Header Ads



யார் இந்த, தம்மிக்க பெரேரா..?


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியலில் எம்.பியாகி அமைச்சராகவுள்ள தம்மிக்க பெரேரா , ஏராளமான வணிக நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர்... அந்த அனைத்து நிறுவனங்களின் கணக்கு விபரம் ,இலாப நட்டம் என்பனவற்றை உடனடியாகவே சொல்லிவிடக்கூடியளவு தகவல்களை விரல்நுனியில் வைத்திருப்பவர்... கணிதத்தில் அசாத்திய திறமை கொண்டவர்..

நேற்றைய நாளின் அமெரிக்க பங்குச் சந்தை நிலைவரம் என்ன ? , ரஷ்யா உக்ரைனில் நடத்தும் தாக்குதலால் இறுதியாக நடந்த பொருளாதார அனர்த்தம்  என்ன ? இலங்கையின் எந்த ஏற்றுமதி பின்னடைவில் உள்ளது ?என்று கேட்டால் தரவுகளுடன் விபரம் கொடுக்கக் கூடிய ஒருவர்.. அந்த தரவுகளை அவருக்கு பெற்றுக்கொடுக்க ஆட்கள் இருந்தாலும் அவற்றை நினைவில் வைத்திருப்பது ஒருவித திறமை... 

 ஒருகாலத்தில் வியாபாரத்தில் பேரிழப்பை சந்தித்து ,மீண்டும் எழுவோமா என்று இருந்த ஒரு நேரத்தில் தன்னம்பிக்கையுடன் போராடி முன்னேறி வந்த ஒருவர்... 

சோம்பேறிகள் , முயற்சி இல்லாதவர்கள் , நெகட்டிவ்வாக பேசுவோரை பக்கத்தில் வைக்காதீர்கள் என்பது தம்மிக்க நண்பர்களுக்கு கூறும் அறிவுரை.. அவரைப்பற்றி இப்படி  நிறைய தகவல்களை சொல்லலாம்...

தம்மிக்கவுக்கு இப்போதுதான் நாட்டின் பொருளாதார சீரழிவு தெரிகிறதா ? முன்னரே வந்து உதவியிருக்கலாமே ? என்று நீங்கள் கேட்கலாம்.மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இப்படி உதவ முன்வந்தபோது அவரை வெறும் அமைச்சுச் செயலாளராக நியமித்தனர். போக்குவரத்து அமைச்சில் இருந்து  பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியுமா என்ற கையறு நிலை அவருக்கு ஏற்பட்டது.  

இப்போது  வந்திருக்கிறார்...  இது தம்மிக்கவின் இரண்டாம் பிரவேசம்... தோல்வியடைந்த ஜனாதிபதியாக செல்லமாட்டேன் என்று கூறிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வேண்டுகோளின் பேரில் உள்ளே வந்துள்ளார் தம்மிக்க... இப்படி இன்னும் சிலரும் வரவுள்ளனர்..

தம்மிக்கவால் ஒரே இரவில் அதிசயம் செய்துவிடமுடியாது... ஆனால்   காலப்போக்கில் சில விசித்திரங்களை செய்யமுடியும்... 'எனது மாணவர்கள் மட்டும் வாக்களித்தாலே நான் கொழும்பு மாவட்டத்தில் வெற்றியீட்டிவிடுவேன்' என்று தேர்தல் காலத்தில் சொல்லும் பந்துல குணவர்தன போன்று ,'எனது பணியாளர்களின் ஒத்துழைப்பு இருந்தாலே பல முக்கிய இலக்குகளை அடைவேன்' என்று தம்மிக்க கூறக்கூடும்..அந்தளவு பணியாளர் பலம் இருக்கிறது...

நாட்டுக்கு டொலர் கொண்டுவரவேண்டும்... முதலீடுகளை உள்வாங்க வேண்டும்...அதற்காக ஓல் அவுட்டாக தனியார்மயப்படுத்தலை செய்வார் தம்மிக்க.. பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இலங்கை இதற்கு மறுத்துப் பேச முடியாது. தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராகவுள்ள அவரின் கீழ் .முதலீட்டு சபை வரப்போகிறது..  அதன் கீழ், தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRC),     டெலிகொம், ஆட்  பதிவுத்   திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு - போர்ட்சிட்டி , தரப்படுத்தல்  நிறுவனம், இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA) , மற்றும் தாமரை கோபுரம் என்பன வருகின்றன. இவையெல்லாவறையும் தனியார்மயப்படுத்தினால் இலங்கைக்குத் தேவையான டொலர்கள் கிடைத்துவிடும்.ஏன் கூடுதலாகக் கூட வந்துவிடலாம்.. 

நாடு இன்றுள்ள நிலையில் பொருளாதார பிரச்சினைகளை தம்மிக்க தீர்ப்பாரானால் அவர் தொடர்ந்து அரசியலில் இருக்கும்படி  மக்களே கேட்கும் நிலைமை வரும்...வெறும் வாக்குறுதிகளை வழங்கும் அரசியல்வாதி அல்ல என்பதனால் சொன்னதை செய்ய முயலுவார்.. தம்மிக்க வரி கட்டவில்லை , வருமானத்தை காட்டவில்லை என்று விமர்சனங்கள் உள்ளன..கணக்கில் பிடிபடாமல் பில்லியன் கணக்கில் கொள்ளையடித்த  அரசியல்வாதிகள்  இருக்கும் நாட்டில் வர்த்தகர் ஒருவர் வரி கட்டவில்லையென்பது பெரும் குற்றச்சாட்டல்ல.. ( வரி கட்டவில்லை என்ற குற்றச்சாட்டை தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் ஆதாரங்களுடன் மறுதலித்திருந்தார் தம்மிக்க )..

வர்த்தகர் ஒருவர் வரியை  கட்டாமல் இருக்கக்கூட அரசியல்வாதி ஒருவன் இலஞ்சம் வாங்கியிருப்பான்... அதுதான் நிலைமை..

ஊடக வாழ்வினூடாக , கடந்த இரண்டரை தசாப்தங்களாக இலங்கையின் நிலவரத்தை நேரடியாக பார்த்து , இந்த அரசியல்வாதிகளுடன் இருக்கும் நட்பு என்பவற்றைக் கொண்டு நான் கூறும் எதிர்வுகூறல்..'' தம்மிக்கவால் முடியும்'' என்பதுதான்...

'வந்தேன் பார்த்தேன் முயன்றேன் செய்யமுடியவில்லை போகிறேன்' என்று சொல்லும் ஒருவருக்கும் , வருவது வரட்டும் பார்க்கிறேன், வெல்லாமல் வெளியேறமாட்டேன் என்று கூறி வரும் ஒருவருக்கும் இருக்கும் வித்தியாசங்களை உணரவேண்டும்...

தம்மிக்க இந்த பொருளாதார சமரை வென்றால் , அடுத்து அரசியலில் அவருக்கு வானமே எல்லை...

அவரால் முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்..

மூன்றிலிரண்டு பெரும்பான்மை மக்கள் பலம் கொண்டு வந்த ஆட்சியாளர்கள்  நாட்டை நாசமாக்கியபின்னர் , அந்த நாட்டை தேசியப்பட்டியலில் வந்த தம்மிக்கவும் ,ரணிலும் தான் மீட்பார்கள் என்று விதி இருக்குமாயின் யாரால் என்ன செய்ய முடியும் ?

குட்லக் தம்மிக்க !


Siva Ramasamy


No comments

Powered by Blogger.