Header Ads



புதிய எதிர்க்கட்சி அல்லது புதிய அரசாங்கமொன்று விரைவில் உருவாகும் - சஜித்தும் இணைய முடியும்


இலங்கை அரசியலில் புதிய எதிர்க்கட்சி அல்லது புதிய அரசாங்கமொன்று விரைவில் உருவாகும் என சம்பிக்க ரணவக்க எதிர்வு கூறியுள்ளார்.

பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் 43ம் படையணி முக்கியஸ்தர்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று திங்கட்கிழமை மாலை தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெற்றிருந்தது.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், நாட்டின் இளைஞர் தலைமுறையினர் எதிர்பார்க்கும் அரசியல் பண்பாடு, கலாச்சாரத்தில் மாற்றமொன்றை ஏற்படுத்த 43ம் படையணி அர்ப்பணிப்புடன் செயற்படும்.

இலங்கை அரசியலில் புதிய எதிர்க்கட்சி அல்லது புதிய அரசாங்கமொன்று மட்டுமன்றி புதிய கட்சியொன்றும் விரைவில் உருவாகும். நாட்டுக்கு புதிய மறுமலர்ச்சியொன்று மட்டுமன்றி புதிய அரசியல் சக்தியொன்றும் தேவையாகவுள்ளது.

அதற்காக கட்டாயம் தயாராக இருக்க ​வேண்டும். சம்பிரதாய அரசியலை உதறித்தள்ளி முன்செல்ல முயற்சிக்கும் இளைஞர் பரம்பரைக்கான வழிப்பாதையாக அது அமைய வேண்டும்.

அதற்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம். நாடாளுமன்றத்தில் இருப்பவர்கள் எல்லோரும் திருடர்கள் அல்ல. ஆளுங்கட்சியிலும் அனுபவம் வாய்ந்த சிறந்த அரசியல்வாதிகள் இருக்கின்றனர்.

நாட்டின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப அவர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும். டளஸ் அலஹப்பெரும தலைமையில் ஒரு கூட்டணி தேர்தல் ஆணைக்குழுவை சந்தித்திருப்பது மிகச் சிறந்த அடையாளமாகும்.

ஒரு தனிக்குடும்பத்தின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு சுயாதீனமாக சிந்திக்கும் குழுவொன்று அவர்களுக்குள் இருந்து உருவாகுவது ஜனநாயகத்தின் சிறந்த அடித்தளமொன்றை உருவாக்கும்.

டளஸ் மட்டுமன்றி சஜித் பிரேமதாச போன்றோரையும் இணைத்துக் கொண்டு புதிய அரசியல் கூட்டணியொன்று உருவாக்கப்பட வேண்டும். புதிய வழிமுறையிலான அரசியல் செயற்பாடுகள் மூலம் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்.

எனக்கும் உதய கம்மன்பிலவுக்கும் இடையில் தனிப்பட்ட பகைமை எதுவும் கிடையாது. அவரும் எங்களுடன் இணைந்து கொள்ளலாம். அது மாத்திரமன்றி சுயாதீனக் கட்சிகளின் கூட்டணியும் எங்களோடு இணைந்து கொள்ள முடியும்.

தற்போதைக்கு உள்ள அரசாங்கம் தொடர்பில் திருப்தியுற முடியாது. எனவே பொதுமக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையிலான அரசாங்கமொன்றை உருவாக்க நாங்கள் முயற்சிகளை மேற்கொள்வோம் என குறிப்பிட்டுள்ளார். 

1 comment:

  1. இவன் ஒரு மிகப்பெரிய இனவாதி... ஒரு திருப்புமுனையை ஏற்படுத்த முயலுகிறார்...

    ReplyDelete

Powered by Blogger.