Header Ads



பால்மாவின் விலையேற்றமும், தாய்மார்களின் பீதியும்

 
- Dr. ரிஸ்மியா ரபீக் -


இலங்கையில் அடிப்படை பொருட்களின் விலை மிக உக்கிரமாக அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. அரிசி, கோதுமை மா, சீனி, பருப்பு, மரக்கறி மற்றும் ஏனைய அடிப்படை பொருட்களின் விலையேற்றத்தை விட பால்மாவின் விலையேற்றம் அநேகமான தாய்மார்களின் உள்ளத்தில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.


உண்மையில் பால் மா தட்டுப்பாடும் விலையேற்றமும் ஒரு பிரச்சினைக்குரிய விடயமா? அதனை நாம் எவ்வாறு அணுக வேண்டும் என்பது பற்றிய தெளிவினை ஏற்படுத்துவதே இப்பதிவின்‌ நோக்கமாகும்.


விஞ்ஞான ரீதியாக அல்லது மருத்துவ ரீதியாத ஆய்வுகளின் அடிப்படையில் கூறுவதாயின் தற்போது சந்தையில் கிடைக்கும் முழு ஆடைப் பால் மா என்பது ஒரு அடிப்படைத் தேவையுமல்ல, ஆடம்பரப் பொருளுமல்ல. அது ஒரு அநாவசியப் பொருளாகும்.


மற்றொரு வகையில் கூறுவதென்றால்   போசாக்கு என்ற பெயரில்  மக்கள் மயப்படுத்தப்பட்ட அல்லது போதை போன்று பழக்கப்படுத்தப்பட்ட வியாபார மாபியாவாகும்.  


அதனால்தான் பால் மா குடிப்பதற்கு பழக்கப்பட்டவர்கள் குழந்தைகளாயினும் வயது வந்தவர்களாயினும் அதை குடிப்பதை நிறுத்துவது என்பது கடினமான காரியமாக மாறியிருக்கிறது.



உதாரணமாக, சிலருக்கு வழமையாக தேநீர் குடிக்கும் நேரத்திற்கு, தேனீர் குடிக்காமல் விடும் போது அல்லது தாமதமடையும் போது தலைவலி, உடல் நடுக்கம் போன்ற பெளதீக குணங்குறிகள் வெளிக்காட்டப்படுகின்றன.


இது எமது உடம்பு தேநீரிலுள்ள இரசாயனப் பதார்த்தங்களுக்கு அடிமைப்படுத்தப்பட்டுள்ளமையின் வெளிப்பாடாகும்.


அவ்வாறுதான் இன்று விற்பனைச் சந்தையில் பல்வேறு பெயர்களில் பால் மாக்கள் விற்கப்படுகின்றன.


 சந்தையிலுள்ள அதியுயர் விலையில் விற்பனை செய்யும் பால்மாக்களால் தயாரிக்கப்பட்ட பாலைக் கொடுத்து பிள்ளைகளை வளர்க்கும் அநேகமான பெற்றோர்கள் தனக்கு எந்த பொருளாதார நெருக்கடி, கஷ்டங்கள் இருப்பினும், பிள்ளைகளின் வளர்ச்சிக்கும், மூளை விருத்திக்குமுரிய பால் மா வை கொடுத்து வளர்க்கிறோம் என்ற சுய திருப்தியில் வாழும் தியாக சிந்தையுடன் வாழ்கின்றனர்.


நாம் ஏன் தேநீர் குடிக்குறோம்?  தேநீரினால்  எமது உடலுக்கு கிடைக்கும் சாதக பாதக விளைவுகள் என்ன என்பதை சிந்தித்து பார்த்ததுண்டா?

 அநேகமானவர்களிடத்தில் காலையில் எழுந்தவுடன், மாலையிலும், தேநீர் குடிக்கும் வழக்கும் காணப்படுகின்றது. தேநீரிலுள்ள இரசாயன பதார்த்தங்களால் எமது உடலுக்கு உற்சாகமும், உந்துதலும் கிடைக்கிறது.  அத்துடன் அவற்றின் சுவை சுவாரசியமானது. இது தவிர வேறு எந்த போசணைப்பெறுமானங்களைக் கருதியும் தேநீர் குடிக்கும் படுவதில்லை.


 ஆனால், அடிக்கடி தேநீர் குடித்தல், அதிகளவு சீனி சேர்த்து தேநீர் குடித்தல், பிரதான சாப்பாட்டு வேலைக்கு முன், பின் இரண்டு மணித்தியாலங்களுக்குள் தேநீர் குடித்தல் என்பன உடலுக்கு பல பாதக விளைவுகளை ஏற்படுத்துகின்றன.


நாம் எவ்வாறு தேநீருக்கு அடிமைப்பட்டிருக்கின்றோமே அவ்வாறே குழந்தை பிறந்து சில மாதங்களிலேயே செயற்கை பால் மா உடலுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. இரண்டு வயது வரை தனிப்பாலாக கொடுத்து விட்டு பிறகு தேநீராக குடிக்க பழக்கப்படுத்தப்படுகின்றது. இவ்வாறே எமது உடம்பு செயற்க்கை பால் மாக்களுக்கும், தேநீருக்கும் அறிமுகப்படுத்தப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்டு வருகின்றது.


நாவுக்கு ருசியான ஒரு பொருள் மலிவாக கிடைக்கும் போது, அவற்றை சுவைத்துப் பார்ப்பதில் தவறில்லை.


