள் தெரிவிக்கையில் இவர் நாட்டினுடைய பிரதமராக வந்தால் ஒரு மாதத்திற்குள் நாட்டிற்குத் தேவையான டொலரை கொண்டு வருவதற்கு தகுதியானவர் என்று சொன்னார்கள். இப்போது அது அப்படியே மாறி டொலர் பெறுமதி அதிகரித்திருக்கிறது.

இன்று வரிசையில் நிற்கின்றவர்களுடைய எண்ணிக்கை கிலோ மீட்டர் கணக்கில் நீண்டு கொண்டிருக்கிறது. இங்கு என்ன நடைபெற்றது இதை நாம் எவ்வாறு தீர்க்க வேண்டும் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இன்று ஒரு குடும்பத்திற்கான செலவு மூன்று மடங்காக அதிகரித்திருக்கின்றது.

உதாரணமாக முப்பதாயிரம் வருமானம் பெறும் குடும்பத்திற்கு நாற்பத்தி ஐயாயிரம் தேவைப்படுகிறது. ஆகையால் அவர்கள் மிதியாக தேவையான பணத்தை எப்படி பெறுவது? எங்கே கடன்பெற போகிறார்கள்? எப்படி திருப்பி சொலுத்த போகின்றார்கள் என்பதை சிந்திக்கவேண்டும்.

இந்த நிலை தொடர்ந்தால் சோமாலியா அல்லது ஆப்பிரிக்காவில் உள்ள சில நாடுகளை போல் எமது நாடும் மிக மோசமான நிலைக்கு வந்துவிடும்.

அதில் விஷேட கவனம் செலுத்தவேண்டும் விலை அதிகரிப்பின் காரணமாக போசாக்கு சம்பந்தமான நோய்கள், களவு, கொள்ளை மற்றும் பிள்ளைகளை கடத்தல் போன்ற செயற்பாடுகள் அதிகரித்திருக்கிறது.

இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு, இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு இந்த அரசாங்கம் எந்த வேலைத்திட்டத்தையும் செய்யவில்லை. ஒவ்வொரு அமர்விலும் விடயத்தை கூறி விவாதிக்கும் வேடிக்கையான பாராளுமன்றமாக இருக்கிறது.

நாம் இதற்கு உடனடியாக முடிவுகட்ட வேண்டும். இந்த நிலையை கட்டுப்படுத்துவதற்கு அனைத்து கட்சி ஒத்துழைப்பையும் பெற்று அனைத்து கட்சிகளின் பங்களிப்பின் மூலம் புதிய அரசாங்கத்தை உருவாக்கி அதனூடாக தீர்வை பெறுவதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய வேண்டுகோள்” என கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.