ஈஸ்டர் தாக்குதலுக்கு மைத்திரி, ரணில் உள்ளிட்டவர்களுடன் அதிகாரிகளே காரணம்
முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர், முன்னாள் அரச புலனாய்வுப் பணிப்பாளர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர், முன்னாள் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளின் கவனக்குறைவு மற்றும் பொறுப்பற்ற தன்மையினாலே பல அப்பாவிகளின் உயிர்களைப் பலிகொண்ட ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
ஒருவருக்கொருவர்தொலைபேசி அழைப்புகளை பரிமாறிக் கொள்வதைத் தவிர அவர்களில் எவரும் தமது கடமைகளைச் சரியாகச் செய்யத் தவறியதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தாக்குதல் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்த போதிலும் ஈஸ்டர் தாக்குதலைத் தடுக்க முன்னாள் பொலிஸ் மா அதிபர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அதிகாரிகள் தவறியதால் தமது அடிப்படை உரிமை மீறப்படுவதாக அறிவிக்கக் கோரி 12 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நேற்று ஆராயப்பட்டது. கர்தினால் மெல்கம் ரஞ்சித் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சமில் பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார். பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான நீதிபதிகள் குழாம் முன்னிலையில் வழக்கு விசாரணை இடம்பெற்றது.
முக்கியமான கத்தோலிக்க தேவாலயங்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருப்பதாக ராஜதந்திர மட்டத்தில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் நிலாந்த ஜயவர்தன ஒப்புக்கொண்டுள்ளார். அதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தாக்குதல் நடத்தப்படுவதாக கடந்த ஏப்ரல் 4ஆம் திகதி வலுவான தகவல் கிடைத்த போதிலும், அதனைத் தடுக்கவோ அல்லது உரிய நடவடிக்கை எடுக்கவோ அரச புலனாய்வுப் பிரிவில் தவறிவிட்டதாக ஜனாதிபதி சட்டத்தரணி குறிப்பிட்டார்.
Post a Comment