Header Ads



"நமது நாட்டுக்கே உரித்தான, மருத்துவத்துறையை நாடி பயன் பெறுவோம்"


இன்று  நமது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக,  பொது மக்களாகிய நாம் நம் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு சவால்களையும் சிரமங்களையும் எதிர்நோக்கி கொண்டிருக்கின்றோம்.  

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம்,  பெற்றோலிய பொருட்களின் தட்டுப்பாடு,  தொழில் வாய்ப்புக்களை  இழந்துள்ளமை,  வறுமையினால் வீட்டுச்சூழலில்  பல்வேறு குடும்பப்  பிரச்சினைகள்,  பிள்ளைகளின் கல்வியில் ஏற்பட்டுள்ள பின்னடைவு போன்ற இன்னோரன்ன பிரச்சினைகள்  ஏழை,  பணக்கார  வித்தியாசமின்றி அனைவரது வாழ்க்கையிலும் விரக்தியையும் மன சஞ்சலத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான பிரச்சினைகளுக்கு மத்தியில்  நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துகளுக்கான தட்டுப்பாட்டின்  விளைவு,  இதுவரை அனைவரது வாழ்க்கையிலும் தாக்கம் செலுத்தாவிட்டாலும் எதிர்வரும் காலங்களில் கையிலிருப்பிலிருக்கும்  மருந்துப் பொருட்கள் முடிவடைந்தவுடன் நம்மில் உள்ள நோயாளிகளின் நிலைமை என்னவாகும் என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும்.  

இதற்கான  மாற்றீடு வழியாக என்ன செய்யலாம் என்று நோக்கும்போது இதுவரை காலமும் நாம் அனைவரும் மறந்தும்  நம் எண்ணத்திலிருந்து தூரமாகியும் இருந்த  நம் நாட்டிற்கே,  உரித்தான சுதேச வைத்திய முறையைப் பற்றி இவ்விடத்தில் சிறிது ஞாபகமூட்டிக்கொள்வோம்.

சுதேச வைத்திய முறை என்கின்ற போது நம் நாட்டில் நடைமுறையிலுள்ள ஆயுர்வேத,  யுனானி,  சித்த,  பாரம்பரிய  வைத்திய முறைகள் பிரதானமான சுதேசிய வைத்திய முறைகளாக காணப்படுகின்றன.  

சுதேச வைத்தியத்தில் அநேகமாக நமது நாட்டிலுள்ள மூலப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்ற மருந்துப் பொருட்களைக் கொண்டு,  சிகிச்சை வழங்கப்படுகின்றது.  அதில் பல்வேறு வகையான நோய்களுக்கு மிகவும் வெற்றியளிக்கக்கூடிய  மருந்துகள் காணப்படுகின்றன.

இருப்பினும், மேற்கத்தேய மருத்துவ  முறையினால் கவரப்பட்டு,  அதற்கு  அடிமைப்பட்டுள்ள  எமது உடம்புகளுக்கு  சுதேச மருத்துவ முறையை திணிப்பது  இதுவரை காலமும் கசப்பானதாகவும்  கடினமானதாகவும் இருந்த போதிலும்  நமது நோய்களுக்கான தீர்வை,  தற்போது சுதேச மருத்துவத் துறையினூடாக தேடிச் செல்ல வேண்டும்  என்ற காலத்தின் கட்டாயத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம்.  

உடம்பில் ஏற்படும் காய்ச்சல்,   நோவுகளுக்கு பனடோல்  மாத்திரைகளை உட்கொள்ளும் பழக்கமுடையவர்களாகவே  இருக்கின்றோம்.

பனடோல்  மாத்திரை எமது வருத்தங்களுக்கு எவ்வாறு உடனடி நிவாரணியாக இருக்கின்றது என்பதை  அறிந்த நாம்,  அவற்றால் எமது உடம்புக்கு ஏற்படுத்தப்படும் பாதகமான விளைவுகளை அறிவதில்லை.  

இது போலவே இன்று  குழந்தை முதல் வயோதிபர் வரை அனைவருக்கும் பரிட்சயமான anti biotic களின்  பாவணையினால் உடலில் எமக்கு ஏற்படுத்தப்படும் ஆரோக்கிய பாதிப்புகளை இதுவரை காலமும் தேடிப்பார்க்கவில்லை.

நமது சமையலறையில் உள்ள வாசனைத் திரவியங்கள் மற்றும் ஏனைய சமையற் பொருட்களைக் கொண்டே,  சுதேச மருத்துவ ஆலோசனைகளினூடாக அநேகமான நோய் நிலைமைகளுக்கு தீர்வு காணலாம் என்பதை புரிந்து கொள்ள   வேண்டும்.

சமையலறையில் அன்றாடம் பாவிக்கப்படும் பல பொருட்களுக்கு இயற்கையாக anti biotic களாக  தொழிற்படக் கூடியவை என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவோம்?

 இனியாவது நாம் விழித்துக் கொள்வோம்.  நம் உடல் மேற்கத்தைய மருந்துகளுக்கு அடிமைப்பட்டு கடைசிவரை மருந்து மாத்திரைகளை விழுங்கி வாழும்  கலாச்சாரத்தை மாற்றி,  நோய் நிலைமைகளின் ஆரம்பக்கட்டத்திலேயே நமது நாட்டுக்கே உரித்தான மருத்துவத்துறையை நாடி  பயன் பெறுவோம்.

DR. றிஸ்மியா ரபீக்

 சமூக நல மருத்துவ உத்தியோகத்தர்

 மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலை - நிந்தவூர்

No comments

Powered by Blogger.