பொதுஜன பெரமுன குழு கூட்டத்தில் நடைபெற்றது என்ன..?
ஜனாதிபதி தலைமையில் நேற்று பிற்பகல் கூடிய சிறிலங்கா பொதுஜன பெரமுன குழு கூட்டத்தில் 21வது திருத்தம் தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தெரியவருகிறது.
இந்த கலந்துரையாடலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்து கொண்டதுடன், இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் ஆற்றவுள்ள பொருளாதார உரை குறித்தும் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த உரையை ஆற்றுவதற்கு எதிர்க்கட்சியினரிடமிருந்து இடையூறுகள் இருக்கலாம் என சுட்டிக்காட்டியுள்ள பிரதமர், அந்த தடைகளை முறியடிக்குமாறும் கூச்சலிட வேண்டாம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்படி, 21வது திருத்தச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ எந்தவொரு அறிக்கையையும் வெளியிடவில்லை. பின்னர் கூட்டத்தில் இருந்து பிரதமர் வெளியேறியதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஆளும் கட்சி கூட்டம் - ரணிலும் பங்கேற்பு
அதனையடுத்து, 21வது திருத்தச் சட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, அதற்கான வரைவு தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதனை பிற்போடுவதாக பிரதமர் தெரிவித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த டலஸ் அழகப்பெரும, மக்களுக்கு வாக்குறுதியளித்தவாறு 21வது திருத்தச் சட்டத்தை முன்வைக்க வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு ஆட்சேபனை தெரிவித்த சரத வீரசேகர, சிறிலங்கா பொதுஜன பெரமுன அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வருவதற்கு அல்ல முழுமையான அரசியலமைப்பை கொண்டு வரவே ஆணையை கோரியதாக கூறியுள்ளார்.
அதனை ரொமேஷ் டி சில்வா தயாரித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், உடன்பாடு ஏதுமின்றி கூட்டம் முடிவடைந்ததாக தெரியவருகிறது.
Post a Comment