 ஆனால் சுமார் நானூறு ரூபாவுக்கு வாங்க வேண்டிய பால் மாவை ஆயிரம் ரூபா கொடுத்து வாங்குவதற்கும் ஏன் இத்தனை வரிசைகள், இத்தனை பதுக்கல் வியாபாரங்கள்?


தாய்மார்களே! உங்கள் குழந்தைகளுக்கு குழந்தை பிறந்தது முதல் 2 வயது வரை கட்டாயமாக தாய்ப்பால் கொடுங்கள். ஆறு மாதம் வரை தனித்தாய்ப்பாலை மட்டும் கொடுத்துவிட்டு, ஆறு மாதத்திலிருந்து இதர ஆகாரங்களுடன் தாய்பாலை மாத்திரமே கொடுக்க முயற்சியுங்கள்.


 எத்தனை ரூபாய் விலை கொடுத்து அதியுயர் தர பால் மாவை வாங்கிய போதிலும் அவை எதுவும் தாய்ப்பாலுக்கு நிகராக மாட்டாது.


உங்களின் பிள்ளைகளின் மூளை வளர்ச்சி விருத்திக்கும், குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் தாய்ப்பாலுடன் போட்டிபோட எதுவும் இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.


 உங்களுக்கு சுரக்கின்ற தாய்ப்பாலின் அளவு குழந்தையின் தேவைக்கு போதுமானதாக இல்லையெனின் முதல் தெரிவாக செயற்கை பால் மாக்களை தேடிச் செல்லாமல் தாய்ப்பால் சுரப்பை அதிகரிப்பதற்கான உத்திகளை கையாளுங்கள்.


தாய்ப்பால் சுரப்பு குறைவாக உள்ளவர்கள் பின்வரும் உத்திகளை கையாளுதல் சாலச் சிறந்தது.


1) தாய்ப்பாலுட்டுவதற்கு முன்        ஒவ்வொரு தடவையும் சுடுநீரினால் மார்புகளை ஒத்தனம் கொடுத்தல்.


2) தாய்ப்பாலூட்டலுக்கு முன்பு நன்கு, சுடுநீரை அருந்துதல்.


3) தாய்ப்பாலூட்டும் காலத்தில் அதிகளவு போசணையுள்ள ஆகாரங்களை உற்கொளுதல்.


4) புரத உணவுகள், மரக்கறி, பச்சைக் இலைக்கறிகள், தானியங்கள், விதை வகைகள் (நிலக்கடலை, பாதாம், பிஸ்தா, மர முந்திரிகை) என்பவற்றை போதுமாக உட்கொள்ளுதல் தேவையான அளவு பாலை சுரக்கச் செய்யும்.


5) போதுமான அளவு நீர் அருந்துதல்.


6) உள ஆரோக்கியத்தை பேணிக் கொள்ளல்.


7) அதிகளவு கொழுப்பு, பாரமான உணவுகளை தவிர்த்து கொள்ளல்.  


8) பலாக்காய், பொலசிக்காய், ஈரப்பலா, சாதாவாரி, மொடக்கத்தான், இஞ்சி, வெள்ளைப் பூடு, பச்சைப் பப்பாசி, எள்ளு,  பார்லி, பருப்பு என்பவற்றை உட்கொள்ளுதல் என்பன தாய்ப்பாலூட்டலைத் தூண்டக்கூடியவை.


9) அதிகளவு பழங்களை

உட்கொள்ளுதல்


 பிள்ளைகளுக்கு இரண்டு வயது பூர்த்தியடைந்த பின்பு பால் தேவைக்காக பசும்பாலை பெற்றுக்கொடுப்பதில் கவனத்தை செலுத்துங்கள்.


 பசும்பாலை சூடாக்கும் போது சுக்கு, இஞ்சி, மிளகு இவற்றுள் ஏதாவதொன்றை சிறியளவில் சேர்த்து சூடாக்கினால், சளிப் பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்த்துக் கொள்ளலாம்.


 ஒவ்வொரு பிள்ளையும் அறிவுடையவர்களாகவும் ஆரோக்கியமானவர்களாகவும் வாழ வேண்டும் என்பதே ஒவ்வொரு பெற்றோரினதும் கனவாகும். இதற்கான பிரதான வழியாக பிள்ளைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும், மூளை விருத்தியையும் தூண்டக்கூடிய உணவு வகைகளை அறிமுகப்படுத்துங்கள்.


இதற்காக காலை உணவாக இலைக்கஞ்சி மற்றும் ஏனைய கஞ்சி ( குரக்கன், உளுந்து, ரவ, சவ்வரிசி) வகைகளை அறிமுகப்படுத்துங்கள்.


 வல்லாரை, முருங்கை,  மொடக்கத்தான், சாதாவாரி, திராயி, முள்முருங்கை என்பவற்றின் சாறுகளை இலைக்கஞ்சிக்காக உபயோகித்தல் மிகவும் சிறந்தது.


அதிக விலை கொடுத்து  பால் மாக்களை வாங்கி நம் பணத்தை பிரயோசனமற்றதாக்குவதை விட, அப்பணத்தினால் பிள்ளைகளுக்கு பழங்களை வாங்கி கொடுத்தல் மிகவும் புத்திசாலித்தனமானது.


 பால் மா வின் விலையேற்றத்தை சங்கடமாக நினைத்து துன்பப் படுவதை விட சாதகமாக நினைத்து எம்மிலுள்ள ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய பழக்கத்திலிருந்து நிரந்தரமாக விடுபட முயற்சித்து, நம் செலவை சிக்கனப்படுத்துவோம். சிந்தித்து செயல்படுவோம்.


No comments

Powered by Blogger.