தற்போதைய அரசாங்கத்தை மாற்றாமல் நாட்டை மீட்டெடுக்க முடியாது, வெளிநாடுகளும் உதவி செய்யாது - மைத்திரிபால
தற்போதைய அரசாங்கத்தை மாற்றாமல் நாட்டை மீட்டெடுக்க முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான சீனாவின் தூதர் கி சென்ஹோங் நேற்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவை பொலன்னறுவையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
அதன் போது கடந்த ஆட்சியில் பொலன்னறுவைக்கு சீன அரசாங்கம் நன்கொடையாக அளித்த பாரிய சிறுநீரக மருத்துவமனை தொடர்பில் மைத்திரிபால சீன தூதுவரிடம் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
அதன் போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட மைத்திரி,
தற்போதைய நிலையில் விவசாயிகள் உரத் தட்டுப்பாடு காரணமாகக் கமத்தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார்கள். மறுபுறத்தில் பொதுமக்கள் டீசல் தட்டுப்பாடு காரணமாக பெரும் சிக்கல்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது.
பொலன்னறுவையில் மட்டுமன்றி கொழும்பிலும் கூட டீசல் இல்லை. எதிர்வரும் நாட்களில் ஏற்படக்கூடிய பஞ்சம், பட்டினி என்பவற்றைச் சமாளிப்பதற்கான எந்தவொரு ஏற்பாடும் இலங்கை அரசாங்கத்திடம் இல்லை.
தற்போதைய நிலையில் இந்த அரசாங்கத்துக்கு வெளிநாடுகளும் பெருமளவில் உதவி செய்யும் உத்தேசம் இல்லை. எனவே இலங்கை தற்போதைக்கு எதிர்கொண்டுள்ள நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்கப்பட வேண்டுமாயின் தற்போதைய அரசாங்கத்தை மாற்ற வேண்டும்.
அரசாங்கத்தை மாற்றாமல் எந்தவித நடவடிக்கையும் பயனளிக்காது என்றும் மைத்திரிபால சிரிசேன தொடர்ந்தும் தெரிவித்துள்ளார். TW
Post a Comment