டலஸ் தலைமையில் புதிய அரசியல் கூட்டணி..? மஞ்சள் நிறத்தை முன்னிறுத்தி செயற்பாடு
முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் புதிய அரசியல் கூட்டணியொன்று உருவாக்கப்படவுள்ளதாக டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் சட்டங்களில் ஏற்படுத்தப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்த பிரேரணையொன்று டலஸ் அழகப்பெரும, டிலான் பெரேரா ஆகியோரின் தலைமையில் நேற்றைய தினம் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
தற்போதைக்கு சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இந்த நிகழ்வின் போது கலந்து கொண்டிருந்தனர். அதன் போது கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும, தேர்தல் சட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து ஆலோசனைகளை சமர்ப்பிக்கவே தாம் அங்கு வருகை தந்ததாக தெரிவித்தார்.
இதன்போது புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கும் உத்தேசம் உண்டா என்று ஊடகவியலாளர் கேட்டபோது அதற்கு முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா இவ்வாறு பதிலளித்துள்ளார்.
நாங்கள் மஞ்சள் நிறத்தை முன்னிறுத்தி புதிய செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளோம். அதனைப் பிரதிபலிக்கும் வகையில் இன்று நாங்கள் இங்கு வரும் போதும் மஞ்சள் நிற ஆடை மற்றும் குறியீடுகளுடன் வந்துள்ளோம் என்றும் தெரிவித்தார். அப்படியென்றால் அது கட்சியின் நிறமா என்று ஊடகவியலாளர் மீண்டும் வினவியபோது அப்படித்தான் வைத்துக் கொள்ளுங்களேன் என்று டிலான் பெரேரா பதிலளித்துள்ளார்.
Post a Comment